நியூ டயமன்ட் கப்பலின் தலைவர் மற்றும் குழு உறுப்பினர்களிடம் அறிக்கை பெறப்பட்டது

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலின் தலைவர் மற்றும் குழு உறுப்பினர்களிடமிருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று அறிக்கையொன்றைப் பதிவுசெய்துள்ளது.

இந்நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பதிவுசெய்த அறிக்கை நாளை திங்கட்கிழமை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலின் தலைவர் மற்றும் குழு உறுப்பினர்களிடமிருந்து அறிக்கையொன்றை பதிவுசெய்யுமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்தது.

அத்துடன், பரிசோதனைகளுக்காக நியூ டயமன்ட் கப்பலிலுள்ள எண்ணெய் மாதிரியை பெற்றுக்கொள்ளுமாறு கடற் பாதுகாப்பு அதிகார சபைக்கு நேற்று முன்தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், இரண்டு தடவை தீப்பரவலுக்கு உள்ளான நியூ டயமன்ட் கப்பலின் தலைவர் உட்பட பணிக் குழாமினரிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நேற்று காலிக்குச் சென்றிருந்ததுடன் விசாரணை அறிக்கையொன்றைப் பெற்றுள்ளனர்.

இதேவேளை, இலங்கையின் கிழக்குக் கடற்பரப்பில் 30 கடல்மைல் தொலைவில் இருந்தபோது தீப்பிடித்திருந்த கப்பல், தற்போது கரையிலிருந்து 56 கடல் மைல் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

ஆசிரியர்