Friday, May 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா கடைசி வரிகள் | சிறுகதை | கவிஜி

கடைசி வரிகள் | சிறுகதை | கவிஜி

3 minutes read

சிவப்பனுக்கு ஏமாற்றுவது கால் போன போக்கு. இந்த ஊருக்கு அவன் சிவப்பன். அடுத்த ஊருக்கு நீலன்.

இவன் தான் முதன் முதலில் கோழிக் குஞ்சுகளுக்கு கலர் பூசி வியாபாரம் பார்த்தவன். அபார மூளை எல்லாம் கிடையாது. ஆனால் அபகரிக்கும் மூளை அவனுக்கு. முப்பது கோழிக் குஞ்சுகளை வாங்கி, நீலம் பச்சை சிவப்பு மஞ்சள் ஊதா என இருக்கும் வண்ணங்களில் எல்லாம் வார்த்தெடுத்தான். வானவில் வழியே பிறந்த குஞ்சுகள் என்று அவன் கூறும் பொய்கள்… பொய்கள் என்று தெரிந்த பிறகும்.. திறந்து கிடக்கும் ஊர்கள் ரசித்தன. திண்ணையில் கிடக்கும் பல்லு போன பெருசுகள்… கோயில் திடலில் விளையாடும் பொடுசுகள் என்று சடுதியில் கூட்டம் கூடி விட்டது.

அவன் சொல்லிக் கொண்டே விற்றுக் கொண்டும் இருந்தான். வளர்ப்பது பிறகு, வாங்கி கையில் மலர்ப்பது தான் வாங்கிய கையின் விரல் விரிக்கும் சிரிப்பின் தீவிரம்.

கடைசியா சொன்ன பொய்… ரசிப்பது தாண்டி கண்கள் விரியச் செய்தன.

இதெல்லாம் கோழிக் குஞ்சுகள் தான். ஆனால் பத்து நாட்கள் கழித்து எல்லாமே வாத்துக் குஞ்சுகளாக மாறி விடும் என்றான். இந்தப் பொய்க்கு என்ன எதிர் வினை ஆற்றுவது என்று கோழிக் குஞ்சு வாங்கிய கைகள் காத்திருக்க… அவன் டாடா காட்டி வெறுங்கூடையோடு வெகு தூரம் சென்று விட்டான்.

ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் போல… கோழிக் குஞ்சு மூணு நாள் மகிமை. பத்து நாட்களுக்குப் பிறகு… யாவரும் கோழிக் குஞ்சுகளை மறந்திருந்த வேளையில்… மூணாவது வீட்டு செல்லம்மா ஓடோடி கோயில் திடல் வந்து மூச்சிரைக்க கண்கள் விரித்தாள்.

*

நீலன்… நீட்டமாகப் பேச மாட்டான். இந்த முறை பொம்மை.

பொம்மை விற்பனை.

கால் நீண்ட பொம்மை, போண்டா மூக்கு பொம்மை, முதுகில் சிரிக்கும் பொம்மை, மண்டை இல்லாத பொம்மை, காது சிமிட்டும் பொம்மை, மூன்று கண் பொம்மை என்று அத்தனை வடிவத்துக்கும் அவன் தான் காரணம். அவன் இரவில் அவனே ஒரு பொம்மை என்று வியாக்யானம் பேசி சிரிப்பான். அதன் தாக்கத்தில் அவனே உருவாக்கியது என்பான். பொய் தான். ஆனாலும் கேட்க நன்றாக இருக்கிறது தானே. சரி விஷயம் இதுதான். என்ன சொல்லியும் விற்காத பொம்மைகளை… சடசடவென விற்க அவனோடு பேசிய சோளக்காட்டு பொம்மை ஐடியா கொடுத்தது. செம ஐடியா என்பது போல காரியத்தை கையில், இல்லை இல்லை வாயில் எடுத்தான். சரி என்று பதறாமல் பொய் சொன்னான்.

மூணு நாள் இந்த பொம்மையை உங்க கட்டிலுக்கு கீழ வைத்தால்… நான்காம் நாள் அது பேசும் என்றான். காது விரிந்து அது வரை முணுமுணுவென்று முனங்கிக் கொண்டிருந்த கூட்டம் திக்கென நின்றது. கூட்டத்தில் பலருக்கு அய்யயோ எங்க வீட்டில் கட்டில் இல்லை என்பது தான் கவலையாக இருந்தது. கேட்டும் விட்டார்கள். கட்டில் இல்லையென்றால் கிச்சனில் ஒரு மூலையில் வைக்கலாம் என்றான். நிம்மதிப் பெருமூச்சு பொம்மை வாங்கிய அவனைவருக்கும்.

மூன்று நாட்கள் முடிந்து மீண்டும் மூன்று நாட்களும் முடிந்தது.

வக்காளி ஏமாத்திபுட்டானப்பா.. மறுக்கா எப்வாது வரட்டும். பொய் பேசின அந்த வாயை தச்சுபுடனும்.

பேசிக் கொண்டிருந்த கூட்டத்துக்கு நடுவே பேச்சிமுத்து வாய் கோணி ஓடி வந்து நடுநடுங்க சிரித்துக் கொண்டே எல்லாரையும் பார்த்தான்.


இது எந்த ஊர் என்று தெரியவில்லை. பிறகெப்போதும் வரக் கூடாது என்று முடிவு செய்த பிறகு ஊருக்கு பேர் எதற்கு. தனக்கும் கூட பேர் இல்லை இந்த முறை.

தன்னை சாமியார் என்று சொல்லிக் கொண்டான். லிங்கம் எடுப்பது… கங்கு தின்பது… நின்றபடியே நடப்பது… இங்கிருந்தபடியே எங்கும் இருப்பது… என்று அவன் சொல்லும் தோரணை கரகாட்டக்காரன் ராமராஜன் முக மொழியில் பார்க்கவே அத்தனை கலர்புல்லாக இருந்தது. வழக்கம் போல கூடி விட்ட கூட்டத்துக்கு ஏகப்பட்ட கோரிக்கைகள். வரிசையாக வந்தவர்களுக்கு ஆசி கொடுத்தான். வரம் கொடுத்தான். பத்தே நாள் ரிசல்ட் தெரியும் என்றான்.

பிரிந்தவர் கூடி விடுவார். மறைந்தவர் எழுந்து விடுவர். சண்டை சமாதானம் ஆகும். வீதி நாய்கள் குறையும். ஆலமரத்தில் அரச மரம் பூக்கும். கேரண்டி என்றான். கண்கள் சுற்றி வெள்ளி பூசி தேஜஸ் ஏற்றி இருந்தான். ரஜினி ஸ்டைலில் வந்த விபூதி அத்தனை பேரையும் மெய்மறக்கச் செய்தது. அங்கிருந்த ஒரு வாரமும் தினம் ஒரு வீட்டில் மணி அடிக்காவிட்டாலும் சோறு. மண்டை காயும் போதெல்லாம் இஞ்சி டீ.

மகத்தான மங்காத்தாவாக மார்கோனியின் புன்னகை பூத்து விடை பெறும்போது ஊரே துறவு பூண்டது போல வழி அனுப்பியது.

சரியாக பத்து நாளில் ஊர்த் தலைவர் வீட்டுக்காரி ஓடோடி வந்து ஊர் முச்சந்தியில் நின்று, சாமி போன திசை நோக்கி கையெடுத்து கும்பிட்டாள். ஊர் கூடி விட்டது.

சிரிப்பும் புன்னகையுமாக எல்லாரும் கை எடுத்து கும்பிட்டார்கள். முதல் காரியம் பலிக்கத் தொடங்கி விட்டது. இனி அடுத்தடுத்து பலிக்கும்.

ஹே…………ய் என கூச்சல் அடங்க நேரம் எடுத்தது.

*
கடைசி வரிகள்
**********************
அனைவரின் பார்வையும் அவள் முகத்தில் இருந்து அவள் கையில் இருந்த வாத்துக் குஞ்சு மேல் மேயத் தொடங்கின.

எங்க வீட்டுல இருக்கற பொம்மை பேசுச்சு என்றான். அவன் பேசுவது கூட ஒரு பொம்மை பேசுவது போலவே இருந்தது.

ஊர்த் தலைவர் தலை சுற்றி விழப் போகும் நேரம் இது. வீட்டுக்காரி உண்டாகி விட்டாள்.

– கவிஜி

 

நன்றி : கீற்று இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More