“அதிகாலை, சேவல் கூவியது, காகங்கள் கரைந்தன, இரவு இரை தேடச் சென்ற பெற்றோரைக் காணாமல் குஞ்சுகள் கத்தின, தூரத்தில் எங்கேயோ கோயில் மணி ஓசை கேட்டது, கடகம் நிறைய புடுங்கிய கத்தரிபிஞ்சுகளையும், வெண்டைக் காய்களையும் தலையில் சுமந்த படி சின்னத்தம்பி சந்தைக்கு ஓட்டமும் நடையுமாக போய்க்கொண்டருந்தார்“ எண்டு தமிழ் பாடத்தை வாசிக்க மணி அடிச்சுது.
பள்ளிக்கூடத்தில மிகச்சிறந்த சந்தோசம் எண்டால், மணி அடிச்ச உடன பாய்ஞ்சு போய் முதலாவதா சைக்கிளை எடுத்துக் கொண்டு போறது தான். கொண்டு போய் விடேக்கயே டக்கெண்டு எடுக்கத் தக்கதாத்தான் விடிறது. மத்தியான வெய்யில், கடைசிப் பாடம் அதுகும் interval இல தண்ணி மட்டும் குடிச்சிட்டு இருக்கேக்க வகுப்பை விட சைக்கிள் park ஐத் தான் பாக்கத் தூண்டும்.
பள்ளிக்கூடம் விடப் போகுது எண்டதுக்கு சில அறிகுறிகள் இருக்கும். மணிக்கூடு கட்டிற வாத்திமார் கையைத் திருப்பிப் பாப்பினம், சிலர் மெல்ல staff room பக்கம் பாத்தபடி நிப்பினம், கடைசிப்பாடம் free ஆக இருக்கிறவை staff room ஆல வெளிக்கிட்டு மெல்ல நடக்கத் தொடங்குவினம் . Cycle park duty prefects ம், traffic duty interact club காரரும் வகுப்பால வெளிக்கிட்டு போக நாங்களும் பாடம் முடியாமலே புத்தகத்தை மூடி வைச்சிட்டு bag ஐ அடுக்கத் தொடங்கீடுவம்.
பள்ளிக்கூட வாசல் வரை சைக்கிளைத் தள்ளிக்கொண்டு ஓடிப் போய் கேட் தாண்டி வெளீல வந்தோண்ண பாஞ்சு ஏறினா நேர வீடு தான்.
பள்ளிக்கூடத்தில மட்டும் தான் வரிசையும் ஒழுங்கும் ஒழுங்காகவே இருக்கும் மற்றும் படி தள்ளல் முள்ளல் தான்.
ஆனாலும் எங்களை திருப்பியும் கால்கடுக்க வரிசையில நிக்க வைச்சது நிவாரணம் தான் . நிவாரணம் தாறதை ஊருக்கு எல்லாம் காட்ட நாலு சந்தீல நடு றோட்டில வைச்சுத்தான் தருவாங்கள். இப்படியான நல்ல வேலைக்கு வீட்டு representative நான் தான். போய் நிக்கிறதில இருக்கிற சங்கடம் வெய்யிலும் மழையும் இல்லை, எங்கடை batch பெட்டைகள் ஆரும் றோட்டால போகேக்க பாக்கினமோ எண்டது தான் . அவளவையைக் கண்டால் திரும்பி நிண்டு முகத்தை மறைச்சு , அவள் பாத்திடுவாளோ எண்ட கவலையோட கொஞ்சம் திரும்பிப் பாக்க இவ்வளவு நாளாப் பாக்காதவளவை எல்லாம் இப்ப தான் பல்லைக்காட்டி சிரிப்பாளவை . கொஞ்சம் கொஞ்சமா queue அசைய நிவாரண அட்டை, குடும்ப அட்டை, கூப்பன் கார்ட், விதானையார்டை பதிவு எண்டு எல்லாத்தையும் எடுத்து அடுக்கிப் கொண்டு போக, கேள்வி தொடங்கும், எல்லாமா எத்தினை பேர் , சின்னப்பிள்ளைகள் எத்தினை பேர், ஏலாதாக்கள் எத்தினை எண்டு எல்லாக் கேள்விக்கும் நூறு marks எடுத்துக்கொண்டு போனால் தான் கனக்கப் பரிசு கிடைக்கும்.
Prize Giving இல நல்ல marks எண்டால் நாலைஞ்ச தரம் ஏறுவம் இங்க நல்ல marks எண்டால் நாலைஞ்சு சாமாங்கள் தருவினம். அப்ப shopping bag பெரிசா இல்லை, பெரிய உரப்பைக்குள்ள சின்ன உரப்பை, துணி bag, மாட்டுத்தாள் பைகள் கொஞ்சம், தேங்காய் எண்ணைக்கு ஒரு போத்தில், மண்ணெண்ணைக்கு என்னொண்டு கொண்டு போறது. போனமுறை கொண்டு போன அதே set ஓட இந்த முறை போனால், கௌபியும் தாறாங்களாம் எண்டு கேள்ளவிப்பட யார்டையாவது ஒரு extra bag கடன் வாங்கி குடுத்த எதையும் விடாமல் வாங்கிக்கொண்டு போயிடுவம்.
கோட்டை அடிபாடு தொடங்கி ரெண்டு தரம் போட்டு வந்த அவசர இடம் பெயர்வுக்குப் பிறகு எல்லாரும் எப்பவும் எதுக்கும் ரெடியாத் தான் இருந்தவை. பிரச்சினை ஏதும் வரப்போதெண்டா எல்லா வீட்டிலேயும் எப்பவும் அவசரகாலச்சட்டம் தான். காலமை மட்டும் பால் தேத்தண்ணி அதுகும் சீனீ தொட்டுக் கொண்டு, பின்னேரம் பிளேன்ரீ பனங்கட்டியோட மட்டும். சாப்பாட்டு menu எல்லாம் மாறீடும்.
மூண்டு மாதத்துக்கு சமாளிக்கக் கூடிய சாமாங்கள் stock பண்ணிறது , உறுதிகளும், நகையும் கவனமா கட்டி வைச்ச பாக் அம்மாமாரின்ட கையிலயே எப்பவும் வைச்சிருக்கறது, இடம் பெயரந்தா கொண்டு போறதுக்கு எண்டு bags கட்டி வைக்கிறது எண்டு எல்லாரும் எப்பவும் ஆயத்தமாய்த்தான் இருப்பினம். ஆனாலும் அந்த இடம் பெயர்வுகள் அப்ப ஒரு சொந்தக்காரர் வீட்டில போய் holiday க்கு நிண்ட மாதிரித்தான் எங்களுக்கு இருந்தது. புது இடம், புது friends, புது விதமான விளையாட்டுக்கள் எண்டு கலக்கினாங்கள் அப்பவே.
வெள்ளைப்பச்சை அரிசி, பருப்பு, மா, சீனி எண்டு தனித்தனி பாக்கில வாங்கி அதை பெரிய உரப்பையில போட்டிட்டு, சின்னப்பிள்ளை இருக்கிற வீட்டுக்கு மட்டும் குடுத்த பால்மாவை வாங்கி உரப்பையை கட்டீட்டு மணந்து பாத்து தேங்காய் எண்ணைப் போத்திலைக் சரியாக் குடுத்திட்டு பாத்தா மண்ணெண்ணைப் போத்திலில நிறமே இல்லாத மண்ணைண்ணையும் தந்திச்சினம். நீலம் , பிங் எண்டு ரெண்டு நிறத்தில பாவிச்ச மண்ணெண்ணை மாதிரி இல்லாமல் அஅதை விட்டா திரி எல்லாம் கருகிப் புகைதான் வரும். எல்லாச் சாமாங்களையும் கவனமா வீட்டை கொண்டு வர, அண்டைக்கு மட்டும் வீட்டை ராஐ மரியாதை ஏதோ உழைச்சுக் கொண்டு வந்து தந்த மாதிரி.
இந்த இடம்பெயர்வு நாள்களில் வைரமுத்து இருந்திருந்தால் எழுதி இருப்பார்
“ இடம்பெயர்ந்து பார் “
உற்றம் உறவு பலம் பெறும்
ஒரு நேரம் உணவு என்பது கலியாண வீட்டுச் சாப்பாடு போல் இருக்கும்
ஒரு ஒற்றைப் பேப்பர் ஓராயிரம் கதை சொல்லும்
கனத்த வெய்யில் காற்றோடு இதம் தரும்
சைக்கிள் உழக்கும் கால்களுக்கு தூரங்கள் துச்சமாகும் .
காய்க்கும் மரம் எல்லாம் கறிக்கு உதவும்
மூண்டு நேரம் குளிப்பது முக்கிய தொழிலாகும்
GS எல்லாம் GA ஆவார்கள்
பீற்றூட் கூட chicken மாதிரி இருக்கும்
மீன் விற்பவன் உற்ற நண்பன் ஆவான்
பாண் விப்பவன் தெய்வம் ஆவான்
Cards உம் Carrom ம் காலத்தை வெல்லும்
கரண்ட் இல்லை என்பதே கவனிக்கப்படாது.
இந்த ஆரம்பத்துக்குப் பிறகு எல்லா இடமும் வரிசையும் கையேந்தலும் வழக்கமாகவே போட்டுது. சபை போட்டு வைச்ச கலியாணத்தில எல்லாம் buffet வைக்க தட்டோட கையேந்தி நிண்டம். சபை வைக்காத்துக்கு சப்பைக் காரணங்கள்; ஆக்கள் இல்லை, இப்ப எல்லாம் கஸ்டம், எல்லாம் வயது போனதுகள் இருந்து எழும்பாதுகள் எண்டு சாட்டுக்கள் வேற. நல்ல வடிவான hall எண்டு நாலு மாடி ஏத்தின கிழடுகள் முழங்கால் மடக்கி சாப்பிட இருக்கிறது தான் கஸ்டமாத் தெரிஞ்சுது.
கையை உயர்தாமல் அன்று ஏந்தத் தொடங்கிய நாங்கள் என்னும் பிறங்கை பின்னிற்க முழங்கை மடித்துத்தான் நிற்கிறோம்.
Dr. T. கோபிசங்கர்
யாழப்பாணம்
சுவடுகள் இதுவரை வெளியான தொடர்கள்
சுவடுகள் 01 | இது ஒரு சுளகு மான்மியம் | டாக்கடர் ரி கோபிசங்கர்
சுவடுகள் 02 | புட்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 04 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 05 | ‘கள்ள மாங்காயின் சுவை தெரியுமா?’ | மா(ன்)மியம் | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 06 | ஒரு குமரை கரை சேக்கிறது | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 07 | போதி மரம் | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 09 | ஆயிரம் பொய் சொல்லி | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 10 | கலியாணத்தண்டு மழை | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 11 | கனவிலேம் நித்திரை | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 12 | துடக்கில்லாத கற்கண்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 13 | கம்மாரிசு | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 14 | ஹர்த்தால் | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 15 | அன்னபூரணி | டாக்கடர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 16 | இதில் போனால் சங்கடம் (இ.போ.ச) | டாக்கடர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 17 | உயர்திணை | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 18 | “அரிசிப் பொதியோடும் வந்தீரோ” | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 19 | பிளவு | டாக்டர் ரி. கோபிசங்கர்