Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா இராஜ ராஜ சோழனின் சமதர்மம் | பொன் குலேந்திரன்

இராஜ ராஜ சோழனின் சமதர்மம் | பொன் குலேந்திரன்

8 minutes read

முகவுரை

முற்காலத்தில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ இலங்கை மன்னர்களிடையே  அடிக்கடி போர் நடந்தது. சில இலங்கை மன்னர்கள் மதுரை பாண்டிய இராட்சியத்தில்  பெண் எடுத்தனர்.  அதோடு பாண்டிய, சேர மன்னர்களின் உதவியோடு சோழர்களை எதிர்த்தனர். இதனால் இலங்கையில உள்ள  ராஜரட்ட என்ற  அனுராதபுர ஆட்சி பல  தடவைகள்   சோழ மன்னர்களின் ஆக்கிரமிப்புக்கு உட்படிருந்தது. அனுராதபுரதில் கி மு  205 முதல்     161 ஆண்டுவரை 44 ஆண்டுகள்  ஆண்ட எல்லாளன்   என்ற சோழ மன்னன் சமதர்மத்துடன் இந்து,  பெளத்த ஆகிய  இரு  மதங்களையும் ஆட்சி செய்தவன். அவன் படையில்   சிங்களவர்களும்  இருந்தனர். அவனின்  மரணத்துக்கு  பின் ஆட்சிக்கு  வந்த துஷ்ட கைமுனு பௌத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தான். ஆனால் அதன் பின் வந்த சில சிங்கள மன்னர்கள் பௌத்தத்தை புறக்கணித்து ஆட்சி செய்தனர். அவர்களில்   கி பி   981 முதல் 1017 வரை  ஆண்ட   ஐந்தாம்  மகிந்தன்  என்பவனும் ஒருவன். இவனது பலவீனமான  அரச  பரிபாலனமும் பௌத்த மதத்துக்கு  முக்கியத்துவம்  கொடுகாததும், வரியை சரிவர  வசூலித்து நாட்டை அபிவிருத்தி செய்யாததும் பாண்டியரின் உதவியினை  தனது ஆட்சியின் பாதுகாப்புக்கு நாடியதும் ராஜ ராஜ சோழனின்  படை எடுப்புக்கு முக்கிய காரணங்களாக இருந்தது. அதோடு ராஜ ராஜ சோழனின்  பலம்  வாய்ந்த கப்பல் படை அனுராதபுர ஆக்கிரமிப்புக்கு  மிகவும் உதவியது. மன்னாரில்  உள்ள மாந்தை துறைமுகதில் வந்து இறங்கியது ராஜ ராஜ சோழன் என்ற அருள் மொழிவர்மனின் கப்பல் படை. அதன் பின் நடந்தது  என்ன என்பதே  இந்தப் புனைவு கலந்த கதை

*****

அனுராதபுர இராச்சியத்தின் சோழர் ஆக்கிரமிப்பு என்பது கி.பி 993 இல் அனுராதபுர இராச்சியம்  மேல் படையெடுப்பதன் மூலம் இது தொடங்கியது. ராஜ ராஜன் ஒரு பெரிய சோழ இராணுவத்தை பாவித்து அனுராதபுர ராஜ்யத்தை கைப்பற்றி சோழ சாம்ராஜ்யத்தில் உள்வாங்கினார். தீவின் பெரும்பகுதி பின்னர் 1017 வாக்கில் கைப்பற்றப்பட்டது. மற்றும் அவரது மகன் ராஜேந்திர சோழ ஆட்சியின் போது பரந்த சோழ சாம்ராஜ்யத்தின் மாகாணமாக இலங்கை இணைக்கப்பட்டது.

ராஜ ராஜ சோழனின் தந்தை பராந்தக சுந்தர சோழர் சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

இவருக்குப்  பின் உத்தம சோழர்  (மதுராந்தகன் ) ஆட்சி செய்து அதன் பின்  ராஜேந்திர சோழன் ஆட்சிக்கு வந்தார். ஆதித்ய கரிகாலன் கொல்லப்பட்ட பின்பு சோழ அரியணையில் அமரப்போவது யாரென்ற கேள்வி எழத்தொடங்கியதும் அருண்மொழிவர்மன் உள்நாட்டுக் கலவரம் மூள்வதைத் தடுக்க தன் சிற்றப்பனுக்கு (மதுராந்தகன்) வழி விட்டார். உத்தம சோழன் பதினோராண்டு காலம் ஆட்சி பீடத்தில் இருந்ததாகவும் அக்காலத்தில் சோழர்கள் எவ்விதமான போரிலும் ஈடுபடவில்லை எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் இவர் சிறந்த சிவ பக்தராக இருந்திருக்க கூடும் என்றே தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இவர்கள்  காலத்தில் இந்துமதம், பெளத்த மதம், ஜெயன் மதம் ஆகிய மதங்களுக்கு சமத்துவம்  இருந்தன .

1006 ஆம் ஆண்டு தமிழ்க் கல்வெட்டு  ராஜராஜ சோழச் சக்கரவர்த்தி நாகப்பட்டினத்தில் சூளாமணி விஹாரத்துக்காக ஒரு கிராமத்தின் வருமானத்தை கடாரத்தின் (மலேசியாவின் ஒரு பகுதி) புத்த மதம் சார்ந்த  ஆட்சியாளரான சூளாமணிவர்மதேவன் என்பவருக்கு அளித்தார் என்ற செய்தியையும், அவருக்குப் பின் அவர் மகன் மஹாவிஜயதுங்கவர்மன் என்பவருக்கு அது தொடரப்படவேண்டும் என்ற செய்தியையும் கொண்டிருக்கிறது. நாகையில் கண்டுபிடிக்கப்பட்ட பழைய சோழர் கால கல்வெட்டு முதலாம் இராஜராஜன் (கி.பி. 985-1014) காலத்தை சேர்ந்தது. ஸ்ரீ விஜய சூளாமணி வர்மன் எனும் ஜாவா நாட்டு மன்னனால் ராஜ ராஜ சோழனின் ஆதரவுடன் பதினொன்றாம் நூற்றாண்டில் கட்டப்படதுதான் நாகபட்டிணத்தில் இருந் சூடாமணி விகாரம் என்ற புத்த விஹாரை.

10,11-ம் நூற்றாண்டுகளில் சோழ நாட்டில் ஆழமாக காலூன்றியிருந்த புத்தமதம் எப்படி அடிச்சுவடே இல்லாமல் போனது என்பது புரியாத புதிர். அதே நேரம் இஸ்லாமியரின்  ஆக்கிரமிப்பால்  கி பி ஆறாம் நூறாண்டில்  தோன்றிய இஸ்லாம இந்தியாவில்  சில நூற்றாண்டுகளுக்குப் பின் பரவியது.

பௌத்த பிக்குகளின் உறைவிடப் பள்ளியே விகாரை எனப்படும். மனிமேகலை எழுதிய சாத்தனார் என்ற புலவர் காலத்துத் தமிழ்த் தலைநகரங்களில் பௌத்தப் பள்ளிகள் இருந்தன. எனினும் பூம்புகார் நகரில் இருந்த பள்ளிகளே புகழ் படைத்தவை. பள்ளியின் பக்கத்தே புத்தரின் திருவுருவம் எழுந்தருளிய கோயிலும் இருந்தது. பள்ளியும் விகாரமும் ஒன்று போல் தோன்றினாலும் நுணுகி நோக்கின் வேறுபட்டன ஆகும். இரண்டிலும் துறவிகள் இருப்பர் எனினும் அவர்தம் நிலையில் வேறுபாடுண்டு. விகாரத்தில் உறையும் துறவிகளைச் சாரணர் என்றும், பள்ளியில் இருப்போரை மாதவர் என்றும் சாத்தனார் குறிப்பிடுகிறார். சாரணர்கள் முக்கால ஞானம் உடையவர்கள். சாரணர்களுக்கு ஒப்பான ஆற்றலும் மெய்யுணர்வும் பள்ளியில் வாழும் பிக்கு, பிக்குனிகளுக்கு இருந்ததாக எண்ண இடமில்லை. பௌத்தத் துறவிகளின் உறைவிடம் ஆராமம் எனப்படும்.

நாகப்பட்டினத்தில் இராஜராஜ சோழன் காலத்திலும் அவருடைய மகன் இராஜேந்திர சோழன் காலத்திலும் புத்த விகாரங்கள் இருந்துள்ளன. அவை முறையே இராஜராஜப்பெரும்பள்ளி இராஜேந்திரப்பெரும்பள்ளி என அழைக்கப்பட்டன. நாகப்பட்டினத்தில் புத்த விகாரம் இருந்ததற்கான சுவடு தற்போது இல்லை. நாகப்பட்டினம் வெளிப்பாளையம் அருகே முன்பு விகாரம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த விகாரம் சூடாமணி விஹாரம் எனப்படும். நாகப்பட்டினத்தில் புத்த விகாரம் இருந்த இடமான தற்போதைய வெளிப்பாளையம் மற்றும் நாணயக்காரன் தெரு ஆகிய இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட புத்த செப்புத்திருமேனிகள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பல்லவர் காலம் தொட்டு சோழர் காலம் வரை நிர்மாணம் செய்யப்பட்ட புத்தரின் கற்சிலைகள் சோழ மண்டலம் மற்றும் தொண்டை மண்டலப் பகுதிகளிலுள்ள 150 க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. சைவ சமயத்திற்கு அளவற்ற, தடையற்ற, தீவிர ஆதரவு நிலவிய ஒரு காலத்தில், தமிழ் நாட்டிலிருந்து கண்டெடுக்கப் பட்ட புத்த மதச் சின்னங்களில் பெரும்பகுதி இவையே.

****

அனுராதபுரத்தை கைப்பற்றிய பின் ராஜராஜசோழனின் படைக்கும் மக்களிடையே எதிர்ப்பு இருந்தது.  சிங்கள,  தமிழ்  துவேசம் துஷ்டகைமுனு காலத்தில் இருந்தே வேரூண்டி இருந்தது. அதனால் பரிபாலனத்தில் திறமை உள்ள  ராஜராஜசோழன்  எல்லாளனை போல் அனுராதபுரத்தை ஆட்சி செய்தான். அதன் பின் சோழரின் ஆட்சியில் தலைநகரம் திருகோணமலை துறைமுகம், திருக்கோனேஸ்வரத்துக்கு  அருகிலும். மகாவலி நதிக்கு அருகிலும், பல ஏரிகள், வயல்கள் இருக்கும். பொலனறுவைக்கு இடம் மாறியது. அங்கு சிவஸ்தலங்கள் உருவாக்கப்பட்டு கிழக்கு இலங்கையும் சோழர் ஆட்சியின் கீழ் இருந்தது.

அநுராதபுரத்தில்    சோழ  இராணுவவீரர்கள் மக்களை கொள்ளை அடித்தனர் என்று பல சிங்கள ஊடகங்கள் எழுதினாலும்  அதற்கு போதிய ஆதாரமில்லை.  ராஜராஜ சோழன் எல்லா உயிரினங்ககளின் மேல் அன்புள்ளவன். புத்த விஹாராக்கள் எதுவும் சிதைக்கப்படவில்லை. விவசாயம்  செய்வோருக்கு  முன்னுரிமை  கொடுகப்பட்டது. கிராம அபிவிருத்திக்கு  அதிகாரிகள் நியமிக்கப் பட்டனார்.  வன்னியில் பல குளங்கள் கட்டப்பட்டன. வவுனியாவுக்கு கிழக்கே உள்ள பதவியா குளத்தின் அருகில் ஒரு வணிக நகரத்தை தமிழ் வணிகக் கணங்கள் அமைத்து செயற்பட்டதற்கான பல தொல்லியல் சான்றுகள் காணக் கிடைக்கின்றன. இங்கு அகழாய்வு செய்யப்பட்ட தமிழ், சமஸ்கிருத, கிராந்த கல்வெட்டுக்களும் தொல்லியல் சான்றுகளும் இந்நகரம் தமிழ்/தென்னிந்திய வணிகர்களான நானாதேசியர், அஞ்ஞூற்றுவர், நகரத்தார், வீரக்கொடியர் தொடர்பான குறிப்புகளையும் சோழரின் வேளைக்காரப் படையினரினது இராணுவத் தளமாக இருந்ததற்கான குறிப்புகளையும் கொண்டிருக்கின்றன.

****

தந்தை  சுகயீனம் உற்ற  காரணத்தாலும் மேலும்  இராணுவதில் வீரர்கள்  சேர்க்கவும்,   நிதி உதவி பெற   ராஜராஜசோழன் தன் மெய்காப்பாளன்  நந்திநாதனுடன் நாகபட்டிணத்துக்கு மாந்தையில் இருந்து  கப்பல் ஏறினார். ராஜ ராஜசோழனின்  பாதுகாப்பு  கருதி  இரகசியமாக பயணம்  இருத்தது.    கப்பல் மன்னார்  குடா   ஊடாக வங்காள  விரிகுடா கடலுக்குள்  சென்றது. அந்த கடலில் எப்போது புயலினால் பேரலைகள் தோன்றும் என்பது  எவருக்கும் தெரியாது. பயணத்தின் போது பேரலைகள் தோன்றியதால் கப்பலின் அசைவினால் ராஜராஜசோழன்  நோய் வாய்பட்டார். அவருடன்  கப்பலில் சென்ற  அரச  வைத்தியரால்  நோயை  குணப்படுத் முடியவில்லை.  அவரின் மெய்காப்பாளன் நந்திதேவனுக்கு  சூளாமணி  விஹாரவின் பிரதம புத்த குரு தர்மசீல தேரோவை நன்கு தெரியும். அவரை அனுராதபுர, ருவன்வலி சாய விஹாராவில்  சந்தித்து    மூலிகை  வைத்தியம் பெற்று தன் வியாதியை   அவர் போக்கியதை நந்திதேவனின்  நினைவுக்கு  வந்தது.   அதனால் அநுராதபுரத்தில் இருந்து  நாகபட்டினம் சூளமணி விஹாராவுக்கு தர்மசீல தேரோ சென்றதை நந்திதேவன் அறிவான். ஆகவே எப்படியும் ராஜராஜாசோழரை அந்த விஹாராவுக்கு கூட்டிச் சென்று தர்மசீல புத்த குரு மூலம் வைத்தியம் செய்தால் மன்னர் நிற்சயம்

குணம் பெறுவார் என்பது நந்தி தேவன் நம்பிக்கை.

ராஜராஜசோழன்  சென்ற கப்பல் ஒரு வழியாக நாகபட்டிணத்தை  அடைந்தது. சூளாமணி   விஹாரை  கடற்கரையில்  இருந்து ஊருக்குள் ஒரு மைல் தூரத்தில்  இருந்தது. மன்னரால் குதிரையில் பயணம் செய்ய முடியவில்லை.  கடற்கரையில் இருந்து  விஹாரைக்கு  செல்ல ஒரு கால்வாய் இருந்ததினால் ஒரு ஓடத்தில்  மன்னரை ஏற்றி  பாதுகாப்பாக  சூளாமணி விஹாரைக்கு நந்தி தேவன் கூட்டிசென்றான்.

ராஜாராஜசோழன் தனது   உதவி நாடி வருவார்  என்று  சூளாமணி விஹாராவின்  புத்த பிரதம குரு தர்மசீலர் எதிர்பார்கவில்லை. அவரை உடனே விஹாராவுக்கு அடியில்உள்ள வைத்தியம் செய்யும் அறைக்கு பிக்குகளின்  உதவியோடு   தூக்கி சென்றனர்.     சூளாமணி விஹாராவை  உருவாக்கியவர்     ராஜா ராஜ சோழன்  என்பது   தர்மசீலருக்கு நன்கு தெரியும். நந்தி தேவன்  மன்னரின்  நோயின் முழு விபரத்தையும் தர்மசீலருக்கு சொன்னான். மன்னரால்  பேச முடியவில்லை. அவர் கண்கள்  மூடி  இருந்தன.  தர்மசீலர் மன்னரின்  நாடியைப் பிடித்து பார்த்த போது அது குறைவாக இருந்தது. இது போன்று முன்பு  இரு வணிகர்கள்  கடலில்  பயணம்  செய்ததினால்  ஏற்பட்ட  வியாதியினால்   தன்னிடம் வந்து சிகிச்சை பெற்று   குணம்  அடைந்து  சென்றது அவரின் நினைவுக்கு  வந்தது . உடனே அவர்களுக்கு கொடுத்த  மூலிகை  மருந்தை  ராஜ ராஜசோழனுக்கு கொடுத்து  அவரின் நாடியை அடிக்கடி பிடித்துப் பார்த்தார்.  அதில் முன்னேற்றம் இருப்பதை காண்டு தர்மசீலரின் முகத்தில்  புன்னகை தெரிந்தது.

 “இனி பயம் வேண்டாம் இன்னும் ஒருமணி  நேரத்தில் மன்னர்    கண்  விழித்து சுயநிலைக்கு வந்து விடுவார்”  என்றார் தர்மசீலர்.

****

சுயநிலைக்கு வந்த ராராஜசோழன் தமிழனான தன்னை காப்பாற்றியது  இலங்கையில் இருந்து சூளாமணி விஹாராவுக்கு  வந்த  புத்தபிக்கு  என்று அறிந்ததும் அவரால் நம்ப முடியவில்லை. அதுவும் தான் கட்டிய விஹாரவின் பிரதம புத்த குரு என்று அறிந்ததும் மன்னரின் கண்களில் நீர் மல்கியது. இதான்  புத்தர் போதித்த  பிற  உயிர்  மேல் அன்பா?

“சுவாமி நான் உங்களுக்கு என்ன பிரதி உபகாரம் செய்ய வேண்டும் என் உயிரை  காப்பாற்றியதுக்கு” மன்னர்  தர்மசீலரை கேட்டார்.

“நான் எதையும்  எதிர்பார்த்து  வைத்தியம்  செய்வதில்லை. நீர்  சமதர்ம முறையில் ஆட்சி செய்தால் அதுவே எனக்கு மனதிருப்தி”  என்றார்ர பிரதம புத்த குரு தர்மசீலர்.

சுவாமி நான்  உங்கள் நோக்கத்தை நிறைவேற்றுவேன். நான் இலங்கையை  திரும்பி ஆட்சி செய்யும் போது இன, மத,  சாதி பேத மின்றி ஆட்சி செய்வேன் இது உறுதி “என்றார் ராஜராஜசோழன். தூரத்தில்,   “புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி” என்ற  மந்திரம் ஒலித்தது.

*****

 (யாவும் வரலாறு  கலந்த  புனைவு)

– பொன் குலேந்திரன் | கனடா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More