Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரசியல் கட்சிகள் ஓன்றுபடும் கூட்டங்களில் சுமந்திரன் பங்கேற்பது சாபக்கேடு | அனந்தி

அரசியல் கட்சிகள் ஓன்றுபடும் கூட்டங்களில் சுமந்திரன் பங்கேற்பது சாபக்கேடு | அனந்தி

5 minutes read
போர்க்குற்றவாளிக்கு முக்கிய பதவி - தவறாகப் புரிந்து விளாசித் தள்ளிய அனந்தி  சசிதரன் | Ananti Sasitharan who has been misinterpreted as posting for war  criminal - The Subeditor Tamil

தமிழ்த் தேசியத்திற்கும், தமிழ் மக்களினதும் நிலைப்பாட்டிற்கு நேர் எதிரானவராக இருக்கும் சுமந்திரன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக ஒன்றுபடும் அரசியல் தரப்புக்களின் கலந்துரையாடல்களில் பங்கேற்பது தமிழினத்தின் சாபக்கேடாகும் என்று ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தன் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார். 

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, 

கேள்வி:- பொதுத்தேர்தலுக்கு பின்னரான சூழலில் தமிழ்த் தரப்புக்கள் ஒன்றிணைவதற்கான நடவடிக்கைகள் வெற்றிகண்டமை மற்றும் தங்களின் பங்கேற்பு தொடர்பில் கூறுங்கள்?

பதில்:- தியாக தீபம் திலீபனின் 33ஆவது நினைவேந்தலை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோது ராஜபக்~வினரின் அரசாங்கம் அதனை முழுமையாக தடுத்து நிறுத்துவதற்காக செயற்பட்டது. நீதிமன்றங்கள் ஊடாக விசேட கட்டளைகள் பெறப்பட்டு ஒன்றுகூடுவது தடுக்கப்பட்டது. 

இனவிடுதலைக்காக அஹிம்சை முறையில் போரில் உயிர் துறந்த அந்த தியாகச் செம்மலை நினைவு கூருவதற்கான எமது அடிப்படை உரிமை மறுக்கப்பட்டதோடு அதற்கு எதிரானவர்களின் குரல்வளையை நசுக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. 

இந்தப்பின்னணியில் தான் தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து நினைவேந்தல் தடைக்கு எதிராக அடையாள உண்ணாவிரதப்போராட்டத்தினை முன்னெடுத்தன. அத்துடன் ராஜபக்~வினரின் அடக்குமுறைக்கு எதிராக ஹர்த்தாலும் முன்னெடுக்கப்பட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து செயற்பட்டமையால் இந்த முன்னெடுப்புக்கள் வெற்றியளித்திருந்தன. 

இந்த அடிப்படையில், தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கிடையில் காணப்படும் வேறுபாடுகளுக்கு அப்பால், பொதுமக்களின் பிரச்சினைகள் மற்றும் ஆட்சியாளர்களின் அடக்குமுறைகள் உள்ளிட்ட விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான பூர்வாங்க கலந்துரையாடல்கள் இடம்பெற்று அடுத்த கட்டத்திற்கு முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த விடயங்களில் எமது கட்சி இதயசுத்தியுடன் செயற்பட்டு வருகின்றது.

கேள்வி:- ஆனால் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றுபட்டுச் செயற்படுவதற்கான முக்கிய கட்டத்தினை எட்டும் பேச்சுவார்த்தையொன்று கடந்த 17ஆம் திகதி இடம்பெற ஆரம்பித்த தருணத்தில் நீங்கள் திடீரென வெளியேறியமைக்கான காரணம் என்ன?

பதில்:- இந்தக் கூட்டத்திற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார்கள். அப்படியிருக்க, திடீரென பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அதிரடிப்படைகளுடன் கூட்டம் நடைபெறும் மண்டபத்தினுள் பிரவேசித்தார். அவரும் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே வந்திருந்தார் என்பதை உணர்ந்து கொண்டேன். அதன் காரணத்தினால் தான் வெளியேறினேன்.

கேள்வி:- நீங்கள் ஒரு கட்சியியை பிரதிநிதித்துவப்படுத்துவராக இருக்கையில் சுமந்திரனின் வருகையால் வெளியேற வேண்டிய அவசியமில்லையே?

பதில்:- கடந்த பொதுத்தேர்தலில் யாழ்.மத்திய கல்லூரியில் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்றபோது சுமந்திரனின் இதே விசேட அதிரடிப்படைகள் தான் மாவை.சேனாதிராஜாவின் புதல்வரை தாக்கியது. எமது கட்சியின் கலைகலாசார பிரிவு பொறுப்பாளரை தாக்கியது. இன்னும் பல இளைஞர் யுவதிகள் தாக்கப்பட்டார்கள். விசேட அதிரடிப்படைகள் சுமந்திரனுக்கு பாதுகாப்பு அளிப்பைவையாக இருக்கலாம் ஆனால் அவை எமக்கு எதிராக துப்பாக்கியை நீட்டுபவையே.

அத்தகைய படைகளின் பாதுகாப்புக்கு மத்தியில் தான் தமிழர்களுக்கான கூட்டுச் செயற்பாடு பற்றி பேச வேண்டும் என்பது துர்ப்பாக்கிய நிலை தான். என்னைப் பொறுத்தவரையில், முள்ளிவாய்கால் அவலத்திற்கு காரணமான படைகளின் மத்தியில் நின்று பேச்சுவார்த்தைகள் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதனாலேயே வெளியேறினேன்.

கேள்வி:- தமிழ் மக்களுக்காக முன்னெடுக்கப்படும் கூட்டிணைவு செயற்பாட்டிற்காக நீங்கள் நெகிழ்வுப் போக்கினை கடைப்பிடித்திருக்கலாம் அல்லவா?

பதில்:- எனக்கு அரசியல் அனுபவம் குறைவுதான். ஆனால் அரசியலில் ஆகக்குறைந்த நேர்மைத்தன்மையாவது இருக்க வேண்டும் என்பதில் திடமாகவே உள்ளேன். ஏற்கனவே எமது ஒன்றிணைந்த செயற்பாட்டு முயற்சிகளுக்கு தோல்வி அடைந்தவர்கள் தம்மை நிலைப்படுத்திக்கொள்வதற்காக கூட்டிணைய முயற்றி செய்கின்றார்கள் என்ற பார்வையொன்று காணப்படுகின்றது.

அவ்வாறிருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியே கூட்டிணைந்து செயற்படுவதற்கு வந்திருந்த அனைத்து தரப்புக்களும் சுமந்திரன் என்ற தனிநபரை கடந்த காலங்களில் மிகக்கடுமையாக விமர்சித்துள்ளன. அவராலேயே கூட்டமைப்பிலிருந்து வெளியேறியும் உள்ளன. அதேபோன்று தமிழரசுக்கட்சியின் கொள்கை தவறிய ஏதேச்சதிகார போக்கு வலுவாகுவதற்கும் சுமந்திரனே காரணமாகவும் இருந்தார். 

இதனைவிடவும், கடந்த ஆட்சியாளர்களுடன் மிக நெருங்கிச் செயற்பட்டதோடு வாக்களித்த மக்களின் ஆணையை விடவும், ஆட்சியாளர்களுக்கே விசுவாசமாக இருந்துள்ளார். தற்போதும் கூட திரைமறைவில் ராஜபக்~ தரப்பினருடன் தொடர்புகளைப் பேணி வருகின்றார். 

இதனைவிடவும், சர்வதேசத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற முத்திரையுடன் சென்ற சுமந்திரன் மைத்திரி-ரணில் கூட்டரசிடம்  பொறுப்புக்கூறலை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட அனைத்து விடங்களையும் நீர்த்துப்போகச் செய்து அந்த அரசாங்கத்தினையும் ரணிலையும் முழுமையாக காப்பாற்றினார். 

அதுமட்டுமன்றி ஐ.நா.வில் பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்திய “சர்வதேச விசாரணைக்” கோரிக்கையை பொருட்டாக கொள்ளாத சுமந்திரன் சர்வதேச விசாரணை நிறைவடைந்து விட்டது என்றும் அறிவித்தார். 

ஜனாதிபதி தேர்தலின்போது பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ்க் கட்சிகளின் ஏகோபித்த இணைவில் 13அம்சக் கோரிக்கைகளை முன்வைக்கும் செயற்பாட்டில் பங்கேற்று இறுதிவரையில் அமைதியாக இருந்து தோல்வி அடையச் செய்திருந்தார். 

அவ்வளவு ஏன், ஒக்டோபர் புரட்சியின்போது ரணிலுக்காக நீதிமன்றம் சென்ற சுமந்திரன் திலீபனின் நினைவேந்தலுக்காக நீதிமன்றம் தடைகளை விதித்தபோதும் அந்த விடயம் சம்பந்தமாக எந்தவொரு கரிசனையும் கொள்ளாதவராகவே இருந்தார். திலீபனின் நினைவேந்தலுக்கான முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரப் போராட்டத்தில் கூட அவர் பங்கேற்றிருக்கவில்லை. அத்துடன் விடுதலைப்புலிகளுக்கு எதிரான கொள்கையைக்  கொண்டிருப்பதாக தற்போதும் கூறிவருகின்றார். 

இவ்வாறு தமிழின விடுதலை, நீதிக்கோரிக்கை போன்ற விடயங்களில் எதிர்மறையான நிலைப்பாட்டினை கொண்ட ஒருவர் பொதுமக்களை அடிப்படையாக் கொண்ட கொள்கைசார் இணக்கத்துடன் பயணிக்க தயாராகும் கட்டமைப்பில் பங்கேற்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும். 

கேள்வி:- இந்த கூட்டிணைவுச் செயற்பாடுகளில் சுமந்திரன் தொடர்ச்சியாக பங்கேற்பாராயின் நீங்கள் பங்கேற்க மாட்டீர்களா?

பதில்:- இந்த விடயத்தில் எனது நிலைப்பாடு பற்றி, மாவை.சேனாதிராஜா மற்றும் சி.வி.கே.சிவஞானத்திடம் கலந்துரையாட எதிர்பார்த்திருக்கின்றேன். மேலும், சுமந்திரன் தமிழ்த் தேசியக் கொள்கையிலிருந்து விலகிச் செல்கின்றார் என்று கடுமையாக விமர்சித்த கஜேந்திரகுமார், சுரே~; பிரேமச்சந்திரன், சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் போன்றவர்கள் எவ்வாறு சுமந்திரனின் பங்கேற்புடன் கூட்டிணைந்து செயற்பட போகின்றார்கள்.

சுமந்திரன் இந்த கூட்டிணைவு முயற்சிகளில் தொடர்ந்தும் பங்கேற்பாராயின், அவருக்குள்ள நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் இந்தக் கூட்டிணைவு செயற்பாடு கூட இறுதிக்கட்டத்தில் சிதைந்து போகும் நிலைமையே ஏற்படும். தற்போது வரையில் அரசியல் தீர்வாக இருக்கட்டும், பொறுப்புக்கூறலாக இருக்கட்டும் மக்களினதும், தமிழ் அரசியல் தலைமைகளினதும் நிலைப்பாடுகளுக்கு நேர் எதிரான நிலைப்பாட்டினையே சுமந்திரன் கொண்டிருக்கின்றார். 

இவ்வாறான ஒருவரின் பங்கேற்புடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக ஒன்றிணைவதென்பது கானல் நீரான விடயமாகும் என்றே கருதுகின்றேன். தமிழ்த் தேசிய நீக்க, தரப்பினர், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக ஒன்றுகூடும் கலந்துரையாடல்களில் பங்கேற்பது என்பது தமிழினத்தின் சாபக்கேடாகும். இதனை நீண்ட இனவிடுதலைப் விடுதலைப் போராட்ட அனுபவத்தினைக் கொண்டிருக்கும் மாவை சேனாதிராஜா புரிந்து கொள்ள வேண்டும்.

நேர்காணல்:- ஆர்.ராம், நன்றி – வீரசேகரி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More