திரிபோஷ குற்றச்சாட்டுகளை வைத்து அரசியல் செய்யாதீர்கள் | கெஹெலிய ரம்புக்வெல்ல

திரிபோஷ தொடர்பில் பிரச்சினைகள் உள்ளதென்பதை ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் அரசியல் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக அது தொடர்பில் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை ஏற்றுக்கொள்ள

முடியாதென சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டில் திரிபோஷ தட்டுப்பாடு மற்றும் அப்லோடொக்ஷின் பிரச்சினை உள்ளதென்பதை மறுக்க முடியாதென சுட்டிக்காட்டிய அமைச்சர் போஷாக்கின்மை மற்றும் திரிபோஷ விவகாரம் தொடர்பில் சபைக்கு அறிவியல் பூர்வமான அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஹேஷா விதானகே எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நச்சுத்தன்மை கொண்ட திரிபோஷ பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் ஹேஷா விதானகே எம்.பி இதன்போது கேள்வி எழுப்பினார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்:

சுகாதாரத்துறைக் கட்டமைப்பில் சில பிரச்சினைகள் உள்ளன என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். நச்சுத்தன்மை கொண்ட திரிபோஷ, பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் சுகாதாரத்துறை அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது. அப்லோடொக்ஷின் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்ட நபர் அது தொடர்பில் விரிவாக தெளிவுபடுத்துமாறு சுகாதார அமைச்சு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனினும் அவர் தனது சட்டத்தரணியின் ஆலோசனையைப் பெற்றுக்கொண்டு விளக்கமளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அப்லோடொக்ஷின் தொடர்பில் கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்னர் இருந்த தரவுகளை வைத்துக்கொண்டே தற்போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஹம்பாந்தோட்டை மாவாட்டத்தில் மந்தபோசணை பாதிப்பு 85 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக வெளியாகும் அறிக்கை அடிப்படையற்றதாகும்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 5 சதவீதத்துக்கும் குறைவான மந்தபோசணை பாதிப்பு காணப்படுவதாகவே மாவட்ட சுகாதார அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

அந்த வகையில் மந்தபோசணை மற்றும் திரிபோஷ விவகாரம் தொடர்பில் சபைக்கு அறிவியல் பூர்வமான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஆசிரியர்