Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிராக நாளை போராட்டம்!

பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிராக நாளை போராட்டம்!

1 minutes read

“வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து சைவ ஆலயமாக விளங்கிய கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் ஆலயச் சூழலில் தொல்லியல் திணைக்களம் அளவீட்டுப் பணிகளை மேற்கொண்டு பௌத்தத்துக்கு ஆக்கிரமிக்க எடுக்கும் முயற்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது.”

– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:–

“கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் நாளை 18ஆம் திகதியன்று தொல்லியல் திணைக்களம் அளவீட்டுப் பணிகளுக்காக வரவுள்ளது. எந்தவொரு வகையிலும் இது ஏற்றுக்கொள்ளப்படவோ அல்லது அனுமதிக்கப்படவோ முடியாத விடயம்.

ஏழு ஈச்சரங்களில் ஒன்று கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரம். சோழர் காலத்துக்கு முற்பட்ட நாகர் காலத்திலிருந்து தமிழ் மக்களாலும், சைவ மக்களாலும் வழிபட்டு வரப்பட்ட புனிதமான பிரதேசம்.

சைவ ஆலயச் சூழலில் தொல்லியல் திணைக்களம் அளவீட்டுப் பணிகளுக்காக வருவதாக அறிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ் மக்களுடைய இனத்துவ அடையாளங்களைக் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு ரீதியில் தொடர்ந்து அழித்து வருகின்ற சிங்கள – பௌத்த பேரினவாத அரசு, அதனுடைய இன்னுமொரு பரிணாமமாக கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் கை வைப்பதாக நாங்கள் உணருகின்றோம்.

அளவீட்டுக்காக மே மாதம் 18ஆம் திகதியைத் தெரிவுசெய்திருப்பது தொல்லியல் திணைக்களத்தினுடைய மிலேச்சத்தனமான செயற்பாட்டை வெளிப்படுத்துகின்றது.

தமிழ் இனப்படுகொலை உச்சம் பெற்று முள்ளிவாய்க்காலில் வீச்சுப் பெற்ற மே மாதம் 18ஆம் திகதியை உலகத்தமிழ் மக்களும், ஈழத் தமிழ் மக்களும் இனப்படுகொலை நாளாகக் கடைப்பிடித்து வருகின்றார்கள்.

அந்தப் புனிதமான நெஞ்சுருக்குகின்ற நாளில் தமிழ் மக்கள் எல்லோரும் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடுவார்கள். அப்போது அனைவரது கண்களும் அங்கு திரும்பும் எனத் துல்லியமாகக் கணித்த தொல்லியல் திணைக்களம் அந்த நாளை அளவீட்டுப் பணிக்காகக் குறித்துள்ளது.

தொல்லியல் திணைக்களத்தை பௌத்த ஆக்கிரமிப்புத் திணைக்களமாகச் செயற்பட வேண்டாம் என்று கோருகின்றோம். இது தமிழ் மக்களுடைய வழிபாட்டுத்தலம். தொல்லியல் திணைக்களம் தமது செயற்பாட்டை உடனடியாகக் கைவிடவேண்டும்.

அதேவேளை, மாவட்டம் கடந்து குறித்த செயற்பாட்டைக் கண்டிப்பதற்காக அனைவரும் நாளை ஆலய வளாகத்தில் கூடி எமது எதிர்ப்பை வெளியிடுவதுடன், அளவீட்டைத் தடுப்பதற்கு அனைவரும் ஒன்று கூடவேண்டும்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More