அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அமெரிக்காவின் பிரபல எழுத்தாளர் இ.ஜீன் கரோல், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வழக்கு விபரம்
இந்த விவகாரம் குறித்து, டொனால்டு டிரம்ப்புக்கு எதிராக கரோல், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை, பெடரல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த இ.ஜீன் கரோல் தெரிவித்துள்ளதாவது, “1990களின் நடுப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப்பைச் சந்தித்தேன். அப்போது பெண்களுக்கான உள்ளாடைகளைப் பரிசாக வாங்குவது குறித்து ட்ரம்ப் விளையாட்டாக என்னிடம் ஆலோசனைக் கேட்டார். அதையடுத்து, ஆடை மாற்றும் அறையில் என்னைத் தள்ளிவிட்டு, பாலியல் வன்கொடுமை செய்தார்.
“2019இல் நியூயார்க் இதழால் வெளியிடப்பட்ட எனது புத்தகத்தின் ஒரு பகுதியிலேயே இந்தக் குற்றச்சாட்டை கூறியுள்ளேன். அவரைப் பார்த்து பயந்துதான், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இது குறித்து வெளியே தெரிவிக்காமல் இருந்தேன்.
“ஆனால், இதை வெளியே கூறாமல் இருப்பதை நினைத்து வெட்கப்பட்டேன். அதற்காகதான் தற்போது உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறேன். அவர் என்னைப் பற்றி அவதூறு பரப்பினார். அதனால் எனக்கென ஒரு காதல் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், ட்ரம்ப் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஜோ டகோபினா, ட்ரம்ப் மீதான இந்த குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் கரோல் பணத்துக்காகவும், அரசியல் காரணங்களுக்காகவும், அந்தஸ்துக்காகவும் அரசியலமைப்பைத் தவறாகப் பயன்படுத்துகிறார் எனத் தெரிவித்துள்ளார்.
12 பாலியல் குற்றச்சாட்டுகள்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது இதுவரை சுமார் 12 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றனர்.
ஆனால், அவர் இந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.