Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பயங்கரவாத தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதில் முன்னேற்றம் அவசியம் | EU

பயங்கரவாத தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதில் முன்னேற்றம் அவசியம் | EU

2 minutes read

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையைத் தொடர்ந்து வழங்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் அளிக்கப்பட்ட உத்தரவாதத்துக்கு இலங்கை நன்றி தெரிவித்திருக்கும் அதேவேளை, பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்யும் விடயத்தில் மேலும் முன்னேற்றம் எட்டப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 26ஆவது கூட்டம் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய, பசுபிக் பிராந்திய பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் பயோலா பம்பலோனி ஆகியோர் தலைமையில் கடந்த மாதம் 22ஆம் திகதி ப்ருஸேல்ஸில் நடைபெற்றது.

இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை உள்ளடக்கியதாக இரு தரப்பினரும் இணைந்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி இக்கூட்டத்தின்போது பொருளாதார பாதுகாப்புக் கொள்கை, செயற்கை நுண்ணறிவுசார் கொள்கை, வர்த்தக மற்றும் மனித உரிமைகள் நிலைப்பாடு, சூழலியல் பாதுகாப்பு, உலகளாவிய இணைப்பு உத்தி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்திய – பசுபிக் உத்தி என்பன உள்ளடங்கலாக கடந்த சில வருடங்களில் தாம் பின்பற்றிவந்த முக்கிய கொள்கைகள் மற்றும் சட்டதிட்டங்கள் தொடர்பில் இலங்கை பிரதிநிதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் விளக்கமளித்தனர்.

அதேவேளை பொருளாதார உறுதிப்பாடு மற்றும் மீட்சி ஆகியவற்றில் கடந்த ஆண்டு எட்டப்பட்ட முன்னேற்றம் தொடர்பில் இலங்கை பிரதிநிதிகள் விளக்கமளித்தனர்.

அதன்படி, நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கும், நலிவடைந்த நிலையில் உள்ளோருக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குமான நகர்வுகள் இலங்கையால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஏற்றுக்கொண்ட ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், இலங்கையின் விரைவான பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சி என்பன தொடர்பில் தமது வாழ்த்தினைத் தெரிவித்தனர்.

அதேபோன்று காலநிலை மாற்ற சவால்களைக் கையாளல், சூழல் நேய சக்திவலு உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப நிலை மாற்றத்துக்கு நிதியளித்தல், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைதல், உள்நாட்டுக் கடன் நெருக்கடியைக் குறைத்தல், பயங்கரவாத குற்றங்கள், தவறான அல்லது போலித்தகவல் அச்சுறுத்தல்கள் என்பன உள்ளடங்கலாக சமகாலத்தில் உலகளாவிய ரீதியில் நாடுகள் முகங்கொடுத்துவரும் சவால்கள் தொடர்பில் இக்கூட்டத்தின்போது கலந்துரையாடப்பட்டது.

அதுமாத்திரமன்றி சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் சர்வதேச சட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பிலும் இங்கு விசேடமாக குறித்துரைக்கப்பட்டது.

அடுத்ததாக இவ்வாண்டு நாட்டில் நடைபெறவிருக்கும் தேர்தல்கள் தொடர்பில் இலங்கை பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தனர்.

குறிப்பாக அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள ஆணைக்கு அமைவாக ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமென அவர்கள் உறுதியளித்தனர். அதற்குப் பதிலளித்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், இலங்கை அழைப்பு விடுக்கும் பட்சத்தில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவொன்றை அனுப்பிவைப்பதற்குத் தயாராக இருப்பதாகக் கூறினர்.

மேலும், கடந்த மாதம் 6ஆம் திகதி நிகழ்நிலை முறைமையில் நடைபெற்ற வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை பணிக்குழு கூட்டம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அதன்படி, ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் குறித்து மீளாய்வு செய்வதற்கான நடைமுறை தொடர்பில் விளக்கமளித்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், புதிய நடைமுறை அமுலுக்கு வந்தவுடன் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மூலம் பயனடையும் இலங்கை உள்ளிட்ட நாடுகள் அதனைத் தொடர்ந்து பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுவதாக சுட்டிக்காட்டினர். அதற்குப் பதிலளித்த இலங்கை பிரதிநிதிகள், இரு தரப்பினருக்கும் இடையிலான பரஸ்பர வர்த்தகத் தொடர்புகளை நினைவுகூர்ந்ததுடன் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைத் தொடர்ந்து வழங்குவது குறித்து அளிக்கப்பட்ட உத்தரவாததத்துக்கு நன்றி தெரிவித்தனர்.

அதேவேளை ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்குரிய கடப்பாடுகள் உரியவாறு பூர்த்திசெய்யப்படுகின்றனவா என ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து கண்காணிக்கும் என அத்தரப்பு பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

அதேவேளை பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தின் ஊடாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கும், அச்சட்ட வரைபை சர்வதேச தராதரங்களுக்கு அமைவாகத் தயாரிப்பதற்கும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் பற்றி இலங்கை பிரதிநிதிகள் விளக்கமளித்தனர்.

அதனை செவிமடுத்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், இருப்பினும் இவ்விவகாரத்தில் மேலும் முன்னேற்றம் எட்டப்படவேண்டும் என வலியுறுத்தினர்.

அத்தோடு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்போரின் விடுவிக்கப்பட்டோர் தொடர்பான விபரங்கள், சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சமவாயச் சட்டத்தின் பிரயோகம், காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் போன்ற உள்ளக சுயாதீனக் கட்டமைப்புக்களின் இயக்கம், பயங்கரவாதத்தை முறியடிப்பதில் ஒத்துழைப்புடன் செயலாற்றல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More