May 31, 2023 6:06 pm

நெடுமாறன் கூற்றுக்கு இலங்கை இராணுவம் மறுப்பு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இல்லை என்றும், அவர் இறுதிப் போரில் கொல்லப்பட்டார் என்றும் இலங்கை இராணுவம் பி.பி.சியிடம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று பழ. நெடுமாறன், காசி ஆனந்தன் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். இந்தச் செய்தியாளர் சந்திப்பில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், அவருடைய மனைவி, மகள் ஆகியோர் நலமுடன் இருக்கின்றார்கள் எனவும், அவர்கள் உரிய நேரத்தில் வெளிப்படுவார்கள் எனவும் பழ. நெடுமாறன் தெரிவித்திருந்தார்.

ஆனால், பிரபாகரன் உயிருடன் இருப்பது குறித்த செய்திகளை இலங்கை இராணுவம் முற்றிலுமாக மறுத்துள்ளது.

பிரபாகரன் நலமுடன் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து இலங்கை இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத்திடம் பி.பி.சி. கேட்டபோது, “தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டதற்கான ஆதாரங்கள் எம் வசம் உள்ளன” – என்று தெரிவித்தார்.

அவர் மேலும், கூறுகையில்,

“2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி நடந்த இறுதிக்கட்டப் போரில் பிரபாகரன் கொல்லப்பட்டார். டி.என்.ஏ. ஆதாரங்களையும் நாம் எடுத்துள்ளோம்.

குறித்த திகதியில் பிரபாகரன் கொல்லப்பட்டமைக்கான டி.என்.ஏ. பரிசோதனை உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் எடுத்துள்ளோம். தவறான தகவல்களை அவர்களை வெளியிடுகின்றார்கள்.

இந்தக் கூற்று எங்களுக்கு எந்தவித எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் எங்களுக்குப் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்பது தெளிவாகத் தெரியும், அதில் சந்தேகமே இல்லை” – என்று பிரிகேடியர் ரவி ஹேரத் பி.பி.சி. தமிழிடம் தெரிவித்தார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்