ஈழத்தின் நீர்வேலியை பூர்வீகமாகக் கொண்ட ரஞ்சித் ஜோசப் தற்போது கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்கிறார். தமிழக திரைப்படங்களில் பணி புரிந்த இவர் சமீபத்தில் இயக்கியுள்ள சினம்கொள் திரைப்படம் உலக தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அண்மையில் ஐரோப்பிய நாடுகளில் இந்த திரைப்படம் காண்பிக்கப்பட்டபோது படத்திற்கு மக்களால் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் போர்க்கால இன அழிப்பு குறித்தவொரு திரைப்படமாக சினம்கொள் அமைகின்றதென விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் த சினம்கொள் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் வழங்கிய விசேட செவ்வி இதோ.
சினம்கொள் திரைப்படம் எப்படி உருவானது.
2017 ஆம் ஆண்டு தாயகத்துக்கு ஒரு டாக்குமேன்டரி செய்வதற்காக நானும் தீபச்செல்வனும் அது சமந்தமாக வேலைகளில் ஈடுப்படும்போதுதான் சினம்கொள் என்னும் கதை எனக்குள் உருவானது. இதை திரைப்படமாக செய்யவேண்டும் என அந்த அடிப்படையில் தான் இப்படத்தை உருவாக்கினோம். அடிப்படையிலே சினம்கொள் திரைப்படத்திற்கான காரணம் வந்து கடந்த முப்பதாண்டுகளாக விடுதலைக்காக போராடிய ஒரு இனம். கடந்த பத்தாண்டுகளாக அந்த போரட்டகளத்திலிருந்து விலகி போவதற்கான சூழல் உருவானதும். அந்த மக்களும் அதிலிருந்து விலகுவதுமாக ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. அது வேண்டும் என்று உருவாக்கப்பட்டுள்ளதா இல்ல அந்த மக்களிடமே இருக்கிறதா என்ற கேள்வியை எங்கள் எல்லார் மத்தியிலும் இருக்கின்றது. ஆனால் என்னை பொறுத்தவரைக்கும், அடிப்படையில் எங்கள் மக்கள் விடுதலைக்கான வேட்கை இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் அதை வேண்டும் என்று அந்த மாயை உருவாக்கின்றார்கள். மற்றது ஒரு விடுதலைக்காக போராடிய போராளி தனது மண்னின் இன்றய நிலையை பார்க்கும்போது. அவனுக்கு வரக்கூடிய சினம், அது மிக பெரிய சினமாகும். ஆக இந்த சினம்கொள் என்பது இப்படியான கருப்பொருட்கள், இப்படியான கேள்விகளை உருவாக்கி கொண்டுதான் உருவானதாக நான் நினைக்கிறேன். இந்த அடிப்படையில் தான் இந்த சினம்கொள் திரைப்படத்தை உருவாக்கினோம்.
சினிமாத்துறையில் எப்படி ஈடுபாடு வந்தது?
சினிமாத்துறையில் ஈடுப்பாடு வந்ததற்கு அடிப்படையில் எனது தாத்தா ஒரு கதைச்சொல்லி. அவரைபோலவே எனக்கு அந்த திறன் இயல்பாகவே அதேபோல கதை சொல்லவேண்டும் என சிறுவயதிலிருந்தே அந்த ஆசை இருந்துகொண்டு வந்தது. அதற்கு பிறகு சினிமா துறையில் ஈடுப்படவேண்டும். பணம், பொருள், புகழ் அடைய வேண்டும் என்று ஆசை எனக்கு இருந்தது. அது எல்லாருக்கும் இருக்கக்கூடிய ஆசைதான். இந்த சினிமாதுறையை மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றவேண்டும் என அடிப்படையான ஒரு காரணம், ஒரு லட்சியநோக்கு உருவானது 2005ம் ஆண்டு தாயகத்துக்கு நான் போயிருந்தபோது. நான் அங்கு சந்தித்த மனிதர்கள், வாழ்வியல்தான். இவ்வளவுக்கான விடுதலை போரட்டத்தை முன்னேடுத்த நடத்தக்கூடிய மகாபெரிய வீரர்களை பார்த்ததும். அவர்களுடைய வாழ்க்கை கதைகளை கேட்டதும், எனக்குள்ளே ஒரு மிகபெரிய மாற்றத்தை உருவாக்கியது. அவர்களுடைய வாழ்க்கையை போரட்டதன்மையை சமூகம் அறிய வேண்டும், இந்த உலகம் அறிய வேண்டும். அதை ஒரு திரைப்படம் ஊடகம் மூலம் இதை கொண்டுபோக வேண்டும் என்று ஆசை எனக்கு தோன்றியது. நான் சினிமாத்துறைக்கு வந்த திரைப்படங்களை உருவாக்கவேண்டும் என்ற ஆசையில் இருந்தாலும் காலப்போக்கில், 2005க்கு பிறகு என்னுடைய விடுதலை போரட்டத்துக்கு நான் ஒரு கலைபோராளியாக மாறவேண்டும் என ஆவல் தான் இன்றும் என்னை இயக்கிகொண்டு இருக்கிறது.
தமிழக திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவம் பற்றி கூறுங்கள்?
தமிழக சினிமாவில் இயக்குனர் சசி அவர்களிடம் நான் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறேன். சொல்லாமலே, ரோஜா கூட்டம் போன்ற திரைப்டங்களை இயக்கியவர். அவருடைய திரைப்படங்களில் பூ என்ற திரைப்படம். எனக்கு தெரிந்து தமிழ் சினிமாவில் ஒரு மிகச்சிறந்த திரைப்படங்களில் அதுவும் ஒன்று. அவரோடு சேர்ந்து கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகள் உதவி இயக்குனராக பணியாற்றிய காலம் வந்து எனது சினிமாத்துறையில் ஒரு மறக்கமுடியாக அனுபவுமாக உள்ளது.
தற்போதைய சினம்கொள் வெளியீடு எந்தளவுக்கு வெற்றியளித்துள்ளது?
தற்போதைய சினம்கொள் வெளியீடு என்பது ஒரு வார்ம்ஆப் வெளியீடு என்று சொல்வார்கள். அதாவது வந்து ஒரு திரைப்படத்திற்கான ஒரு அறிமுக வெளியீடாக தான் உருவாக்கியிருக்கிறோம். கிட்டதட்ட எட்டு நாடுகளில் இந்த திரைப்டத்தை வெளியிட்டுள்ளோம். பரவலாக மக்களிடத்தில் சினம்கொள் திரைப்படம் சென்று அடைந்துள்ளது. மிகப்பெரிய ஒரு எதிர்ப்பார்ப்பையும், ஈழசினிமாவில் ஒரு முக்கியமான படமாகவும் சினம்கொள் மாற்றப்பட்டிருக்கிறது. இந்த வெளியீட்டின் மூலம் வந்து நாங்கள் அடுத்தகட்டமாக செய்யக்கூடிய வெளியீட்டில் ஒரு மிகபெரிய வெற்றியையும், பொருளாதரத்தையும் ஈட்டக்கூடிய சந்தர்ப்பம் எங்களுக்கு உருவாகியிருக்கிறது. இதுவரை நடந்த இந்த வெளியீட்டில் கூட ஒரளவுக்கு பொருளாதர ரீதியாகவும், மக்கள் வரவேற்ப்பில் மிக பெரிய வெற்றியாகவும் சினம்கொள் அடைந்து இருக்கின்றது என்பதுதான் மிகபெரிய உண்மை. இன்று பரவலாக சர்வதேச அளவில் ஈழத்தமிழர் மத்தியில் மிகபெரிய அளவில் சினம்கொள் பேசப்படுவதற்கு இந்த வெளியீடுதான் ஒரு காரணம். அதோடு மட்டுமில்லாமல், சர்வதேச ஊடகங்களான தி கார்டியன், பி.பி.சீ போன்ற பல ஊடகங்கள் சினம்கொள் சமந்தமாக பேச விளைந்ததும். சர்வதேச ஊடகங்களில் அதை பேசப்பட்டு கொண்டிருக்க சூழல் உருவானதும் இந்த வெளியீட்டின் மூலம் தான் நடந்திருக்கிறது. எனவே இதை ஒரு மிகபெரிய வெற்றியாகதான் நாங்கள் கருதுகிறோம்.
நீங்கள் ஏன் ஒரு தமிழக இயக்குனரை வைத்து திரைப்படத்தை இயக்கவில்லை?
தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக திரைப்படங்களை இயக்கவேண்டும் என்பது எனது என்னம். அந்த முயற்சிகள் தொடர்ந்து செய்து கொண்டேதான் இருப்பேன். என்னை நான் ஒரு ஈழத்திரைப்பட இயக்குனராக அடையாளப்படுத்தவே நான் விரும்புகிறேன். ஏன்னென்று சொன்னால் எனது தாயகதேசமான ஈழம். ஈழத்திலிருந்து வரக்கூடிய ஒரு இயக்குனராகதான் இந்த உலகத்துக்கு நான் அறிமுகமாக விரும்புகிறேன். அடிப்படையில் பல வாய்ப்புகள் தமிழக சினிமாவில் திரைப்படம் இயக்க வாய்ப்பு வந்தாலும். சில காரணங்களால் தடைப்பட்டு போனது ஆனால் இந்த சினம்கொள் திரைப்படத்தை உருவாக்கியபோது. இந்த வாய்ப்பை தமிழக திரைப்படங்களில் நான் பயன்படுத்தி இயங்க வாய்ப்பு எனக்கு இருந்தது. ஆனாலும் இந்த வாய்ப்பு எனது தாய்மண்னின் கதைகளை சொல்லவே பயன்படுத்திக் கொண்டேன். மற்றது தமிழ் சினிமாவில் விஜய்சேதுபதி, விஷால் இவர்களோடு இரண்டு திரைப்படங்களில் வேலை செய்யவதற்கான வாய்ப்புகள் இருந்தது. அது சிலபொருளாதார சிக்கல்களால் இடைப்பட்டு போயிருக்கிறது. இருந்தாலும் வரும் காலங்களில் நிச்சியமாக தமிழகத்தில் சினிமா படங்களை இயக்குவேன் என்பது உண்மை.
தமிழக சினிமாவில் ஈழத்தவர்களுக்கான ஒரு இடம் என்ன?
அதற்கான இடம் வந்து ஒருகாலத்தில் இல்லாமல் இருந்தது என்பது உண்மை. ஆனால் இப்பொது தமிழக சினிமாவை பொருளாதர அதாவது. திரைப்பட தயாரிப்பில் கூட ஈழத்தமிழர்கள் முன்னிலைவகிக்கிறார்கள். அதற்கு உதாரணம் லைக்கா போன்ற திரைப்பட தயாரிப்பு கம்பெணிகள். இன்று உச்சநடிகர்களை வைத்து தயாரிக்கூடிய ஒரு நிறுவனமாக ஒரு ஈழத்தை சார்ந்த நிறுவனம் இருப்பது. ஈழத்தமிர்களுக்கு ஒருபெருமை வாய்ந்த விடயமாக இருக்கின்றனது. அதோடு நாற்ப்பது விதமான தமிழக சினிமாவின் வருமானம் என்பது ஈழத்தமிழர்களின் கையில் இருக்கின்றது என்பதும் உண்மை. இந்த அடிப்படையில் தமிழகத்தில் ஈழத்துவர்களுக்கான இடம் என்பது வருங்காலத்தில் ஒரு நிலையான இடத்தை அவர்கள் அடையக்கூடிய சூழல் இருக்கிது.
ஆனால் தமிழகத்தில் எங்களுக்கான இடம் அவசியமா என்பதை பார்த்தால் வியாபாரரீதியாகவும் மற்ற நடிகர்கள், இயக்குனர் ரீதியாகவும் சேரவேண்டும் தான் ஆனால் எல்லாத்தையும் விட்டுவிட்டு நாம் எமக்கான இடத்தை உருவாக்கவேண்டும். அது தான் ஈழ சினிமா ஏன்னென்று சொன்னால் இந்தியாவின் சினிமாவாக இந்தி சினிமாதான் உலகளவில் அடையாளப்படுத்தபடுகிறது. அதுபோல ஈழத்து சினிமாவை ஈழத்திலிருந்து தான் அடையாளப் படுத்தக்கூடிய சூழல் இருக்கிறது. அதுதான் உண்மையும். ஒரு நாட்டின் சினிமாவாக அந்த நாட்டின் முக்கிய மொழிகள்தான் இடம்பெறும். அதேபோல் தமிழீழத்தின் சினிமாவாக தமிழ். அப்போது உலகத்திலே தமிழ்சினிமா என்பது தமிழீழத்தின் மூலம் தான் சர்வதேச சமூகத்தில் அடையாளப்படுத்தப்படும். அப்ப நாம் அதை முன்னின்று உழைத்து வெற்றியடைய செய்யவைக்கவேண்டும் என்பது தான் எமக்கு இருக்கவேண்டிய முக்கிய கடமை.
பண்பாட்டு அழிவு குறித்து சீற்றம் சினம்கொள் திரைப்படத்தில் உண்டு எனலாமா?
நிச்சியமாக சொன்னால் இன்று வந்து எங்களுடைய மண் வந்து 2009க்கு முன் பார்த்த மக்கள் அல்லது அங்கு போன சர்வதேச பிரமுகர்கள் வந்து ஒரு உன்னதமான தேசமாக உலகுக்கு அடையாளப்படுத்தக்கூடிய சூழல் அங்கு இருந்தது. காரணம் அங்கு வந்து பண்பாட்டு ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும், இருந்த ஒரு சுப்பிட்சமான ஒரு அரசை நிறுவியிருந்தார்கள். எங்களுடைய தமிழீழ விடுதலை புலிகளான எங்கள் தேச வீரர்கள். எங்களுடைய தேசிய தலைவர் அவருடைய கணவு என்பது. தமிழர்களின் நாகரிகத்தை உச்சமாக பின்பற்றி உன்னதமாக உருவாக்கப்பட்ட அந்த தேசத்தில் பண்பாடு, கலாச்சாரம், அழகான வாழ்வியல் இருந்தது. இன்றைக்கு அது சிறுக, சிறுக அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த அழிவுகளை நிகழ்த்துவதின் மூலம்தான் அந்த இனத்தின் இருப்பையே கேள்விகூறியாப்பது தான் இந்த உலகத்தின் மத்தியில் ஆரம்பத்திலிருந்தே நடந்துகொண்டு இருக்கிறது. அதேபோலதான் தமிழீழத்தில் அந்த மக்களின் அடையாளங்களையும், பண்பாடுகளையும் அழிப்பதின் மூலம் அந்த இனத்தின் இருப்பை இல்லாமல் ஆக்குவதற்கான ஒருவித யுத்தத்தை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். அதுதான் கலாச்சார யுத்தம் என சொல்லுவோம். அது அங்கு ஈழத்தில் நடந்துகொண்டு இருக்கிறது. அதை பார்க்கும்போது ஏற்ப்படும் கோபம் தான் சினம்கொளாக திரைப்படத்தில் இருக்கின்றது.
தமிழர் வாழ்வில் பொங்கள் குறித்து உங்கள் பார்வை என்ன?
இந்த உலகத்திலியே மூத்த இனம் தமிழினம் என்ற சொல் ஒரு காலத்தில் ஏளனத்துக்குளாக்கப்பட்டிருந்தது. அதுவந்து கல்தோன்றி மண்தோன்றா காலத்திலே தோன்றி மூத்தகுடி என்று சொல்லும்போதேல்லாம். தமிழர்களே அதை கேலியாகவும், இது என்ன இப்படி சொல்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால், இந்த உலகத்தின் மூத்த இனம் நாகரிகத்தை உருவாக்கிய இனம் என்ற அடையாளங்களை உண்மையென ஆய்வுகள் மூலம் நிறுவிக்கொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வரும் காலத்தில் உலகத்திலியே மூத்த இனம் தமிழர்கள் தான் என அடையாளப்படுத்தபடும் என எனக்கு நம்பிக்கை இருக்கின்றது.
அந்த இனத்தின் விழுமியங்கள், பண்பாடு, கலாச்சாரம் என மனித இனத்திற்க்கு எல்லாமே அறிமுகப்படுத்தியவன் தமிழன் என்பது மாற்று கருத்தும் கிடையாது. ஏன்னென்று சொன்னால் தன் எதிரிக்கு கூட தீங்கு விளைவிக்க கூடாது என நினைத்தவன் தமிழன். ‘இன்றுபோய் போருக்கு நாளை வா’ என்று வார்த்தை கம்பன் எழுதிய கம்பராமயணத்தில்தான் இருக்கிறது. வால்மீகி எழுதிய ராமயணத்தில் இல்லை என்பது உண்மை. போரில் எதிரியை கூட போய்வா என்று சொல்லகூடிய பண்பாடு உள்ளவன் தமிழன். இயற்க்கையை நேசித்து மதமாக கொண்டவன் தமிழன். அந்த இயற்க்கைக்கு நன்றி செலுத்தும் நாளாகதான் தைப்பொங்கலை வணங்கிவருகிறான். இந்த வழிமுறையை பின்பற்றி மேற்கத்திய நாடுகள் ‘தேங்கஸ் கிவீங்’ என்று கொண்டாடி வருகிறார்கள். பண்பாடு, கலாச்சாரம், இயற்க்கையை வணங்குவது என எல்லாவற்றையும் இந்த உலக மக்களுக்கு கற்றுதந்தவன் தமிழன். அவனுடைய மிகபெரிய அடையாளமாக இருப்பதுதான் இந்த தைபொங்கல். உலகத்தில் வாழக்கூடிய அத்தனை மக்களும் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும், கொண்டாடக்கூடிய தைப்பொங்கலின் மூலம் நாம் இந்த உலகுக்கு சொல்லக்கூடியது நாம் எந்த அளவுக்கு இயற்க்கையை நேசிக்கிறோம், நாம் எந்த அளவுக்கு இயற்க்கையை வழிப்படுகிறோம் என்று சொல்லக்கூடியது தான் இந்த தைப்பொங்கள் நாள்…
நேர்காணல்- பார்த்தீபன்