Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 165 ஆண்டு கால வரலாற்று பெட்டகமாக எழும்பூர் போலீஸ் அருங்காட்சியகம்

165 ஆண்டு கால வரலாற்று பெட்டகமாக எழும்பூர் போலீஸ் அருங்காட்சியகம்

5 minutes read

எழும்பூர் போலீஸ் அருங்காட்சியகத்தில் போலீசார் பயன்படுத்திய பழமையான உடைகள் முதல் ஆயுதங்கள் வரை இடம்பெற்றுள்ளன.

சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் ரூ.5 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு போலீஸ் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா எழும்பூரில் இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். பின்னர் அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்த்தார். அருங்காட்சியகத்தில் காவல் துறையின் சிறப்புகளை உணர்த்தும் வகையில் பழங்கால பொருட்கள் இடம்பெற்று உள்ளன.

மேலும் போலீசார் பயன்படுத்திய பழமையான உடைகள் முதல் ஆயுதங்கள் வரை அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன. அவைகளை மு.க.ஸ்டாலின் பார்த்து வியந்தார்.

டிஜிபி சைலேந்திரபாபு

முன்னதாக விழாவுக்கு வந்த மு.க.ஸ்டாலினுக்கு காவல் துறையினரின் சிறப்பு அணிவகுப்பு மற்றும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

***

150 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள், குண்டுகள், சிறியரக பீரங்கிகள் ஆகியவை அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது.

எழும்பூர் என்றவுடன் அங்கு செயல்பட்டு வந்த பழைய கமி‌ஷனர் அலுவலகமே அனைவரின் நினைவுக்கும் வரும்.

பல போலீஸ் கமி‌ஷனர்கள் அங்கு மிடுக்குடன் பணியாற்றி இருக்கிறார்கள். இந்த கமி‌ஷனர் அலுவலகம் சுமார் 180 ஆண்டுகள் பழமையானதாகும். 1842-ம் ஆண்டு சென்னை வேப்பேரியில்தான் போலீஸ் தலைமை அலுவலகம் செயல்பட்டு வந்தது. பின்னர் எழும்பூர் பாந்தியன் ரோட்டில் செயல்பட்டு வந்த பங்களாவுக்கு அலுவலகம் மாற்றப்பட்டது.

36 ஆயிரம் சதுரடி பரப்பளவு கொண்ட அந்த பங்களா அருணகிரி முதலியார் என்பவருக்கு சொந்தமாக இருந்தது. 165 ரூபாய் வாடகை கொடுத்து அந்த கட்டிடத்தில் கமி‌ஷனர் அலுவலகத்தை முதலில் செயல்பட வைத்தனர்.

1856-ம் ஆண்டு போலீஸ் சட்டம் இயற்றப்பட்ட பிறகு முதல் கமி‌ஷனராக லெப்டினட் கர்னல் போல்டர்சன் நியமிக்கப்பட்டார். இதன் பிறகு சில மாதங்கள் கழித்து அந்த பங்களாவை 21 ஆயிரம் ரூபாய்க்கு காவல்துறை வாங்கி சொந்தமாக்கியது.

அதன் பிறகு அந்த கமி‌ஷனர் அலுவலகம் எழும்பூரின் அடையாளமாகவே திகழ்ந்தது. பழங்கால தோற்றத்துடன் கம்பீரமாக கமி‌ஷனர் அலுவலகம் காட்சியளித்த போதிலும் இட நெருக்கடி காரணமாக அங்கிருந்து மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை வேப்பேரி ஈ.வெ.கி.சம்பத் சாலையில் செயல்பட்டு வந்த பழைய போக்குவரத்து போலீஸ் அலுவலகத்தை இடித்துவிட்டு அங்கு புதிய கமி‌ஷனர் அலுவலகத்தை கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதன்படி 1.73 லட்சம் சதுரடி பரப்பளவு கொண்ட பகுதியில் 2013-ம் ஆண்டு ரூ.25 கோடியில் 8 மாடிகளுடன் புதிய கமி‌ஷனர் அலுவலகம் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.

இதன்பிறகு பழைய கமி‌ஷனர் அலுவலகம் முற்றிலுமாக களை இழந்து காணப்பட்டது. விசாரணைக்காக குற்றவாளிகளை அழைத்து சென்று வைக்கும் இடமாக அது மாறி இருந்தது.

பழைய கமி‌ஷனர் அலுவலகம் செயல்பட்டு வந்த வளாகத்தில் புதிதாக சி.பி.சி.ஐ.டி., சீருடை பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தன. ஆனால் மாளிகை போன்ற தோற்றத்தில் இருந்த பழைய கமி‌ஷனர் அலுவலகம் தனது கம்பீரத்தை இழக்காமல் அப்படியே இருந்தது.

அதனை ரூ.5 கோடி மதிப்பீட்டில் வரலாற்று நினைவுச்சின்னமாக மாற்ற காவல்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த கட்டிடத்தை புதுப்பித்து போலீஸ் அருங்காட்சியகமாக மாற்றும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாகவே நடைபெற்று வந்தன.

இந்தநிலையில் அருங்காட்சியகப் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார்.

போலீஸ் அருங்காட்சியகம் தமிழக காவல்துறையின் பெருமையை பறைசாற்றும் வகையில் வரலாற்று பெட்டகமாக மாறி இருக்கிறது. 150 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள், குண்டுகள், சிறியரக பீரங்கிகள் ஆகியவை அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது.

எழும்பூர் போலீஸ் அருங்காட்சியகம்வெளி மாநிலங்களில் போலீசார் பயன்படுத்திய உடைகள், பிஸ்டல், ரிவால்வர் போன்ற துப்பாக்கிகளும், ஏ.கே.47 ரக துப்பாக்கிகளும் அருங்காட்சியகத்தில் இடம்பெற்று காவல்துறையின் வீரத்தை பறைசாற்றுகின்றன.

காவல்துறையில் இசைக்குழு தனியாக செயல்பட்டு வருகிறது. இந்த இசைக்குழுவில் இடம்பெற்ற பழமையான இசைக் கருவிகள், காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட பழைய கேமராக்கள், குண்டு துளைக்காத கார்கள், வாக்கி டாக்கிகள், கைதிகளுக்கு போடப்பட்ட பல்வேறு வகையான கைவிலங்குகள், காவல்துறையினர் பயன்படுத்திய சைக்கிள், பழமையான ரோந்து வாகனங்கள் ஆகியவையும் அருங்காட்சியகத்தின் பெருமையை உணர்த்தும் வகையில் இடம்பெற்றுள்ளன.

சுதந்திரத்திற்கு முன்பு தொடங்கி தற்போது வரையில் காவல்துறையின் முழுமையான வரலாற்றை இன்றைய இளம்தலைமுறையினர் தெரிந்து கொண்டு பயன் அடையும் வகையில் இந்த அருங்காட்சியகம் உருவாகி இருக்கிறது.

சென்னையை புரட்டிப் போட்ட வெள்ளப்பெருக்கு

1799-ம் ஆண்டு கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட சம்பவம் முதல் 2015-ம் ஆண்டு சென்னையை புரட்டிப் போட்ட வெள்ளப்பெருக்கு வரை அத்தனை சம்பவங்களும் நினைவுச் சின்னங்களாக தொகுக்கப்பட்டுள்ளன.

1965-ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம், 1972-ல் நடைபெற்ற எல்.ஐ.சி. கட்டிட தீவிபத்து, 1982-ம் ஆண்டில் சென்னை பாண்டிபஜாரில் நடைபெற்ற துப்பாக்கிசூடு சம்பவம் உள்ளிட்டவையும் பழைய சம்பவங்களின் தொகுப்புகளாக இடம்பெற்றுள்ளன.

1991-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு, 2004-ல் சந்தன மரக்கடத்தல் மன்னன் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், மவுலிவாக்கத்தில் 11 மாடி அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது உள்ளிட்ட சம்பவங்களும் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெற்றுள்ளன.

மெரினா கடற்கரையில் அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட 4 சக்கர ரோந்து வாகனம், உயர் போலீஸ் அதிகாரிகள் பயன்படுத்திய பழங்கால சொகுசு வாகனம் ஆகியவை அருங்காட்சியகத்தின் நுழைவு வாயிலில் இன்று பிரமாண்டமாக காட்சி அளித்தது.

1982-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்ட புகைப்படம், வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட போது போலீஸ் அதிகாரி விஜயகுமார், சக அதிகாரிகளுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் ஆகியவையும் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை கண்டறிவதற்கு காவல்துறையில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், அந்த காலம் முதல் தற்போது வரையில் போலீசார் பயன்படுத்தும் அனைத்து ஆயுதங்கள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

1939-ம் ஆண்டில் இருந்து காவலர்களுக்கு வழங்கப்பட்ட பதக்கங்கள், காவல்துறையால் மீட்கப்பட்ட பழங்கால வாள்கள், பழம்பெருமை வாய்ந்த சிலைகள் ஆகியவையும் அருங்காட்சியகத்தின் பெருமையாக மிளிர்கின்றன.

இதன் மூலம் எழும்பூரின் புதிய அடையாளமாக போலீஸ் அருங்காட்சியகம் இனி திகழும் என்றால் அது மிகையாகாது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More