கிரியாட்டினை பற்றி எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டும். உங்கள் சிறுநீரகம் சரியாக இயங்கிக்கொண்டிருப்பதை வெளிப்படுத்தும் ‘இன்டிகேட்டராக’ கிரியாட்டின் அளவு இருக்கிறது.
உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்றால், ரத்தத்தில் கிரியாட்டின் எவ்வளவு இருக்கிறது என்பதை கண்டறியும் பரிசோதனையை செய்யும்படியும் டாக்டர் பரிந்துரைப்பார். அந்த பரிசோதனைக்கான காரணம் என்ன என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. கிரியாட்டினை பற்றி எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டும். உங்கள் சிறுநீரகம் சரியாக இயங்கிக்கொண்டிருப்பதை வெளிப்படுத்தும் ‘இன்டிகேட்டராக’ கிரியாட்டின் அளவு இருக்கிறது.
நமது கிட்னி சீராக இயங்கிக்கொண்டிருந்தால், ரத்தத்தில் கிரியாட்டின் அளவு சரியாக இருக்கும். கிட்னியின் செயல்பாட்டில் ஏதாவது கோளாறு ஏற்படும்போது ரத்தத்தில் கிரியாட்டின் அளவு உயர்ந்துவிடும். அதனால் கிரியாட்டின் அளவு அதிகரிப்பது சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கிறது.
உடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய ஒருவகை கழிவின் பெயர்தான் கிரியாட்டின். தசை செல்களின் சிதைவில் இருந்து இது உற்பத்தியாகிறது. கிட்னி சீராக இயங்கினால், அதுவே ரத்தத்தில் இருந்து கிரியாட்டினை பிரித்து சிறுநீர் வழியாக வெளியேற்றும். இது இயல்பாக நடந்துகொண்டிருக்கும்போது ரத்தத்தில் கிரியாட்டின் அளவு சீராக இருக்கும். இயல்பாக நடக்காவிட்டால் கிரியாட்டின் அளவு உயர்ந்துவிடும்.
கிரியாட்டின் 0.8 முதல்1.4 மில்லி கிராம் வரை இருந்தால் அது சீரான அளவு. சிறுநீரக செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும்போது அதன் அளவு அதிகரித்துவிடும். அசாதாரண அளவுக்கு அதிகரித்துவிட்டால், அது கிட்னி பழுதாகிவிட்டதன் அறிகுறியாக இருக்கும். அதனால்தான் சாதாரணமாக ரத்தத்தை பரிசோதிக்கும்போதெல்லாம் கிரியாட்டின் அளவையும் பரிசோதிக்க டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
உயர் ரத்த அழுத்தத்தை போன்று சிறுநீரக நோயும் நிசப்தமான கொலையாளியாக வர்ணிக்கப்படுகிறது. ஏன்என்றால் தொடக்க நிலையில் இது எந்த அறிகுறியையும் வெளிப்படுத்துவதில்லை. சிறுநீரக பாதிப்பு ஒருவருக்கு ஏற்படுகிறதென்றால் தொடக்கத்திலே அதன் அறிகுறி எதையும் அவரால் உணரமுடியாது. குழந்தைகளுக்கு 2.0 மில்லி கிராமுக்கு அதிகமாகவும், பெரியவர்களுக்கு 5.0 மில்லிகிராமுக்கு அதிகமாகவும் இருந்தால் அவர்களது கிட்னி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.
கிட்னியின் இயக்க செயல்பாடு குறையும்போது அதன் அறிகுறிகள் ஆளுக்கு ஆள் மாறுபடும். உடலில் தன்ணீர்த்தன்மை குறையும். சோர்வு, உடல் உறுப்புகளில் வீக்கம், பாதங்களிலும்- முகத்திலும் நீர்கோர்த்தல், சுவாசிப்பதில் தடை ஏற்படுதல், சருமம் கடுமையாக உலர்ந்துபோகுதல், வாந்தி, தலைச்சுற்றுதல் போன்றவை இதன் பெரும்பாலான அறிகுறியாக இருக்கும்.
எந்த பிரச்சினையால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதித்திருந்தாலும் கிரியாட்டின் அளவு அதிகரித்துவிடும். சிறுநீரக பாதிப்பு சமீபத்தில் ஏற்பட்டிருக்கிறதா? வெகுநாட்களாக இருந்துகொண்டிருக்கிறதா? என்பதை பரிசோதித்து தெரிந்துகொள்ளவேண்டும். பாதிப்பு சமீபத்தில் ஏற்பட்டிருந்தால் சிகிச்சை பெற்று அதில் இருந்து மீள்வது எளிது.
சிறுநீரில் புரோட்டினான அல்புமின் அளவு அதிகரிப்பதும் கிட்னியின் இயக்கத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை உணர்த்தும். சிறுநீரில் அல்புமின் அளவு அதிகமாக இருந்தால் உயர் ரத்த அழுத்தத்தினாலோ, நீரிழிவாலோ கிட்னியின் இயக்கம் பாதிக்கப்பட்டிருப்பதாக எடுத்துக்கொள்ளலாம். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் அதை உறுதி செய்யலாம்.
குறிப்பிட்ட சிலவகை மருந்துகளை உட்கொள்ளுதல், சிறுநீரக தொற்று, சிறுநீர் பாதையில் ஏற்படும் தடை, தசைகளில் அதிகமாக ஏற்படும் சிதைவு போன்றவைகளாலும் ரத்தத்தில் கிரியாட்டின் அளவு அதிகரிக்கும். தொடர்ச்சியாக அளவுக்கு அதிகமாக மாமிச உணவுகள் உட்கொண்டாலும் கிரியாட்டின் அளவு கூடும்.
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் இருப்பவர்களும் பரம்பரை வழியாக கிட்னி நோயால் பாதிக்கப்படுபவர்களும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை ரத்தத்தில் கிரியாட்டின் அளவை பரிசோதிக்கவேண்டும்.
நன்றி | மாலை மலர்