December 4, 2023 6:01 am

ரணில் – பஸில் கடும் மோதல்! – ஆட்டம் காணுமா அரசு?

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ அதிருப்தி அடைந்துள்ளார் என்று அக்கட்சியின் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

பொதுஜன பெரமுன வழங்கியுள்ள பெயர்ப் பட்டியலின் பிரகாரம் அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி வழங்கவில்லை என்று பஸில் ராஜபக்ஷ, ஜனாதிபதியிடம் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அதிக அமைச்சுக்களைக் கொடுத்துள்ளமைக்கான கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கருத்தைக் கேட்காமல் ஜனாதிபதி அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்டுள்ளமைக்குக் கடந்த சில நாள்களாகத் தொடர் ஊடக சந்திப்புக்களை நடத்தும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியை எதிர்க்கும் வகையில் பல்வேறு கருத்துகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தச் செயற்பாட்டுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பஸில் ராஜபக்ஷவிடம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் பொதுஜன பெரமுனவின் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இதேவேளை, பொதுஜன பெரமுனவுடன் கலந்துரையாடல்கள் எதனையும் நடத்தாது ஜனாதிபதி அமைச்சரவையில் மறுசீரமைப்பை மேற்கொண்டுள்ளமைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

அதேபோன்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்புக்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

ஜனாதிபதிக்கு எதிர்ப்பை வெளியிட்டுவரும் பொதுஜன பெரமுனவினருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார, ரணில் விக்கிரமசிங்க எவரது பின்னாலும் சென்று ஜனாதிபதிப் பதவியைப் பெறவில்லை என்றும், மாறாக அவரை அழைத்தே ஜனாதிபதிப் பதவியை பொதுஜன பெரமுன வழங்கியது என்றும் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் மாறி மாறி கருத்து மோதல்களில் ஈடுபட்டுள்ளதால் அரசுக்குள் முறுகல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலைமை தொடர்ந்தால் எதிர்வரும் பட்ஜட் வாக்குகெடுப்பில் இது தாக்கத்தைச் செலுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்