December 9, 2023 11:53 pm

இணையப் பாதுகாப்புச் சட்டமூலத்துக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்ப்பு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
“நிகழ்நிலை குற்றங்களைக் கையாள்வதற்கான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பதாக, ஏற்கனவே உள்ள குற்றவியல் சட்டத்தை உரியவாறு பொருள்கோடல் செய்வதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் ஏதுவான வகையில் சட்ட அமுலாக்கத் தரப்பினரின் கட்டமைப்பு ரீதியான இயலுமையை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களின்றி புதிய சட்டமூலத்தை நிறைவேற்றுவதென்பது நாட்டுமக்களின் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தையும், அதனுடன் தொடர்புடைய ஏனைய அடிப்படை உரிமைகளையும் பெரிதும் வலுவிழக்கச்செய்யும்.”

– இவ்வாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

உத்தேச நிகழ்நிலைக்காப்பு (இணையப் பாதுகாப்பு) சட்டமூலம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எல்.ரி.பி.தெஹிதெனியவினால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:-

கடந்த செப்டெம்பர் 18 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ‘நிகழ்நிலைக்காப்பு’ எனும் பெயரிலான சட்டமூலத்தை அடிப்படையாகக்கொண்டு இந்தக் கடிதத்தை எழுதுகின்றோம். அந்தச் சட்டமூலத்தை முழுமையாகப் பரிசீலித்த நாம், 1996 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் 10 (சி) பிரிவின் ஊடாக வழங்கப்பட்டுள்ள ஆணையின் பிரகாரம் எமது அவதானிப்புக்கள் மற்றும் பரிந்துரைகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம்.

இலங்கையின் நிகழ்நிலை இடைவெளியை (ஒன்லைன்) நாட்டின் பிரஜைகளுக்குப் பாதுகாப்பானதாக மாற்றியமைப்பதற்கு ஏற்றவாறான சட்டத்தை இயற்றுவது என்பது பெரிதும் வரவேற்கத்தக்க இலக்காகும்.

இருப்பினும் தற்போது நடைமுறையில் உள்ள நாட்டுமக்களின் நிகழ்நிலை நடவடிக்கைகள் தொடர்பில் பிரயோகிக்கப்படக்கூடிய குற்றவியல் சட்டத்தின் சில சரத்துக்களை பொருள்கோடல் செய்வதிலும், நடைமுறைப்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க சவால்கள் இருப்பதை நாட்டின் சட்ட அமுலாக்க அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

அதற்கு மிகப்பொருத்தமான உதாரணமாக 2007 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயத்தின் 3 ஆவது பிரிவைக் குறிப்பிடமுடியும். இந்தப் பிரிவானது நிகழ்நிலை மீறல்களை உரியவாறு கையாள்வதற்கு ஏதுவான வகையில் முழுமையாகப் பிரயோகிக்கப்படவில்லை.

அதேவேளை, சிலவேளைகளில் மீறலாகக் கருதப்படமுடியாத நிகழ்நிலை கருத்துக்களைத் தண்டிப்பதற்கு இப்பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படுகின்றது. சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயத்தின் 3 ஆவது பிரிவு தொடர்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு எமது ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட பொதுவான வழிகாட்டல்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றோம்.

இப்பிரிவானது ‘தொடர்ச்சித்தன்மை வாய்ந்ததும் உரியவாறானதுமான முறையில்’ பிரயோகிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டி சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஏற்கனவே கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. எது எவ்வாறெனினும் நிகழ்நிலை நடவடிக்கைகள் தொடர்பில் இந்தச் சட்டம் தொடர்ந்தும் தவறான முறையில் பிரயோகிக்கப்பட்டுவருவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.

எனவே, இந்த விடயத்தில் ஏற்கனவே சில பொதுவான கரிசனைகள் காணப்படும் பின்னணியில், புதிய நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் முன்மொழியப்பட்டுள்ள தருணம் குறித்து நீங்கள் பரிசீலனை செய்ய வேண்டுமென நாம் கேட்டுக்கொள்கின்றோம். அதேபோன்று நிகழ்நிலை குற்றங்களைக் கையாள்வதற்கான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பதாக, ஏற்கனவே உள்ள குற்றவியல் சட்டத்தை உரியவாறு பொருள்கோடல் செய்வதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் ஏதுவான வகையில் சட்ட அமுலாக்கத் தரப்பினரின் கட்டமைப்பு ரீதியான இயலுமையை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களின்றி புதிய சட்டமூலத்தை நிறைவேற்றுவதென்பது நாட்டுமக்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும், அதனுடன் தொடர்புடைய ஏனைய அடிப்படை உரிமைகளையும் பெரிதும் வலுவிழக்கச் செய்யும்.

அதேவேளை, இந்தச் சட்டமூலம் தொடர்பான எமது அவதானிப்புக்கள் மற்றும் பரிந்துரைகளையும் இங்கு முன்வைக்கின்றோம். குறிப்பாக நபர் ஒருவரைத் துன்பத்துக்கு உள்ளாக்கக்கூடியவாறான கருத்துக்களைக் குற்றமாக வரையறை செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ‘துன்பம்’ எனும் உணர்வின் அளவு வேறுபடக்கூடியது என்பதுடன் அது முற்றிலும் நபர் சார்ந்ததாகும். ஆகவே, அத்தகைய கருத்துக்களால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட (பாதிக்கப்பட்ட) நபர் சிவில் செயன்முறை மூலம் தனக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அதேபோன்று இச்சட்டமூலத்தில் முன்மொழியப்பட்டுள்ள நிகழ்நிலைக்காப்பு ஆணைக்குழுவுக்கான நியமனங்கள், அதன் அரசியல் சுயாதீனத்தன்மை குறித்த உத்தரவாதத்தை வழங்கக்கூடிய நியமன செயன்முறையொன்றின் ஊடாக மேற்கொள்ளப்படவேண்டும்.

மேலும், இச்சட்டமூலத்தில் குற்றமாகக் கருதப்படக்கூடிய ‘தடைசெய்யப்பட்ட கருத்துக்கள்’ என வரையறுக்கப்பட்டுள்ள பல விடயங்கள் ஏற்கனவே 1883 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க தண்டனைச் சட்டக்கோவையில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. எனவே, இந்தப் புதிய சட்டமூலத்தில் சேர்க்கப்பட்டுள்ள அவ்வாறான விடயங்கள் நீக்கப்படவேண்டும் அல்லது அவற்றின் பொருத்தப்பாடுடைய தன்மை குறித்து மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

அடுத்ததாக நிகழ்நிலை ஊடகப் பயனாளர்கள் அவர்களது அடையாளத்தை வெளிக்காட்டாமல் இருப்பதற்குக் கொண்டிருக்கும் சுதந்திரத்தைப் பாதுகாக்கக் கூடிய வகையில் ‘நம்பகத்தன்மையற்ற நிகழ்நிலை கணக்குகள்’ என்ற சொற்பதத்துக்கான தெளிவான வரையறை இந்தச் சட்டமூலத்தில் உள்ளடக்கப்படவேண்டும். அத்தோடு பொலிஸ் விசாரணைகளுக்கு உதவுவதற்காக நியமிக்கப்படும் நிபுணர்கள் பொதுமக்கள் சார்ந்த பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படாத தனியார்துறை சார்ந்தோராக இருக்கக்கூடும் என்பதால், அவர்களுக்குப் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படக்கூடாது. –  என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்