மனைவியைக் கொலை செய்து விட்டு ஓட்டோவில் தப்பிச் செல்ல முற்பட்டார் என்ற சந்தேகத்தில் அவரின் கணவன் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நாவற்குழி, ஐயனார் கோயிலடியில் வசிக்கும் அஜந்தன் யமுனா என்கின்ற 23 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை அவரின் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
இந்நிலையில், வீட்டில் கணவனைக் காணாத நிலையில் பொலிஸாரின் சந்தேகம் வலுத்தது.
குடும்பத் தகராறில் கணவரால் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கருதிய பொலிஸார் கணவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வுப் பிரிவினரும் சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் அதிரடியாகக் களமிறங்கினர்.
இதன்போது யாழ்ப்பாணம், கச்சேரிக்கு அண்மையில் ஓட்டோவில் சந்தேகநபர் தப்பிக்க முற்பட்ட வேளையில் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
“நான் மனைவியைத் தாக்கினேன். மனைவி உயிரிழந்தமை எனக்குத் தெரியாது” – என்று சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கினார்.
இதையடுத்து சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காகச் சாவகச்சேரிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.