Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தொடர்பான ஊடக அறிக்கை

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தொடர்பான ஊடக அறிக்கை

3 minutes read

மரபுவழியான தமிழர் தாயகப் பிரதேசங்களில் எமது வாழ்வியல், வரலாறு மற்றும் பண்பாடுகள் மீதான புற வல்லாதிக்கத்தை நாம் பலதசாப்தங்களாக அனுபவித்து, வந்திருக்கின்றோம் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு தெரிவித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவ் அமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது.அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“மரபு வழியான தமிழர் தாயகப் பிரதேசங்களில் எமது வாழ்வியல், வரலாறு மற்றும் பண்பாடுகள் மீதான புற வல்லாதிக்கத்தை நாம் பலதசாப்தங்களாக அனுபவித்து, வந்திருக்கின்றோம்.

இந்த நிலையில் உலக ஒழுங்கியலுக்கு ஏற்றவாறான, நியாயமான எமது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை பல்வேறு தளங்களில், வடிவங்களில் முன் நகர்த்தி ஈழத் தமிழர்களாகிய நாம் இன்றுவரை போராடிய வண்ணம் இருக்கின்றோம்.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தொடர்பான ஊடக அறிக்கை

எமது தீர்க்கமான, நியாயமான போராட்ட இலக்குகளை சர்வதேசமும், அதன் பல்தேசிய அமைப்புக்கள் பலவும் அங்கீகரித்து வந்திருக்கின்றன, வருகின்றன. எனினும், உலகின் சில சர்வதேச, பிராந்திய வல்லரசுகள் பேரினவாத அரசுடன் கரங்கோர்த்து, தத்தமது சுய அரசியல் இலாபங்களுக்காக, உலக நீதியின் ஒழுக்கிற்கு வெளியே நின்று எமது ஆயுதப்போரை இரும்புக் கரங்கொண்டு நசுக்கி மௌனிக்கச் செய்தமை உலகறிந்த உண்மை.

“சமாதானத்துக்கான போர்” என்ற பெயரில் ஓர் மிலேச்சத்தனம் அரங்கேறி தாண்டவமாடியது. 2009இன் இதே போன்றதொரு வாரத்தில் முடித்து வைக்கப்பட்ட இக் கோரத்தனத்திற்கு இரையாக, எமது இனத்தின் ஒரு பகுதியினர் கொத்துக் கொத்தாக கொன்றழிக்கப்பட்டனர்.

தாய் தந்தையரை, கணவனை, மனைவியை, பிள்ளைகளை பலிகொடுத்த பல்லாயிரம் குடும்பங்கள் உள்ளன. அங்கங்கங்களை இழந்து ஆயிரமாயிரம்பேர் நிர்க்கதியாக்கப்பட்டனர். இனவழிப்பு நிலத்தின் பட்டினியும், பயமும், உளவியல் தாக்கமும் தமிழினத்தின் அடுத்த சந்ததியின் அத்திவாரக் கற்களையும் அசைத்துச் சென்ற கொடூரத்தை, மிகப்பெரிய மனித அவலத்தை இன்றுவரை சர்வதேசம் மறந்திருக்க வாய்ப்பில்லை.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தொடர்பான ஊடக அறிக்கை

ஆசாபாசங்களைத் துறந்து எமக்காகவும், எமது சந்ததிக்காகவும், எமது உரிமைக்காகவும், எமது சுய கௌரவத்திற்காகவும் இந்த தாங்க முடியாத வலிகளைச் சுமந்தவர் எங்கள் கண்முன்னே கரமிழந்து நிற்கின்றனர். எமது மக்கள் பட்டினியின் வாயில்படாதபாடு படுகின்றனர். எமது சமுதாயத்தின் இந்த இருள் நிலையை நாம் இலகுவில் கடந்துசென்றுவிட முடியாது.

கண்முன்னே பற்றி எரிந்துகொண்டிருக்கும் அவர்களின் அரும்பொட்டான வாழ்வை கண்டும் காணாது இருந்துவிட முடியாது.

எனவே எமது மக்களின் வாழ்வாதாரங்களை கட்டமைப்பது எமது அவசரமும் அவசியமுமான காலக்கடமையாகும். எமது இனத்தின் போர்க்கால வடுக்களை ஆற்றும் மூலத்தேவைகளில் ஒன்றான இக் கைங்கரியத்தை ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பாகிய நாம் இயலுமானவரை செய்ய விளைகின்றோம்.

இந்த மனிதாபிமானம் மிக்க பணியில் இணைந்துகொள்ள அர்ப்பணிப்புள்ள யாவரையும் இரு கரம் நீட்டி அழைக்கின்றோம். எமது மனித உரிமையின் மீது விழுந்த மிகப்பெரிய காயத்தை உலகம் மெல்ல மெல்ல மறந்து சென்றாலும் நாம் அதனை மறந்துவிட முடியாது.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தொடர்பான ஊடக அறிக்கை

அந்தத் தழும்பின் அத்தனை வேதனைகளையும் அடுத்த சந்ததிக்கு கற்பிதங்களாக உணர்த்துதல் எமது வரலாற்றுக் கடமையாகும். அதுமட்டுமன்றி எமது வரலாற்றுத் துயரங்களை அடையாளப்படுத்தி அனுஷ்டித்தல் எமது மனித உரிமையுமாகும்.

எனவே எமது மக்களின் உயிர்களின் கொதிநிலையை அடையாளப்படுத்தும் இந்தப் புனிதமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் எமது பண்பாட்டின் வழியே ஆலயங்களிலும் வீடுகளிலும் விளக்கேற்றி , அந்த அழிக்கப்பட்ட ஆத்மாக்களை ஒரு கணம் நினைவதோடு அன்று எம்மவர் அனுபவித்த பசிப்பிணியை எடுத்து இயம்பும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை காய்ச்சி அனைவருக்கும் வழங்கி ஒரு நாளேனும் ஒரு பொழுதேனும் அதனை மட்டும் உணவாகக் கொள்வோம்.

அதே நேரம் போரின் கோர வடுக்களை சுமந்து நலிவுற்ற எம் மக்களுக்கு எம்மாலான அறப்பணியை நாமும் செய்து அனைவரையும் தூண்ட இந்த நினைவழியா நாட்களான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் உறுதியேற்க வேண்டி நிற்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.   

Gallery

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More