Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாகவர் ஸ்டோரி சேது முதல் சித்ரா வரை | 2020இல் திரையுலகை உலுக்கிய எதிர்பாரா மரணங்கள்!

சேது முதல் சித்ரா வரை | 2020இல் திரையுலகை உலுக்கிய எதிர்பாரா மரணங்கள்!

8 minutes read

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு திரையுலக பிரபலங்கள் இந்தாண்டு மரணமடைந்தனர். அவற்றின் தொகுப்பை காணலாம்.சேது முதல் சித்ரா வரை... 2020-ல் திரையுலகை உலுக்கிய எதிர்பாரா மரணங்கள் - முழு தொகுப்பு2020-ல் மரணமடைந்த சினிமா பிரபலங்கள்2020, சினிமா மற்றும் சின்னத்திரைக்கு மிக மோசமான ஒரு வருடம் தான். இந்தாண்டு திரையுலகில் எதிர்பாராத மரணங்கள், அதிர்ச்சி தரும் தற்கொலைகள் என ஏராளமான சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. அதன் தொகுப்பை காணலாம்.

விசு

விசு 
எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் விசு. சினிமாவில் குடும்ப சென்டிமென்டை வைத்து ஏராளமான படங்களை இயக்கியும் நடித்தும் இருக்கும் இவர் சின்னத்திரையிலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.  அவரது அரட்டை அரங்கம் நிகழ்ச்சிக்கு அதிக அளவு ரசிகர்கள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. சிறு நீரகக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த விசு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 22 மார்ச் 2020 அன்று மரணம் அடைந்தார். 

சேது

சேதுராமன்
நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான டாக்டர் சேதுராமன், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து வாலிப ராஜா, சக்கப்போடு போடு ராஜா, 50 50 போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகர் சேதுராமன் ஒரு தோல் சிகிச்சை நிபுணரும் கூட. இவர் தனியாக கிளினிக் நடத்தி வந்தார். ஏராளமான சினிமா பிரபலங்கள் அவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி இரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சேதுராமன் மரணமடைந்தார். 34 வயதில் அவர் மரணமடைந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

ஜீன் டெய்ச்

ஜீன் டெய்ச்
துறுதுறுவென சேட்டைகள் செய்யும் குட்டி எலியும், அதை துரத்தி விளையாடும் பூனையின் வேடிக்கைகள் நிறைந்த தொடர் தான் டாம் அண்ட் ஜெர்ரி. வயது வரம்பின்று அனைவரும் பார்த்து ரசிக்கும் இந்த கார்ட்டூன் தொடரை இயக்கியவர் ஜீன் டெய்ச். ஆரம்ப காலத்தில் ராணுவத்திலும், விமானியாகவும் பணியாற்றிய இவர் பின்னர் கார்ட்டூன் இயக்கி வந்தார். வயது முதிர்ச்சி காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி காலமானார். அவருக்கு வயது 95. 

இர்பான் கான்

இர்பான் கான்
30 ஆண்டுகளாக திரையுலகில் நடித்து வந்தவர் இர்பான் கான். ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்துள்ள அவர், ஹாலிவுட்டிலும் தி அமேசிங் ஸ்பைடர் மேன், லைஃப் ஆப் பை, ஜுராசிக் வேர்ல்டு போன்ற படங்களில் நடித்து உலக அளவில் பிரபலமானார். புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இர்பான் கான் (வயது 53) கடந்த ஏப்ரல் 29-ந் தேதி காலமானார். கடந்த சில ஆண்டுகளாக லண்டன் சென்று புற்றுநோய்க்காக அவர் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

ரிஷி கபூர்

ரிஷி கபூர்
40 ஆண்டுகளாக பாலிவுட் படங்களில் நடித்து வந்த ரிஷி கபூர், கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு அமிதாப் பச்சனுடன் 102 நாட் அவுட் என்கிற படத்தில் நடித்தார். இதையடுத்து ரிஷி கபூருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் அவர் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். அமெரிக்கா சென்று ஓராண்டு புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று குணமடைந்த அவர் கடந்த ஏப்ரல் 30-ந் தேதி மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார்.  

சிரஞ்சீவி சர்ஜா

சிரஞ்சீவி சர்ஜா
தென்னிந்திய சினிமாவை உலுக்கிய மரணங்களில் நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மரணமும் ஒன்று. நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனான சிரஞ்சீவி சர்ஜா கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வந்தார். 20-க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ள இவர், கடந்த ஜூன் மாதம் 8-ம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். சிரஞ்சீவி சர்ஜா (வயது 39)கடந்த 2018-ம் ஆண்டுதான் பிரபல நடிகையான மேக்னா ராஜை காதலித்து கரம்பிடித்தார். சிரஞ்சீவி சர்ஜா உயிரிழக்கும் போது அவரது மனைவி 4 மாத கர்ப்பிணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

சுஷாந்த் சிங்

சுஷாந்த் சிங் 
பாலிவுட் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய மரணம் என்றால் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம். இவரது மரணம் கிரிக்கெட் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. ஏனெனில் அவர் தோனியின் வாழ்க்கை வரலாறு படமான ‘எம்.எஸ்.தோனி – தி அன்டோல்டு ஸ்டோரி’ படத்தில் தோனியாக நடித்திருந்தார். 34 வயதே ஆன சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி மும்பை உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் தற்கொலையா? கொலையா? என சந்தேகம் எழுந்த நிலையில், அவரது மரண வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. 6 மாதங்களுக்கு மேலாக அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் சாச்சி

இயக்குனர் சாச்சி
கதாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர் சாச்சி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு பிருத்விராஜ், பிஜூ மேனன் உள்ளிட்டோர் நடித்த அனார்களி படத்தின் மூலம் இயக்னராக அறிமுகமானார். இவரது இரண்டாவது படமான அய்யப்பனும் கோஷியும் இந்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூலையும் வாரிக்குவித்தது. 48 வயதே ஆன இயக்குனர் சாச்சி கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.

சாட்விக் போஸ்மேன்

சாட்விக் போஸ்மேன்
உலக மக்களை பெரிதும் கவர்ந்த படம் அவெஞ்சர்ஸ். இதில் நடித்த நடிகர்கள் அனைவரும் உலக மக்களிடையே மிகவும் பிரபலம். அந்த வகையில் இப்படத்தில் பிளாக் பேந்தர் கதாபாத்திரத்தில் நடித்தவர் சாட்விக் போஸ்மேன். 43 வயதான இவர் கடந்த 4 வருடங்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் கடந்த ஆகஸ்ட் 29-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு ஹாலிவுட் பட ரசிகர்களுக்கு பேரிழப்பு என்றே சொல்லலாம்.

வடிவேல் பாலாஜி

வடிவேல் பாலாஜி 
சின்னதிரையில் காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. இவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு போல் காமெடி செய்வதால் ‘வடிவேல் பாலாஜி’ என்று அழைக்கப்பட்டார். பிரபல காமெடி நிகழ்ச்சிகளான ‘அது இது எது’, ‘கலக்கப் போவது யாரு’, போன்ற பல நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வடிவேல் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 42.

புளோரண்ட் பெரேரா

புளோரண்ட் பெரேரா
நடிகர் விஜய்யின் புதிய கீதை படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாவனர் புளோரண்ட் பெரேரா. இதையடுத்து இவர் கயல், எங்கிட்ட மோதாதே, வேலையில்லா பட்டதாரி 2, ராஜா மந்திரி, தொடரி போன்ற படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி இவர் கடந்த செப்டம்பர் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி உயிரிழந்தார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம்

எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் மரணம், இசை உலகுக்கே பேரிழப்பு என்றே சொல்லலாம். பாடும் நிலா என்றழைக்கப்படும் எஸ்.பி.பி. நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். பின்னணி பாட்கராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கினார். பாடகர் எஸ்.பி.பி. கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி லேசான கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கொரோனாவில் இருந்த மீண்ட அவர் உடல்நலக்குறைவு காரணமாக 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி மரணமடைந்தார். அவருக்கு வயது 74.

ஷான் கானெரி

ஷான் கானெரி (முதல் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்)
ஹாலிவுட்டில் 1960களில் தொடங்கிய ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 24 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வந்துள்ளன. இதில் முதல் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்தவர் ஷான் கானெரி. இவர் 7 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்துள்ளார். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இவர், ஆஸ்கர், பாஃப்தா மற்றும் கோல்டன் க்ளோப் என பல்வேறு முக்கிய விருதுகளை வென்றுள்ளார். இவர் வயது முதிர்வு காரணமாக கடந்த அக்டோபர் 31-ந் தேதி காலமானார். 

தவசி

தவசி
‘கிழக்குச் சீமையிலே’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு நடிகராக அறிமுகமானார் தவசி. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடிகர் சூரியின் தந்தையாக நடித்த இவர், அப் படத்தில் இடம்பெற்ற ‘கருப்பன் குசும்புக்காரன்’ என்ற டயலாக்கின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தமிழில் சுமார் 50க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்திலும் இவர் நடித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தவசி கடந்த நவம்பர் 23-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சித்ரா

சித்ரா
பிரபல தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமான சித்ரா கடந்த டிசம்பர் 9-ம் தேதி நசரத்பேட்டை அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர் தனது காதலரான ஹேம்நாத்தை பதிவு திருமணம் செய்து கொண்டார். வரும் பிப்ரவரி மாதம் பிரமாண்டமாக திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்குள் சித்ரா தற்கொலை செய்துகொண்டார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவரான ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஷாநவாஸ்

ஷாநவாஸ்
மலையாள சினிமாவில் எடிட்டராக கால் பதித்தவர் ஷாநவாஸ் (வயது 37). இவரது சொந்த ஊர் நரணிபுலா. கடந்த சில வருடங்களுக்கு முன் முதன்முதலாக கரி என்ற மலையாள படத்தை இயக்கினார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டாக ஓடாவிட்டாலும் சினிமா விமர்சகர்களின் ஆதரவு கிடைத்தது. இதையடுத்து பிரபல நடிகர் ஜெயசூர்யாவை கதாநாயகனாக வைத்து “சூபியும் சுஜாதாவும்” படத்தை இயக்கினார். இந்தாண்டு ஓடிடி-யில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தனது அடுத்த படத்திற்காக கதை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ஷாநவாஸுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், அவர் மூளைச்சாவு அடைந்ததால் டிசம்பர் 23-ந் தேதி உயிரிழந்தார்.

நன்றி – மாலைமலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More