இலங்கையின் முதலாவது சித்திரவதை வரைபடத்தை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டமும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ளன.
எதிர்வரும் ஜுன் 26 ம் திகதி சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான சர்வதேச தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக இரு அமைப்புகளும் இலங்கையின் சித்திரவதை வரைபடத்தை வெளியிட்டுள்ளன.
இலங்கையில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்களை சித்திரவதை செய்வதற்காக கடந்த மூன்று தாசப்தகாலமாக இராணுவத்தினரும் கடற்படையினரும் பொலிஸாரும் படையினருடன் இணைந்து செயற்படும் ஆயுத குழுக்களும் பயன்படுத்தும் 219 இடங்கள் அடங்கிய வரைபடத்தை குறித்த அமைப்புகள் வெளியிட்டுள்ளன.
எனினும் இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகளின் முழுமையான அளவினை இந்த வரைபடம் வெளிப்படுத்தவில்லை எனவும் குறித்த இரு அமைப்புக்களும் குறிப்பிட்டுள்ளன.
மேலும் எண்பதுகளின் இறுதியில் கொழும்பு பல்கலைகழகத்தின் சட்டபீடமும், லேக்ஹவுசின் கட்டடமொன்றும் சித்திரவதைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
அத்துடன் கடந்த பல தசாப்தங்களாக இலங்கையின் பல பாடசாலைகளும், கல்லூரிகளும், பயிற்சி நிறுவகங்களும் தொழிற்சாலைகளும் பண்ணைகளும், சினிமா அரங்குகளும், கோல்வ் திடல்களும் சித்திரவதைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன எனவும் இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.