March 31, 2023 7:03 am

மக்கள் மத்தியில் செல்வதற்கு அச்சமடையப் போவதில்லை | நாமல்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

போராட்டங்கள் தீவிரமடைந்தால் எந்த தேர்தலையும் நடத்த முடியாது – நாமல் ராஜபக்ஷ

பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக போராட்டங்கள் தீவிரமடைந்தால் எந்த தேர்தலையும் நடத்த முடியாத நிலை ஏற்படும்.

கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராக உள்ளோம், மக்கள் மத்தியில் செல்வதற்கு அச்சமடைய போவதில்லை என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியால தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் வெள்ளிக்கிழமை (17) பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளூராட்சி மன்றங்களின் பதவி காலம் ஞாயிற்றுக்கிழமை (19) நிறைவு பெறுகிறது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் விசேட பேச்சுவார்த்தையை மேற்கொண்டோம்.

உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் மாநகர ஆணையாளர்கள் மற்றும் பிதேச சபை செயலாளர்களிடம் ஒப்படைக்கப்படும் போது அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

மாகாண சபை தேர்தல் பல ஆண்டுகாலமாக பிற்போடப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் ஜனாதிபதியின் பிரதிநிதிகளான ஆளுநர்களினால் மாகாண சபை நிர்வாகம் முன்னெடுக்கப்படுகிறது. உள்ளூராட்சிமன்றங்களுக்கும் இந்த நிலை ஏற்படுமாயின் தேர்தல் முறைமை தொடர்பில் மக்கள் மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிடுவார்கள்.

அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வெகுவிரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராக உள்ளோம். ஜனாதிபதி தேர்தல்,பொதுத்தேர்தல் அல்லது மாகாண சபைத் தேர்தல் என எந்தத் தேர்தல் இடம்பெற்றாலும் போட்டியிடுவோம்.

பொருளாதார பாதிப்புக்கு தற்போது ஒப்பீட்டளவில் தீர்வு காணப்பட்டுள்ளது. நாடு வழமை நிலைக்கு திரும்பியுள்ளது. சுற்றுலாத்துறை முன்னேற்றமடையும் தருணத்தில் சுற்றுலாத்துறை மையங்களில் ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.

பொருளாதார முன்னேற்றத்துக்கு தடையாக போராட்டங்கள் தீவிரமடைந்தால் எந்த தேர்தலையும் நடத்த முடியாத நிலை ஏற்படும்,ஆகவே எதிர்க்கட்சிகள் பொருளாதார முன்னேற்றத்துக்கான செயற்பாடுகளுக்கு தடையாக செயற்படுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்