சித்திரவதை தடுப்புக்கான ஐ.நா குழுவின் ஆஸ்திரேலிய பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குவின்ஸ்லாந்து ஆகிய மாநிலங்களில் செயல்படும் தடுப்பு முகாம்களைப் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலே, குறித்த பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், ஆஸ்திரேலியாவை பார்வையிடத் திட்டமிட்டிருந்த சித்திரவதை தடுப்புக்கான துணைக்குழு, மேற்படி முகாம்களைப் பார்வையிடுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அப்பயணத்தை ரத்து செய்திருந்தது.
எனினும், இன்று வரையிலும் இந்தச் சிக்கல் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முகாம்களைப் பார்வையிடுவதற்கு ஆஸ்திரேலியா நாட்டின் ஒத்துழைப்பு உள்ளது. இருந்த போதிலும், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குவின்ஸ்லாந்து மாநிலங்களில் உள்ள முகாம்களைப் பார்வையிடுவதற்கான தடையற்ற அனுமதிப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாததால், ஐ.நா குழுவின் பயணத்தை ரத்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை என ஐ.நா சித்திரவதைத் தடுப்பு துணைக் குழுவின் தலைவர் சுசான் ஜாபர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா ஏமாற்றம்
ஐ.நா குழுவின் மேற்படி பயணம் ரத்து செய்யப்பட்டமை தொடர்பாக தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக ஆஸ்திரேலிய அரசு குறிப்பிட்டுள்ளது.
ஐ.நா குழுவின் இம்முடிவால் ஆஸ்திரேலிய அரசு கவலையடைந்துள்ளதாக ஆஸ்திரேலிய அரசின் தலைமை வழக்கறிஞரான மார்க் ட்ரேஃபசின் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.
அத்துடன், “ஐ.நா. குழுவின் பயணம் ரத்து செய்யப்பட்டது எதிர்பாராத ஒன்று. இது ஆஸ்திரேலியாவின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை” என ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையர் லோரெய்ன் ஃபின்லே தெரிவித்துள்ளார்.
எந்தவித முன்னறிவிப்புமின்றி ஆஸ்திரேலியாவில் உள்ள சிறைச்சாலைகள், காவல் நிலையங்கள், பிற தடுப்பு முகாம்களை ஐ.நா குழு பார்வையிடுவதற்கான ஒப்புதலை 2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசு வழங்கியது.
இவ்வாறான இடங்களில் வைக்கப்பட்டுள்ளவர்கள் சித்திரவதை உள்ளாவதை, மோசமாக நடத்தப்படுவதை தடுக்கும் விதமாக ஐ.நா குழுவின் ஆய்வு நடத்தப்படுகிறமை சுட்டிக்காட்டத்தக்கது.