விஜய் சிறந்த பாடகர் ஏனெனில் அவரது அம்மா பாடகி என்பதால், அவரது ரத்தத்திலேயே அது கலந்திருப்பதாக இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஏற்பாடு செய்த வீடியோ நேர்காணல் நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மான் கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
மறைந்த பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடைசியாக நடித்த தில் பசேரா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அந்த படத்தின் அனுபவம் குறித்து ரஹ்மான் பகிர்ந்து கொண்டார். இசை ஜாம்பவான்கள் எம் எஸ் விஸ்வநாதன், கே வி மகாதேவன் அவர்களது இசை குறித்தும், இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்டோருடன் பணியாற்றிய அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
தற்போது நடிகர்களே, பாடகர்களாக மாறி வருவது குறித்த கேள்விக்கு, பதலளித்த ரஹ்மான், இது நல்ல முயற்சி தான் என்றும், தனக்கு பிகில் படத்தில் விஜய் பாடிய பாட்டு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, பிகில் படத்திற்காக விஜய் பாடிய போது அப்போது நான் ஸ்டூடியோவில் இல்லை. எனது உதவியாளர்கள் முன்னிலையிலேயே விஜய் பாடியிருந்தார். நான் மறுநாள் வந்து பார்க்கையில், அந்த பாடலில் சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டி இருந்தது. அதற்காக, விஜய்யை, மீண்டும் பாட வைத்து ரெக்கார்டிங் செய்தேன். முன்பு பாடியதைவிட 60 சதவீதம் சிறப்பாக பாடினார். விஜய், சிறந்த பாடகர். ஏனெனில், அவரது தாய் பாடகி, இதன்காரணமாக, அவரது ரத்தத்திலேயே அது ஊறியிருப்பதாக ரஹ்மான் தெரிவித்தார்.
ரஹ்மான், தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பிலான கோப்ரா படத்திற்கு இசையமைத்து வருகிறார்.