December 10, 2023 5:08 pm

கோட்டா நாட்டை விட்டு வெளியேறியமை தவறு! – நாமல் இப்படிக் கருத்து

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அன்று நாட்டை விட்டு வெளியேறியமை தவறு என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இந்தியாவின் தந்தி ரி.வி.க்கு வழங்கிய நேர்காணலிலேயே நாமல் ராஜபக்ஷ எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

‘நாட்டின் அரசியல், பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்புக் கூற வேண்டி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியமையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் அல்லது அந்த நிலைப்பாட்டை சரியென நினைக்கிறீர்களா?’ என்று தந்தி டி.வி.யின் நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த நாமல் எம்.பி.,

“அது தவறானது, இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. எமது மக்கள் ஜனநாயகத்தை விரும்பும் மக்கள், கோட்டாபய ராஜபக்ஷ 52 சதவீத மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதி. வேறு எந்த ஜனாதிபதியும் அவ்வாறு வெற்றிபெறவில்லை.

நாங்கள் நாட்டைப் பொறுபேற்றபோது நாடு மிகவும் நெருக்கடியான சூழலிலேயே இருந்தது. துரதிஷ்டவசமான பொருளாதார நெருக்கடி, கொரோனா பெருந்தொற்று, வேலையில்லாப் பிரச்சினை, வட்டி வீதங்கள் அதிகரிப்பு, டொலர் கையிருப்பில்லாத காலப்பகுதியிலேயே நாம் நாட்டைப் பொறுப்பேற்றோம்” – என்று பதிலளித்தார்.

ராஜபக்ஷக்களின் ஆட்சியைக் கவிழ்க்க சர்வதேச ஆதரவுடன் சதி நடைபெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்.

“தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. வெற்றி பெறாமல் போனதைப்போல்தான் எம்மாலும் தமிழர்களின் மனங்களில் நம்பிக்கையைப் பெற முடியாமல் போனது. எப்போது பா.ஜ.க. தமிழகத்தில் வெற்றி பெறுமோ அப்போது நான் நமது கட்சியை வடக்கு, கிழக்கில் வெற்றி பெறச் செய்வேன் என்று சொல்லியுள்ளேன்” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

“என்னுடைய தந்தை சொல்வார் இந்தியாவும் இலங்கையும் உறவினர் என்று. உறவினர் என்பதால் ஏற்றம் இறக்கம் இருக்கத்தானே செய்யும். மோடியின் தமிழ் பேசும் விதமும் அப்பாவின் தமிழ் பேசும் விதமும் கிட்டத்தட்ட ஒன்றுதான்” – என்றும் அவர் கூறினார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்