Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாகவர் ஸ்டோரி இளையராஜா – அகமும் புறமுமாய் வாழும் இசை

இளையராஜா – அகமும் புறமுமாய் வாழும் இசை

3 minutes read

வானவெளி எங்கும் வியாபித்து இருக்கும் அடர் இருளை கிழித்துக் கொண்டு வெள்ளமெனப் பாயும் கிரணங்களைப் போல பாய்கின்றது இசைஞானியின் இசை. அணைத்துக் கொள்ள முடியாத காற்றாய், தீர்ந்து போகாத வெளியாய், குடிக்க முடியாத அக்தராய், கண்களுக்குள் ஊடுறுவும் காதலியின் சிரிப்பாய் எங்கும் ஆக்கிரமித்து இருக்கின்றது அவரின் இசை. வாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்தையும் மீட்டிக் கொண்டே இருக்கின்றார், நிச்சலனமாக உறைந்து போய் உட்காரும்போது மெல்லிய காற்றாய் மனத்தை சலனப்படுத்துகின்றார்.

விழிப்பிலிருந்து தொடங்கி உறக்கத்தில் உச்சம் கொள்கின்றது அவரின் பாடல்கள். மலைச் சரிவுகளில் இறங்கி புல்வெளிகளில் படரும் பனியாய் கனவுகளை சில்லிடச் செய்கின்றது அவரது இசைக் கோர்வைகள். பேருந்துப் பயணங்களில் பறப்பது சாத்தியப்பட்டது அவரால்தான். அதுவும் ஜன்னலின் வழியாக வரும் காற்றும், உச்சத்தாயில் அரோகணத்தில் ஒலிக்கும் இசையும் கலக்கும் போது நரம்புகள் எல்லாம் புல்லாங்குழல்களாய் மாறி நாதங்களின் பெருங்கடலில் ஒரு சொட்டாய் நம்மைக் கரைத்து விடும்.

ஊர் வந்த பின்னும் பேருந்தில் இருந்து இறங்க மனமில்லாமல், அடுத்த நிறுத்தம் வரை பல முறை இழுத்துச் சென்றிருக்கின்றது அவரின் பாடல்கள். கடும் வெயிலைக் கடந்து போகும் பாதங்களின் கீழ் பூவின் இதழ்களைப் படர விடும் அதிசயமெல்லாம் உலகில் யாரின் இசைக்கு இருக்கின்றது? உயிர்கள் அற்ற ஆதி உலகில் ஒலித்துக் கொண்டிருந்த அந்த மர்ம இசையை தனது ஆர்மோனியப் பெட்டியில் இருந்து அவர் விடுவித்தார். காற்றுவெளியில் ஒரு புனிதனின் பயணமாய் பிரபஞ்சம் எங்கும் சென்று கொண்டிருக்கின்றது அவரின் இசைக் குறிப்புகள்.

எல்லோருக்கும், எல்லோருமே தேவையில்லாத காலத்தில் எல்லாவற்றுக்கும் எல்லாமுமாக தேவைப்படுகின்றது அவரது இசை. வெற்று சப்தங்கள் எல்லாம் எப்போதும் இசையாகி விடுவதில்லை. ஆனால் வெற்று சப்தங்கள் கூட இசையாவது அவரிடம்தான். தொலைந்து விட்ட நாட்களை எல்லாம் மீட்டுக் கொண்டு வந்து நம்மை மீண்டும், மீண்டும் தொலைந்து போக வைக்கும் திறமை அவரிடம் மட்டுமே உண்டு. உலகில் யார் நம்மை விட்டுச் சென்றாலும் அந்தம் வரை வரும் ஒரே சொந்தமாக அவரின் இசை இருக்கின்றது.

வார்த்தைகளில் வறட்சி ஏற்படும் நாட்களில் அவரின் இசை மயிர்க்கால்களை எல்லாம் பிளந்து, வார்த்தைகள் பிரவாகம் எடுத்து ஒரு காட்டாற்று வெள்ளமாக முழ்கடித்து விடுகின்றது. வானவில்லில் சஞ்சரித்து, அதன் வண்ணங்களில் குலைந்து, மலை முகடுகளில் தோரணம் கட்டி, கதிரவனின் மெல்லிய ஒளியில் கரையும் நீர்த்திவலையாய் காணாமல் போக வைக்கின்றது. ஒரு கருந்துளையாய் எல்லாவற்றையும் உள்ளித்துக் கொள்ளும் அந்த இசையில் வீழ்ந்தவர் இதுவரை எழுந்து வந்ததாக எந்தச் சாட்சியும் இல்லை.

எத்தனை ராகங்கள், எத்தனை தாளங்கள், மரணத்தின் பெரும்வலியை கடப்பதற்கு இது போதாதா? ஒவ்வொரு பாடலின் இசைக் குறிப்புகளையும் எழுதி முடித்த பின்னால், நீ பிரம்மனைப் படைக்கின்றாய். உன் காலடியில் மண்டியிட்டு ஒரு நாயைப் போல வாலாட்டிக் கொண்டு நிற்கின்றான் உன்னால் சாகா வரம்பெற்ற பிரம்மன்.

ஆண்ட சாதிக் கோயில் எங்கும் உன் பாடல் ஆட்டுவித்துக் கொண்டு இருக்கின்றது. கருவறைக் கடவுள்களின் காதுகள் உன் பாடலைக் கேட்பதற்காக காதுகளை கோபுரக் கலசங்கள் வரை நீட்டுகின்றன. எட்ட முடியாத உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் உன் இசைக் குறிப்புகளை அண்ணாந்து பார்த்து வாய் பிளந்து நிற்கின்றது சாஸ்திரிய குரைப்பொலிகள். காற்றுவெளி எங்கும் உன் கீதம் முட்டி மோதி பிரபஞ்சத்தையே ஒரு யாழைப் போல மீட்டிக் கொண்டு இருக்க, மூடப் பெற்ற சங்கீத சபாவிலிருந்து வெறும் குறட்டை ஒலிகள் மட்டுமே வருகின்றன.

நீ திமிர் பிடித்தவன் என்கின்றார்கள், பரவாயில்லை. நீ கோபக்காரன் என்கின்றார்கள், பரவாயில்லை. நீ அகம்பாவம் பிடித்தவன் என்கின்றார்கள் பரவாயில்லை. நீ கருத்து முதல்வாதி என்கின்றார்கள், பரவாயில்லை. உனக்காக இன்னும் எத்தனை பரவாயில்லை இருந்தாலும் பரவாயில்லை. உன்னை நோக்கி நீளும் சுட்டு விரல்கள் அனைத்தும் இன்னொரு பக்கம் யாரின் முதுகுகளை சொறிந்து கொண்டிருக்கின்றன என்று எங்களுக்குத் தெரியாதா?

ரோஜாவுக்கு யார் விருது கொடுப்பது? பனித்துளிக்கு யார் விருது கொடுப்பது? தென்றலுக்கு யார் விருது கொடுப்பது? விருதுகள் என்பது அழியும் பொருட்களை நினைவு கூர்வதற்காக… ஆனால் உனது இசை வெளியைப் போன்றது. அதற்கு ஆதியும் இல்லை, அந்தமும் இல்லை. சிலர் விருதுகளுக்காகவே வாழ்கின்றார்கள், சில விருதுகள் சில பேருக்கு கொடுப்பதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டவை. விருதுகளின் வெளிச்சத்தை சுற்றிலும் அந்தகார இருட்டு பரவியுள்ளது.

இளையராஜாவின் இசை இல்லாமல் உயிர் வாழ முடியுமா எனப் பல முறை யோசித்து இருக்கின்றேன். ஆனால் கண், காது, மூக்கு, வாய் இல்லாமல் ஒரு மூளியாய் வாழ்வது எப்படி அர்த்தமற்று, இருத்தலின் சுவாரசியமற்று இருக்குமோ அப்படித்தான் அந்த வாழ்க்கையும் இருக்கும் எனத் தோன்றுகின்றது.

நாங்கள் இளையராஜாவோடு வாழப் பழகிக் கொண்டு விட்டோம். எப்படி சுவாசிப்பதும், சோறு தின்பதும் அத்தியாவசியமாக இருக்கின்றதோ, அதே போல அவரின் பாடல்களைக் கேட்பதும் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாகி விட்டது. குழந்தையின் அடியையும், காதலியின் கிள்ளல்களையும் எப்படி இனிமையாய் எடுத்துக் கொள்கின்றோமோ அப்படித்தான் அவரின் செயல்பாடுகளையும் எடுத்துக் கொள்கின்றோம்.

வெந்த சோற்றைத் தின்றுவிட்டு சாவுக்காக காத்திருக்கும் அற்ப வாழ்க்கையை விட வார்த்தையாய், இசையாய், ஓவியமாய், கலையாய் வாழ்வது எவ்வளவு அற்புதமான வாழ்வு! வரலாறு எப்போதும் தனக்காக வாழ்ந்தவர்களைவிட பிறருக்காக வாழ்ந்தவர்களையே நினைவில் வைத்துக் கொள்கின்றது. இளையராஜாவின் இசை மனித சமூகம் என்றென்றும் இளைப்பாறிக் கொள்ளும் நிழலாக எப்போதுமே இருக்கும்.

– செ.கார்கி

நன்றி : கீற்று இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More