பஸில் ஒன்றும் ஞானி இல்லை! – திஸ்ஸ விளாசல்

இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்குப் பஸில் ராஜபக்ச ஒன்றும் ஞானி கிடையாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

அமெரிக்கா சென்றிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச ஒன்றரை மாதங்களின் பின்னர் இன்று (20) நாடு திரும்பியமை தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசில் பஸில் ராஜபக்சவின் வருகையை ‘மொட்டு’க் கட்சியின் உறுப்பினர்கள் ஆரவாரத்துடன் ஏற்றுக்கொண்டனர்.

அவர் வருகை தந்தால் நாடு பிரகாசிக்கும் என்றார்கள். இறுதியில் என்ன நடந்தது?

அவர் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். நாடு வங்குரோத்து அடைந்தது.

எனவே, பஸில் ராஜபக்ச நாடு திரும்பியதால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அவர் ஒன்றும் ஞானி கிடையாது.

நாடு வங்குரோத்து அடைந்தமைக்கான பொறுப்பை அவர் மீளவும் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஏனெனில் நிதி அமைச்சர் என்ற முறையில் அவரது செயற்பாடுகள், நடவடிக்கைகள் என்பன நாடு வங்குரோத்து அடைவதற்கு மற்றுமொரு காரணியாக அமைந்திருந்தது.

இந்த அரசைக் கொண்டு நடத்துபவர் பஸில் ராஜபக்ச என்பது தற்போது தெளிவாகின்றது.

அமைச்சுகளுக்கும் பதவிகளுக்கும் நபர்களைப் பரிந்துரைக்கும் பொறுப்பை அவர் திரைமறைவிலிருந்து செயற்படுத்தி வருகின்றார்.

அரசையும் ஜனாதிபதியையும் இயக்கும் நபராகப் பஸில் ராஜபக்ச திறைமறைவிலிருந்து செயற்பட்டு வருகின்றார்” – என்றார்.

ஆசிரியர்