80களின் தொடக்கத்திலேயே ‘காதல் இளவசரன்’ என்று அழைக்கப்பட்டவர் கமல் ஹாசன்.
ஒரு குறிப்பிட்ட காலம் வரை காதல் இளவரசனாக வலம் வந்த கமல் பின்னர் உலக நாயகனாகி விட்டார். இப்போதொல்லாம் அவர் காதல் இளவரசன் என அழைக்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக உலக நாயகன் என்றே அழைக்கப்படுகிறார். சொல்லப் போனால் கமல்ஹாசன், காதல் இளவரசன் என்கிற பட்டத்தை போட்டு சில வருடங்களாகி விட்டது.
இந்நிலையில் நீண்ட காலமாக தன்னகத்தே வைத்துக்கொண்டிருந்த ‘காதல் இளவரசன்’ பட்டத்தைத் தூக்கி ஆர்யாவிடம் கொடுத்து விட்டார் கமல் ஹாசன்.
ஆர்யா, நயன் தாரா, ஜெய், நஸ்ரியா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கிய ‘ராஜா ராணி’ 100வது நாள் வெற்றி விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் ஆர்யா, நயன் தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ், அட்லி, ஏ.ஆர்.முருகதாஸ் உள்படம் ‘ராஜா ராணி’ படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். மேலும் விழாவில் கமல்ஹாசன், ஷங்கர், பி.சி.ஸ்ரீராம் ஆகியோர் கலந்துகொண்டு ஆர்யா, நயன்தாராவின் ரொமான்ஸ் பட வெற்றியை வாழ்த்தி பேசினர்.
இந்த வெற்றி விழாவில் பேசிய கமல், “இத்தனை நாட்களாக காதல் இளவரசன் பட்டம் என்னிடமே இருந்து வந்தது. இப்போது அதை ஆர்யாவுக்கு கொடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. இனிமேல் அவர்தான் காதல் இளவரசன்” என்று மகுடமே சூட்டிவிட்டார். ஆனால் ‘காதல் இளவரசன்’ என்ற பட்டத்துக்கு நூறு சதவீதம் பொருத்தமானவர்தான் ஆர்யா. அதுதான் கமல் சரியான ஆளாக பார்த்து பட்டத்தை சூட்டியிருக்கிறார்.