Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை சுவடுகள் 19 | பிளவு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 19 | பிளவு | டாக்டர் ரி. கோபிசங்கர்

7 minutes read

“ மனோகரா தியட்டரடியில குண்டு வெடிச்சு பெரிய சண்டையாம் கனபேர் செத்திட்டாங்களாம் ,அதால நாங்கள் ஓடி வந்திட்டம் நாவலர் பள்ளிக்கூடத்தில இருந்து”, எண்டு கொஞ்சச் சனம் உள்ள பூந்திச்சிது. அவங்கள் சொன்ன list ல யாழ் இந்துக்கல்லூரியும் இருந்ததால நாங்கள் கொஞ்சம் வேளைக்கே போய் அங்க settle ஆகீட்டம். பக்கத்து வீட்டு யோசப் மாஸ்டரின்டை புண்ணியத்தில மரவேலை வகுப்பை எங்கடை area ஆக்கள் ஆக்கிரமிச்சம்.

வாங்குக்கு மேல வாங்கை கவிட்டு அடுக்கி shell பட்டாலும் பாதுகாப்பா பங்கர் போல மாத்தி, அதுக்கு மேல உடுப்பு bag எல்லாம் வைச்சிட்டு கீழ ரெண்டு வாங்கு இடைவெளியில ஒரு குடும்பம் எண்டு ஐக்கியமானம். வீட்டை இருந்து கொண்டு வந்த சாப்பாடு ஒரு இரவில முடிய யாழ் இந்து hostel சமையலறை தான் எல்லாருக்கும் சாப்பாடு போட்டது . பள்ளிக்கூட hostel பெடியளுக்கு சமைக்க வைச்சிருந்ததும் ஒரு நாளைக்குத்தான் காணும் என்ன செய்யலாம் எண்டு கேள்விக்கு விடை தேடினம்.

யாழ்ப்பாணம் எண்டால் நூறடிக்கு ஒரு சந்தி, சந்திக்கு சந்தி நாலு கடை. மூடீட்டுப் போன இந்தக்கடையை உரிமையோட உடைச்சு மூட்டையைக் கொண்டு வர, எங்களோட இருந்த தாமோதர விலாஸ் சமையல்காரர் கரண்டி தூக்க முதலாவது அகதி முகாம் சாப்பாடு தாமோதர விலாஸ் மசாலைத் தோசை மணத்தோட உள்ள போச்சுது. காலமை சுடுதண்ணி மட்டும் குடுக்கிறது அவரவர் கொண்டு போய் தேத்தண்ணி போட, மத்தியானம் தழுசை, பின்னேரம் ரொட்டி எண்டு ரெண்டு நாள் சாப்பாடு கிடைச்சிது. சோத்துக்குள்ள நாலு பருப்பு உப்பு புளி இருந்தால் ஒரு மரக்கறி எல்லாம் சேத்து அவிச்சு சிரட்டையில வடிவா அடிச்சு வாறது தான் தழுசை. ஆக்களுக்கு குடுக்கிற அந்த அளவுச் சாப்பாடு கொண்டு வரேக்க ஆள் இருந்தாத் தான் கிடைக்கும் சாப்பாடு அங்கால இங்கால போனால் அதுகும் இல்லை. சாப்பாட்டை சமாளிச்சு ஆத்திரம் அவசரம் வரேக்க அக்கம் பக்கம் மதில் பாஞ்சு போய் வந்து கொண்டும் இருந்தம்.

காலமை எட்டு மணி இருக்கும் குண்டு வெடிக்கிற சத்தம் கூடக் கேக்கத் தொடங்கிச்சுது. பள்ளிக்கூடத்தின் ரோட்டிக்கு அங்கால குமாரசாமி hall பக்கமும் நிரம்பி இங்காலேம் நிரம்பீட்டுது. சனம் கூடீட்டிது. இனி ஆரும் வந்தாக் கஸ்டம் அதோட எண்டு கேற்றை சிலர் மூடி இருக்கேக்க தான் இந்த புது வரவுக்குடும்பம் நாவலர் ரோட் கதையை வந்து எடுத்து விட்டிச்சிது . வந்த சனத்திக்கு கேற்றைத் துறக்காம இங்க இடமில்லை எண்டு ஆரோ சொல்ல, பொங்கி எழுந்த பிள்ளையார் ராசா அண்ணா நிர்வாகத்தோட சண்டைபிடிச்சு அவையை உள்ள விட்டார். வந்தவை சொல்லிச்சினம் நாவலர் பள்ளிக்கூடத்திலேம் சனம் நிறைய இருந்தது , குண்டு வெடிச்சாப் பிறகு துவக்குச் சூடும் கேட்டது அதுகும் பள்ளிக்கூடத்திக்குள்ள இருந்து தான் கேட்டது எண்டு, இன்னொரு பெரிய ஒரு குண்டைப் போட்டிச்சினம் .

கேட்ட இந்த விடுப்பை உடனடியா கொஞ்சம் உப்பு உறைப்பு சேத்து எல்லாரையும் பயப்பிடித்திட்டு மத்தியானக் குழைசாதத்தை விழுங்கீட்டு திருப்பி வந்து hostel சாப்பாட்டு அறைக்க cards விளையாடத் தொடங்கினம் . ஐஞ்சு மணியாகுது எழும்புவம் எண்டு cards விளையாடின வாங்கில எழும்பி நிண்டு ground பக்கம் பாக்க கஸ்தூரியார் றோட் மதிலால பச்சைத் தொப்பிகள் பாயிறது தெரிய, வந்திட்டாங்கள் எண்டு சொல்லிக்கொண்டு எல்லாரும் ஓடிப்போனம். வந்தவங்கள் உள்ளுக்க வரேல்லை பள்ளிக்கூட நிர்வாகக் கட்டிடத்தில் இருந்த பெரிய ஆக்களோட ஏதோ கதைச்சவையாம், அவங்கள் சொல்லும் வரை ஒருத்தரையும் வெளீல திரியவேண்டாமாம் எண்டு சொல்ல எல்லோரும் போய் அவையவை பிடிச்சிருந்த இடங்களில ஐக்கியமானோம். பள்ளிக்கூடத்திக்கு பின்பக்கமாய் வந்தவங்கள் நேர போய் K K S றோட்டில சிவாஸ் ஸ்ரோர்ஸ் கடையத்தாண்டி இருப்பினம் எண்டு நெக்கிறன் திருப்பியும் சுடுபாடு தொடங்கிச்சிது. சத்தம் உச்சம் தொட செல்லடியும் தொடங்கிச்சிது. கொஞ்ச நேரத்தால திருப்பியும் உள்ள வந்தவங்கள் முன்னுக்கு நிண்டு சனங்களுக்கு வேலை செய்து கொண்டிருந்த பெரிய பெடியளை கூட்டிக் கொண்டு போனாங்கள், என்னத்துக்கு எண்டு கேக்கப்போனா காயப்பட்ட ஆக்களைத் தூக்கவாம் எண்டு பதில் வந்திச்சது. திருப்பியும் இரவிரவா அடிபாடு நடந்தது. அடிச்சதில சிலதுகள் பள்ளிக்கூடத்துக்குள்ளையும் விழுந்து ரெண்டு பேர் செத்தது காலமை தான் தெரிஞ்சிது. சத்தமே இல்லாமல் அடுத்த நாள் காலமை வந்திச்சுது. இரவிரவா மூச்சையே அடக்கி இருந்த எங்களுக்கு ஒண்டையும் ரெண்டையும் அடக்கிறது கஸ்டமாத் தெரியேல்லை. எண்டாலும் சத்திய சோதனையாக பெஞ்ச மழை எங்கடை பொறுமையை சோதிக்கத் தொடங்கிச்சுது. சத்தியிமா பொம்பிளைகள் எல்லாம் என்ன செய்தவை எண்டு ஞாபகம் இல்லை. Hostel குசினீப் பக்கம் இருந்த மதிலை அந்த வீட்டுக்கார சனமே உடைச்சு ஆக்களை வீட்டை விட்டதாக ஞாபகம் . சீனீ போட்ட Maliban nice, lemon puff பிஸ்கட்டும் பிளேன் ரீயும் மூண்டு நேர உணவாகியது.

மூண்டாம் நாள் கழிய விடிய கொஞ்சம் பெரிய தலைகள் வந்து பெருந்தலைகளோட கதைச்சனம். சாப்பாடு குடுக்க வைச்சிருந்த பதிவுகளை எல்லாம் பாத்திட்டு பத்து வயதுக்கு மேற்பட்ட எல்லா ஆம்பிளைகளையும் ground க்கு வரச் சொன்னாங்கள் . அதோட குறிப்பிட்ட எல்லைக்குள்ள இருக்கிற வீட்டுக்கு பொம்பிளைகளை மட்டும் போய் வரலாம் எண்டு சொன்னதை பல அம்மாமார் சந்தேகத்தோட மறுத்திட்டு நிக்க, சில அம்மம்மா மார் மட்டும் சேந்து பக்கத்து வீட்டை போய் ஏதோ சமைச்சுக்கொண்டு வர அவசரமா வெளிக்கிட்டிச்சினம். ஆம்பிளைகளை மட்டும் வரச் சொல்லி Ground அரசமரத்தடியில போய் நிண்டா கால் வரை வெள்ளம். இந்துக்கல்லூரி march past parade மாதிரி எங்களை கிரவுண்டைச்சுத்தி வரச்சொல்லிச்சனம் .

ஏதோ fashion walk மாதிரி இடைவெளி விட்டு ஒவ்வொருத்தரா நடக்கப் பண்ணி, வடக்குப் பக்கம் eyes right க்குப் பதிலா ஐஞ்சு நிமிசம் ஒரு ஓட்டை போட்ட sentry point க்கு முன்னால நிப்பாட்ட தலைஆடினால் உள்ள இல்லாட்டி வெளிய எண்ட விளையாட்டிலயும் தப்பி திருப்பி camp க்கு வர, வராத பிள்ளைகளின்டை அம்மா மார் அழத்தொடங்க வந்த தன்டை பிள்ளைக்கு அம்மாமார் சாப்பாட்டை தீத்தத்தொடங்கச்சினம். ஒண்டாப்போய் ஒவ்வொருவராய் திரும்பி வந்தது, அடுத்தவர்களின் உணர்ச்சியைப் பாக்காம நான் மட்டும் தப்பினது survival of the fittest எண்டு கூர்ப்பின் தத்துவம் பிழையாக விளங்கப்பட்டதும் இந்த நாளில் தான். இது தான் எங்கள் வாழக்கையில சமூகம் தாண்டி தனிமனிதனாக வாழக்கையில் தப்பினால் சரி எண்டு சமூகம் பிளவுபடத்தொடங்கின நாள்.

Dr.T. கோபிசங்கர்
யாழப்பாணம்

சுவடுகள் இதுவரை வெளியான தொடர்கள்

சுவடுகள் 01 | இது ஒரு சுளகு மான்மியம் | டாக்கடர் ரி கோபிசங்கர்

சுவடுகள் 02 | புட்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 04 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 05 | ‘கள்ள மாங்காயின் சுவை தெரியுமா?’ | மா(ன்)மியம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 06 | ஒரு குமரை கரை சேக்கிறது | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 07 | போதி மரம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 09 | ஆயிரம் பொய் சொல்லி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 10 | கலியாணத்தண்டு மழை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 11 | கனவிலேம் நித்திரை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 12 | துடக்கில்லாத கற்கண்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 13 | கம்மாரிசு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 14 | ஹர்த்தால் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 15 | அன்னபூரணி | டாக்கடர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 16 | இதில் போனால் சங்கடம் (இ.போ.ச) | டாக்கடர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 17 | உயர்திணை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 18 | “அரிசிப் பொதியோடும் வந்தீரோ” | டாக்டர் ரி. கோபிசங்கர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More