Saturday, May 4, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ‘துள்ளுவதோ இளமை’ தொடங்கி, ‘வடசென்னை’ வரை.. திறமையால் வசீகரித்த கலைஞன்

‘துள்ளுவதோ இளமை’ தொடங்கி, ‘வடசென்னை’ வரை.. திறமையால் வசீகரித்த கலைஞன்

8 minutes read

தனுஷ்

கொக்கி குமார் நிற்க முடியாமல், கீழே விழாமல், முகம் முழுவதும் ரத்தத்தோடு பார்த்துக்கொண்டிருப்பான். ‘தோ பார்ரா, இது நிக்கிது!’ எனப் பின்னால் மிதிப்பான் ஒருவன். தனுஷ் வாழ்க்கையின் தொடக்க காலத்தை ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் இப்படித்தான் அணுகியது.
‘துள்ளுவதோ இளமை’ படத்தின் முதல் காட்சி. ராணுவத்தில் பணியாற்றச் சென்ற பத்தாண்டுகளுக்குப் பிறகு, தான் படித்த பள்ளிக்கூடத்தைக் காணவரும் அதிகாரியின் அறிமுகத்தோடு தொடங்கும். ஆனால், ராணுவ அதிகாரிக்கான எந்தத் தடயமும் இல்லாமல், ஒல்லியான தேகத்தோடு, தொள தொளவெனத் தைக்கப்பட்ட மிலிட்டரி யூனிஃபார்மோடு, ஒட்டவைத்த மீசையோடு வந்து நிற்பார், அவர்.
துள்ளுவதோ இளமை
துள்ளுவதோ இளமை

சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் வளர்க்கப்படும் டீன்ஏஜ் குழந்தைகளின் கதை ‘துள்ளுவதோ இளமை’. முதல் காட்சியில் அறிமுகமான அந்த ராணுவ அதிகாரி, தனுஷ். இன்றும் பொருத்தமில்லாமல் இருக்கும் அந்த முதல் காட்சி பலரையும் அன்றைய காலகட்டத்தில் சிரிக்க வைத்திருக்கும்.

அடுத்ததாக, தன் அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் ‘காதல் கொண்டேன்’. குழந்தைப் பருவத்தையும், பால்யத்தையும் தொலைத்த இளைஞன், அதை ஒரு பெண்ணிடம் கண்டுகொள்வதோடு, அவளைக் காதலிக்கும் கதை. ‘திவ்யா! திவ்யா!’ என வினோத் கதாபாத்திரத்தில் தனுஷ் உருகும்போது, ‘துள்ளுவதோ இளமை’யைக் கண்டு சிரித்தவர்கள், அதனை மறந்து கைத்தட்டி ஆரவாரம் செய்திருப்பார்கள்.

‘என்னுடைய தொடக்ககாலத்தில் எனது தோற்றத்திற்காகவும், உருவத்திற்காகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டேன். அந்த வயதில் அதனை எப்படி அணுகுவது என்பதுகூட எனக்குத் தெரியவில்லை.’
திருடா திருடி
திருடா திருடி

அடுத்ததாக வெளிவந்தது, ‘திருடா திருடி.’ அந்தப் படத்தின் ‘மன்மத ராசா’ பாடல் ஒலிக்காத இடங்களே தமிழகத்தில் அப்போது இல்லை என்னும் அளவுக்கு இருந்தது அதன் வெற்றி. சாதாரண மிடிள் கிளாஸ் இளைஞனின் வாழ்க்கையை யதார்த்தமாக வெளிப்படுத்தியிருப்பார், தனுஷ்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மிடிள் கிளாஸ் இளைஞனும் தங்களை தனுஷாகக் கற்பனை செய்துகொண்டார்கள். ‘துள்ளுவதோ இளமை’ தொடங்கி, ‘சுள்ளான்’, ‘திருவிளையாடல் ஆரம்பம்’, ‘பொல்லாதவன்’, ‘யாரடி நீ மோகினி’, ‘படிக்காதவன்’ இறுதியாக அனைவரையும் ஈர்த்த ‘வேலையில்லா பட்டதாரி’ வரை இதே ஃபார்முலா தனுஷுக்குக் கைகொடுத்தது.

‘புதுப்பேட்டை.’ தனுஷ் வாழ்க்கையில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் மிக முக்கியமான திரைப்படம். சுவர் ஏறித் தப்பிக்கத் தெரியாமல், ரவுடிகளுக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட ‘பொடிப் பையன்’ கொக்கி குமாராக அழுதுகொண்டிருப்பார், தனுஷ். ஒட்டுமொத்த ரவுடிக் கும்பலும் கொக்கி குமாரை அடித்து நொறுக்கும். அடித்து அடித்து டயர்டாகி, முடித்து விடலாம் என முடிவெடுத்து நடுவில் நிற்கவைப்பார்கள்.

அத்தனை அடி வாங்கிய பிறகும், கொக்கி குமார் நிற்க முடியாமல், கீழே விழாமல், முகம் முழுவதும் ரத்தத்தோடு பார்த்துக் கொண்டிருப்பான். ‘தோ பார்ரா, இது நிக்கிது!’ எனப் பின்னால் மிதிப்பான் ஒருவன். தனுஷ் வாழ்க்கையின் தொடக்க காலத்தை ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் இப்படித்தான் அணுகியது.

புதுப்பேட்டை
புதுப்பேட்டை

அடுத்து வரும் காட்சியையும், பின்னாள்களில் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றதையும் ஒப்பிட்டுக் கொள்ளலாம்.

தமிழக இளைஞர்களுக்கும், அவர்களின் அப்பாக்களுக்கும் இடையிலான உறவுகளை தனுஷ் நடிப்பில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் பேசின. அப்பா வைத்த பெயரை மாற்றிய ‘சுள்ளான்’ சுப்ரமணி, ராதாகிருஷ்ணன் ‘ராக்கி’, அண்ணனின் வேலையைச் செய்யத் தவறி, அப்பாவிடம் திட்டு வாங்கும் ‘திருடா திருடி’ வாசு, அப்பா சொல்வதை எதையுமே கண்டுகொள்ளாமல் திரியும் ‘திருவிளையாடல் ஆரம்பம்’ திருக்குமரன், குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து அப்பாவை கை ஓங்கிவிட்டு, அதே அப்பாவை அடித்தவனைப் புரட்டியெடுக்கும் ‘பொல்லாதவன்’ பிரபு, ‘தம்பிக்கு மட்டும் ஹீரோ பேரு, எனக்கு மட்டும் வில்லன் பேரு!’ என சேட்டை செய்யும் ‘வி.ஐ.பி’ ரகுவரன் என தனுஷ் கேரக்டர்களிடம் வெளிப்படும் தந்தை-மகன் உறவு யாரும் செய்யாதது.
வி.ஐ.பி
வி.ஐ.பி

அம்மாவுடனான மகன்களின் பந்தமும் தனுஷ் படங்களில் இயல்பாக வெளிப்பட்டன. ‘அம்மான்னா யாருக்குத்தான் புடிக்காது?’ எனக்கூறும் கொக்கிக் குமாருக்கும், ‘கண்ணான கண்ணே! என் தெய்வப் பெண்ணே’ என அம்மாவின் மரணத்தை நினைத்து அழும் ரகுவரனுக்கும் தாய்ப்பாசம் ஒன்றுதான். தாய்ப்பாசம் ஒன்றை மட்டுமே நம்பியே வெளிவந்தது, ‘பரட்டை என்கிற அழகுசுந்தரம்’. பல மேடைகளில் தன் அம்மா மீதான பேரன்பை வெளிப்படுத்தி, பார்ப்பவர்கள் அனைவரையும் கண்ணீரில் திளைக்க வைத்திருப்பார், தனுஷ்.

ஒரே மாதிரியான மிடிள் கிளாஸ் இளைஞனின் வேடத்தில் வெரைட்டி காட்டுவதும், வெவ்வேறு பாத்திரங்களை ஏற்று அதில் ‘மாஸ்’ காட்டுவதும் தனுஷுக்குக் கைவந்த கலை. சில ஆண்டுகள் முன்பு வரை தமிழ் சினிமாவின் வழக்கமாக இருந்த ‘stalking’ தனுஷ் படங்களில் அதிகமாக இடம்பெற்றிருந்தது, அவர் மீதான விமர்சனமாக இன்று வரை வைக்கப்படுகிறது.

‘ராஞ்சனா’ படத்திற்குப் பிறகு, என் திரைப்படங்களில் ‘stalking’ இருக்கக் கூடாது என்பதை முடிவுசெய்தேன்.

தனுஷ்

பொல்லாதவன்
பொல்லாதவன்

‘பொல்லாதவன்’ தனுஷின் கரியரில் மிக முக்கியமான திரைப்படம். வெற்றி மாறன் – தனுஷ் என்ற தமிழ் சினிமாவின் முக்கியமான காம்போ அறிமுகமானது, இந்தப் படத்தில்தான். நுகர்வு கலாசாரத்தால் வீட்டை எதிர்த்து ‘பைக்’ வாங்கும் இளைஞன், அதைத் தொலைத்துவிட்டு மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்வதாக அமைந்த அந்தக் கதையை, தனுஷ் தவிர்த்து வேறு எந்த நாயகனும் நடிக்க முடியாதது.

சில ஆண்டுகளுக்குப் பின், தனுஷ் – வெற்றி மாறன் கூட்டணி மீண்டும் ‘ஆடுகளம்’ படத்தில் இணைந்தபோது, தனுஷ் ‘கே.பி.கருப்’பாக மாறி, சேவல்களைச் சண்டைக்கு விட்டுக்கொண்டிருந்தார். கே.பி.கருப்பு மதுரையிலிருந்து வெளியேறுவதாக முடியும் அந்தப் படம், அதோடு முடியாமல் டெல்லி வரை சென்றது. தனுஷ் கைகளில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அப்போது தவழ்ந்தது.

ஆடுகளம் - தேசிய விருதுகள் பட்டியல்.
ஆடுகளம் – தேசிய விருதுகள் பட்டியல்.
58வது தேசிய விருதுகள்

‘ஆடுகளம்’ வெற்றிக்குப் பிறகு, தனுஷ் மீண்டும் கமர்ஷியல் தளத்திற்குள் நீந்திக் கொண்டிருந்தார். அவரின் மனம் கவர்ந்த இயக்குநரான, அண்ணன் செல்வராகவனுடன் இணைந்து ‘மயக்கம் என்ன’ நடித்த பிறகு, தமிழ் இளைஞர்கள் தங்களுக்கான யாமினிகளைத் தேடிக்கொண்டிருந்தார்கள்.

எப்போதும் கனவுகளை சுமந்துகொண்டே திரியும் கலைஞனாக, சீனியரால் ஏமாற்றப்பட்ட ‘ஜீனியஸ்’ போட்டோகிராஃபர் கார்த்திக்காக தனுஷ் நடித்தபோது, அது பல கலைஞர்களைக் கண்கலங்க வைத்தது. இடைவேளைக் காட்சியில், யாமினியோடு பஸ் ஸ்டாப்பில் நின்று அழுவதும், அவர் அதைத் தேற்றுவதும், அந்தக் காட்சியைப் பலரும் தங்கள் இல்லாத காதலிகளிடம் தங்களை ஒப்படைத்துக்கொண்டதாக நினைத்து அழுது தீர்த்தனர். இன்று பலரும் அடைய நினைக்கும் ‘ட்ரெண்டிங்’ என்ற கான்செப்ட் தனுஷ் எழுதி, பாடிய ‘கொலவெறி’ பாடலுக்குப் பிறகுதான் தமிழில் அறிமுகம் ஆனது என்பது மிகப்பெரிய ஆச்சர்யம்.
மயக்கம் என்ன
மயக்கம் என்ன

வேலை கிடைக்காத பொறியியல் பட்டதாரியாகவும், சபிக்கப்பட்ட புகைப்படக் கலைஞனாகவும் தன் வலிகளைக் கடக்கத் தெரிந்த கலைஞன், தனுஷ். நடிப்பு மட்டுமல்ல; ‘எருமைக்குக் கூட புளூ க்ராஸ் இருக்கு; எனக்காக யோசிக்க உயிரா இருக்கு’ எனவும், ‘உலகமே ஸ்பீடா ஓடிப்போகுது; என் வண்டி பஞ்சராகி நிக்கிது’ எனவும் அவரால் எளிமையான பாடல்களை எழுதிப் பாடவும் மிக இயல்பாக முடிகிறது.

இன்று பலரும் அடைய நினைக்கும் ‘ட்ரெண்டிங்’ என்ற கான்செப்ட் தனுஷ் எழுதி, பாடிய ‘கொலவெறி’ பாடலுக்குப் பிறகுதான் தமிழில் அறிமுகம் ஆனது என்பது மிகப்பெரிய ஆச்சர்யம்.

தேர்ந்த நடிகனாக மாறிய பிறகு, உலகம் அவரைக் கொண்டாடியது. பாலிவுட் வரவேற்றது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து, அவருக்கு சமமான வேடத்தில் நடித்தார். ஹாலிவுட் சென்று ‘பக்கிரி’யாகப் பயணித்தார்.

தனுஷ்
தனுஷ்

‘துள்ளுவதோ இளமை’யைக் கண்டு சிரித்தவர்களுக்கு, ‘பவர் பாண்டி’ வேறொரு பதிலைத் தந்தது. இளைஞர்களைக் குறிவைத்து, முன்னணி இயக்குநர்கள் சினிமா இயக்கி வந்தபோது, தனுஷ் மட்டும் ரிட்டையர்டான ராஜ்கிரணை வைத்து ஃபீல்குட் படம் எடுத்து, அதிலும் நல்ல பெயர் வாங்கினார்.

‘அடுத்தவருக்குத் தீங்கு விளைவிக்காமல், கடின உழைப்பைக் கொடுத்து, என்னால் முடியும் என்ற நம்பிக்கையை விடாமல் பணியாற்றினால், நிச்சயம் வெற்றியடைய முடியும்!’

மிகக்குறைந்த பட்ஜெட் திரைப்படத்தில் சினிமாவுக்குள் நுழைந்த தனுஷ், தற்போது தயாரித்துள்ள திரைப்படங்களின் எண்ணிக்கை பதினைந்துக்கும் மேல்! நடிகனாகவே அங்கீகரிக்கப்படாத கலைஞன் ஒருவன், தானாக மேலெழுந்து, இன்று கோடிக்கணக்கான ரசிகர்களோடு இருப்பதும், சினிமாவின் முக்கியமான துறைகள் அனைத்திலும் முத்திரை பதிப்பதும் பெரும் சாதனை.

அந்தச் சாதனையைத் தொடர்ந்து நிகழ்த்தி வரும் தனுஷுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

எழுதியவர்- ர.முகமது இல்யாஸ், நன்றி – ஆனந்த விகடன்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More