பாலிவுட்டில் தொடரும் சோகம்….

பாலிவுட்டில் பிரபல இசையமைப்பாளர் மற்றும் பாடகருமான வாஜித் கான் சிறுநீரக தொற்று காரணமாக இன்று உயிரிழந்தார்.

பாலிவுட்டில் தொடரும் சோகம்…. முன்னணி இசையமைப்பாளர் வாஜித் கான் மரணம்
வாஜித் கான் 1998 ஆம் ஆண்டு சல்மான்கான் நடிப்பில் வெளியான “பியார் கியா தோ தர்ணா க்யா” திரைப்படத்தின் மூலம் சஜித்-வாஜித் இருவரும் இசையமைப்பாளராக பாலிவுட்டில் அறிமுகமாகினர். சல்மான் கானின் படங்களான “வாண்டட்”, “தபாங்” மற்றும் “ஏக் தா டைகர்” ஆகிய படங்களில் பணிபுரிந்து உள்ளனர்.

“மேரா ஹீ ஜல்வா”, “ஃபெவிகால் சே” போன்ற பாடல்களை சல்மானுக்காகவும், “ரவுடி ரத்தோர்” படத்திலிருந்து “சிந்தா தா சிட்டா சிட்டா” பாடலில் அக்‌ஷய் குமாருக்காகவும் வாஜித் பின்னணி பாடி உள்ளார். அவர் சமீபத்தில் சல்மானின் “பியார் கரோனா” மற்றும் “பாய் பாய்” போன்ற பாடல்களை பாடி இருந்தார்.

42 வயதாகும் வாஜித் கான் சிறுநீரக தொற்று காரணமாக சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் நிலை மோசமானது. இதை தொடர்ந்து அவர் இன்று காலை உயிரிழந்தார். வாஜித் இறந்த செய்தியை இசையமைப்பாளர் சலீம் மெர்ச்சண்ட் உறுதிப்படுத்தி உள்ளார். வாஜித் கான் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

அண்மையில் பாலிவுட் பிரபலங்களான இர்பான் கான், ரிஷி கபூர் ஆகியோர் இறந்த நிலையில், தற்போது வாஜித் கான் மரணமடைந்திருப்பது பாலிவுட் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிரியர்