சுவிட்சர்லாந்தில் போர்த்துகீசிய நபர் கொடூர கொலை பின்னணி என்ன ?

சுவிட்சர்லாந்தின் வாட் மண்டலத்தில் போர்த்துகீசிய நபர் கொடூரமாக தாக்கப்பட்டு மரணமடைந்த விவகாரத்தில், தாக்குதல்தாரியின் பின்னணி வெளியாகியுள்ளது.

வாட் மண்டலத்தின் Morges பகுதியில் 29 வயதான போர்த்துகீசிய நபர் சனிக்கிழமை மாலை கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

தற்போது இந்த வழக்கை விசாரணை எடுத்துள்ள மத்திய அரசு அதிகாரிகள், தாக்குதல்தாரி தொடர்பில் பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

போர்த்துகீசிய நபரை கத்தியால் தாக்கிய அந்த 26 வயது சுவிஸ் இளைஞர் தொடர்பில் பொலிசாருக்கு ஏற்கனவே தெரியும் எனவும், 2017 முதலே அவர் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும், அந்த இளைஞர் பல குற்றவியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். மட்டுமின்றி இவர் கிரேட்டர் லொசேன் பகுதியைச் சேர்ந்த நன்கு அறியப்பட்ட இஸ்லாமியவாதி எனவும், துருக்கிய பெற்றோருக்கு பிறந்த இவருக்கு சுவிஸ் கடவுச்சீட்டு இருப்பதும் பொலிசார் வெளிப்படுத்தியுள்ளனர்.

2019-ல் எரிபொருள் நிலையம் ஒன்றிற்கு நெருப்பு வைக்க முயன்று பொலிசாரிடம் சிக்கியுள்ளார். தொடர்ந்து இந்த செப்டம்பர் மாதமே பிணையில் வெளிவந்துள்ளார்.

இவருக்கு உளவியல் பாதிப்பு இருப்பதாகவும், நீதிமன்றம் சிகிச்சைக்கு உத்தரவிட்டும், இதுவரை அவர் சிகிச்சைக்கு செல்லவில்லை என்றே கூறப்படுகிறது.

சனிக்கிழமை இரவு Morges பகுதியில் இருந்து பொலிசாருக்கு குறித்த தாக்குதல் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்த பொலிசார் மற்றும் மருத்துவ உதவிக்குழுவினரால் அந்த நபரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

இதனிடையே சம்பவயிடத்தில் இருந்து தாக்குதல்தாரி தப்பியிருந்தாலும், துரித நடவடிக்கையால் ஞாயிறு பகல் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்