Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா வளர்ந்து வரும் கலைஞன் டிரோஷன் அழகரட்ணம்!

வளர்ந்து வரும் கலைஞன் டிரோஷன் அழகரட்ணம்!

3 minutes read

ஈழத்து கலைப் பரப்பில் தத்தமது துறைசார்ந்து இயங்கிவருகின்ற பல்லாளுமை மிக்க பல இளையோரை நாம் அவதானித்து வருகின்றோம் அப்படியான திறமைசாலிகளில் மிக முக்கியமான ஒருவராக இருப்பவர் டிரோஷன் அழகரட்ணம்.

ஈழத்து திரைத்துறை நகர்வில் பல்துறைசார்ந்தும் இயங்கிக்கொண்டிருக்கும் இவரை தனியே ஒரு துறைசார்ந்த ஒருவராக குறிப்பிட்டு சொல்ல முடியாதளவிற்கு பல்துறை வல்லுனராக இயங்கிக் கொண்டிருக்கின்றார் டிரோஷன்.

நடிகராக, ஒளிப்பதிவாளராக, வண்ணக் கலவையாளராக, படத்தொகுப்பாளராக என தொழிநுட்பம் சார்ந்த ஒருவராக இவர் அனைத்து துறையிலும் இயங்கி வருகின்றார் .

குடும்ப பின்னணியில் துறைசார்ந்தவர்கள் என்று யாரும் இருந்ததில்லை என்று தன் ஆரம்பம் பற்றி கூறவிளைந்த இவர் தொழினுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புக்களில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வம் சிறுவயது முதலாகவே இருந்தது, ஆகவே அதன்காரணமாக உயர்தரத்தில் காணிதப் பிரிவில் கல்விகற்று தொடர்ந்து அடுத்த நிலை கல்வி எல்லாம் கற்று அந்த துறை சார்ந்த வேலை செய்து கொண்டிருந்ததாகவும் கூறினார் .

ஆயினும் இவருக்குள்ளே இயல்பாக விருந்த கலைத்துவ ஆற்றல் பிடித்த வேலையை நோக்கி நகர்த்தியது அதுவே இற்றைவரை இவரை கொண்டு செல்கின்றது.

பாடசாலைக் காலங்களில் நடனத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் தனது நண்பர் ஒருவரின் பாடலுக்கான நடன ஆற்றுகையில் தனது கலைப்பயணம் ஆரம்பமாகியதாக கூறுகின்றார். எதுவித பூரண அடிப்படை அறிவுமில்லாத அந்த காலங்களில் திரைப்படப் பாடல்கள், படங்கள் என்பனவற்றை பார்த்தே தனது இத்துறைசார்ந்த அறிவை பெற்றுக் கொண்டதாகவும் கூறுகின்றார்.

2013 டிசம்பரில் இவர் நடித்த அனங்கம் குறும்படம் 2016 பெப்ரவரியில் கார்கில்ஸ் திரையரங்கில் வெளியாகியது.முக்கியமானதொரு பாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றுக் கொண்டார்.தொடர்ந்தும் அதே வருடம்(2016) Casino Kit என்ற பாடலில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அந்தப்பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இப்படியாக தொடர்ச்சியாக இத்துறைசார்ந்து இயங்கிக் கொண்டிருந்தார் .

இதே சமகாலத்தில் Studio 360 என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து, Wedding Productions & Song productions என்பவற்றையும் செய்து வருகின்றார் டிரோஷன்.

யாழில் IBC தமிழ் தொலைக்காட்சி தயாரித்த ‘மர்மக்குழல் ‘நெடுந்தொடரில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்ட இவர் அந்த நெடுந்தொடரில், ஒளிப்பதிவு,படத்தொகுப்பு,நடிப்பு,குரல்பதிவு (Voice Over Artist) என பல்வேறு பரிமாணங்களில் தனது பங்களிப்பை வழங்கினார் .

IBC தமிழின் யாழ். கலையக உருவாக்கத்தோடு அந்நிறுவனத்தில் முழு நேர படத்தொகுப்பாளராக நியமனம் பெற்றார் .

2018 இல், களை என்ற முழு நீளத்திரைப்படத்தில் வில்லன் பாத்திரம் மற்றும் படத்தொகுப்பு பணிகளை செவ்வனே செய்து கொண்டார்.

IBC தமிழில் ஒளிபரப்பாகி வரும் Talents நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக ஈழ சினிமாவில் சாதிக்க முயற்சித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு ஊடகம் சார்ந்த ஆதரவு வழங்கும் சிறப்பான பணியை ஆற்றுகின்ற அதே நேரம் அவர்களது படைப்புக்களை பார்வையாளர்களிடம் இலகுவாக கொண்டு சேர்ப்பதற்கான ஒரு முயற்சியாக அந்த நிகழ்ச்சியை வடிவமைத்த பெருமையும் இவருக்கானது.

புகைப்படத்துறை சார்ந்து மிகுந்த கலைத்துவமும் நேர்த்தியும் கொண்டிருக்கின்ற டிரோஷனின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. தனியார் கல்லூரி ஒன்றில் பகுதிநேரமாக புகைப்படத்துறை விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகின்றார் டிரோஷன்.

தனியாகவும் தனது நிறுவனங்கள் ஊடாகவும் அண்மைக்காலமாக தனது பேராற்றலை பல்வேறு ரூபங்களில் காட்டிவருகின்ற டிரோஷனின் ஒவ்வொரு பக்கங்களும் அவரது கடின உழைப்பையையும் தேடல்களையும் காட்டிக் கொண்டே இருக்கின்றது .

2021 ஏப்ரலில் இவரின் இயக்கத்திலும் ஒளிப்பதிவிலும் படத்தொகுப்பிலும் வெளியான ‘Enjoy Enjaami’ கவர் பாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இந்தப் பாடலில் இவரின் பல்வேறு வகையான ஆற்றல்களை கண்டுகொள்ள முடிந்தது. குறிப்பாக பாடலில் இவரின் வண்ணக் கலவை பாடலை அழகுபடுத்தி திரையில் தோன்றியவர்களை மேலும் அழகுபடுத்தியிருந்தது.எதிர்காலத்தில் அதிகமான தயாரிப்புக்களை சுயமாகவே தயாரித்து வெளியிட வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக கூறும் இவர் அதனை நோக்கியதாகவே வாழ்வு பயணிக்கின்றது எனவும் கூறுகின்றார் .

தன் துறைசார்ந்து கடவுளுக்கும், அம்மா, அப்பா,சகோதரர்கள்,நண்பர்கள் என அனைவருக்கும் தன் நன்றியைக் கூறும் இவர் சம நேரத்தில் கடந்த 5 வருடங்களாக பல்வேறு விடயங்களை கற்றுக் கொள்ள தளமமைத்து கொடுத்த IBC தமிழை என்றும் மறக்க முடியாது என நெகிழ்ச்சியோடு நன்றி கூறினார் .

இப்படியாக கடந்த எட்டு ஆண்டுகளிற்கு மேலாக தன் பல்வேறு வகிபாகங்களை ஈழத்து திரைத்துறையில் ஊடகத்துறையிலும் பல்வேறு கோணங்களில் தனது வகிபங்கை காட்டிவரும் டிரோஷன் இன்னு மின்னும் இத்துறைசார்ந்து மேலும் சாதிக்கக் கூடியவர் என்கின்ற நம்பிக்கைப் படைப்பாளியாக நம்முன்னே தெரிகிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More