Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தொடர்ந்து அம்பலமாகும் அதிமுக ஆட்சி ஊழல்கள் சட்டப்பேரவையில் இன்று அனல் பறக்கும்!

தொடர்ந்து அம்பலமாகும் அதிமுக ஆட்சி ஊழல்கள் சட்டப்பேரவையில் இன்று அனல் பறக்கும்!

4 minutes read

சென்னை: தமிழக சட்டப்பேரவை, 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடுகிறது. இன்று முதல் துறை ரீதியான மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்குகிறது. மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் புகார்கள் தொடர்பாக அடுத்தடுத்து வெளிவரும் புகார்கள் தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் இன்று சட்டப்பேரவையில் புயலை கிளப்பும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 13ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் தமிழக அரசின் 2021-2022ம் ஆண்டுக்கான திருத்திய நிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன் முறையாக இ-பட்ஜெட்  தாக்கல் செய்யப்பட்டது. இதில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, மகளிர் சுயஉதவி குழு கடன் ரூ.2,756 கோடி தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. தொடர்ந்து 14ம் தேதி இந்திய வரலாற்றில் முதல் முறையாக தமிழக சட்டப்பேரவையில் வேளாண்துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் நெல் கொள்முதல் விலை விலைவு, கரும்பு சர்க்கரை விவசாயிகளுக்கு உக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பட்ஜெட்டில் அறிவித்தார். தமிழக அரசின் நிதி, வேளாண் பட்ஜெட் ஆகியவை பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து நிதி, வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 16ம் தேதி முதல் தொடங்கியது. விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நிதி, வேளாண் துறை அமைச்சர்கள் பதில் அளித்தனர். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். அதே போல கேள்விக்கு சம்பந்தப்பட்ட துறையை சார்ந்த அமைச்சர்களும் பதில் அளித்தனர். இந்த நிலையில் கடந்த 18ம் தேதி சட்டப்பேரவையில் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் எழுந்தது. பெரும் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து அவர்கள் 2 நாட்கள் அவையை புறக்கணித்தனர். அதன் பிறகு வெள்ளிக்கிழமை முகரம் பண்டிகை, சனி, ஞாயிறு என்று தொடர்ச்சியாக 3 நாட்கள் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டது.

3 நாள் விடுமுறைக்கு பின் சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள சட்டப்பேரவை அரங்கத்தில் கூடுகிறது. இன்று முதல் துறை ரீதியான மானியக்கோரிக்கை மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடக்கிறது. முதல் நாளான இன்று நீர்வளத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அவை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பதிலளித்து பேசுவார். தொடர்ந்து அவர் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுவார். நாளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக ஊராட்சி வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மீதான விவாதமும், 25ம் தேதி கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறை, 26ம் தேதி உயர்கல்வித்துறை, பள்ளி கல்வித்துறை, 27ம் தேதி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை, 28ம் தேதி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலன் துறை, பால்வளம் துறை மீதான விவாதமும் நடக்கிறது.

29ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) அரசு விடுமுறை, 30ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை ஆகும். அதன் பிறகு தொடர்ந்து மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. தொடர்ந்து வருகிற 13ம் தேதி வரை ஒவ்வொரு துறை ரீதியான விவாதம் நடக்கிறது. 2 நாட்கள் அவையை புறக்கணித்த அதிமுக உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.  அதிமுக ஆட்சியில் சென்னை புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் தரமற்று இருப்பதாக புகார் எழுந்தது. இதேபோல சென்னை ராமாபுரத்திலும், பெரம்பலூரிலும் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதே போல தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட குடியிருப்புகள் தரமில்லாமல் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் கடந்த ஆட்சியில் குடிசைப்பகுதி மாற்று வாரிய துறையை கவனித்து வந்த ஓபிஎஸ்சுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடுத்து வடசென்னை அனல் மின்நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படி கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இந்த விவகாரங்கள் இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் எழுப்பப்படும் என்று தெரிகிறது.

 மேலும் அதிமுக ஆட்சியில் நடந்த மேலும் பல முறைகேடுகள் குறித்தும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆளுங்கட்சி கூட்டணியை சார்ந்த உறுப்பினர்களும் பேசுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ேமலும் கொடநாடு விவகாரம் தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும் என்று காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சி தலைவர் செல்வபெருந்தகை அறிவித்திருந்தார். அதன்படி இன்று காங்கிரஸ் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும் என்று தெரிகிறது. இதனால் இது குறித்தும் இன்று விவாதிக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால், இன்றைய கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.இன்று நடைபெறும் கூட்டத்தில் என்ன நடைபெற உள்ளது என்பதை காண அரசியல் நோக்கர்களும், மக்களும் மிகுந்த ஆர்வத்தில் இருந்து வருகின்றனர்.

* கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த  ஊழல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இந்த விவகாரங்கள் இன்றைய  சட்டப்பேரவை கூட்டத்தில் எழுப்பப்படும் என்று தெரிகிறது. மேலும் அதிமுக  ஆட்சியில் நடந்த மேலும் பல முறைகேடுகள் குறித்தும் ஆளுங்கட்சி  உறுப்பினர்கள் மற்றும் ஆளுங்கட்சி கூட்டணியை சார்ந்த உறுப்பினர்களும்  பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* கொடநாடு விவகாரம்  தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்  கொண்டுவரப்படும் என்று காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சி தலைவர் செல்வபெருந்தகை  அறிவித்திருந்தார். அதன்படி இன்று காங்கிரஸ் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு  தீர்மானம் கொண்டுவரப்படும் என்று தெரிகிறது.
* இதனால், இன்றைய கூட்டத்தில் காரசார விவாதம்  நடைபெறும் என்றும் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More