Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மாநாடு | `எஸ்.டி.ஆர் – எஸ்.ஜே சூர்யா – வெங்கட் பிரபு’ கூட்டணி களைகட்டியதா?

மாநாடு | `எஸ்.டி.ஆர் – எஸ்.ஜே சூர்யா – வெங்கட் பிரபு’ கூட்டணி களைகட்டியதா?

3 minutes read
மாநாடு

தனக்கேயுரிய பாணியில் வசனங்களால் ரசிக்க வைக்கிறார். மாநாட்டின் முக்கிய ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜே சூர்யாதான்.

பெரிய இடைவேளை, நடுவே சிம்புவின் அபார உருமாற்றம், படம் தொடங்கியதா ட்ராப்பா என்கிற குழப்பம், கடைசிநேர இழுபறி என ஆரம்பம் முதலே பரபரப்புகளுக்கு பற்றாக்குறையே வராமல் பார்த்துக்கொண்ட ‘மாநாடு’ இந்த அத்தனை எதிர்பார்ப்புகளையும் ஈடுகட்டுகிறதா?

துபாயிலிருந்து கோவை வழியே ஊட்டிக்கு ஒரு திருமணத்திற்குச் செல்கிறார் அப்துல் காலிக். போகும்வழியில் நாயகியைச் சந்திக்கிறார். கூடவே சில பல பிரச்னைகளையும். அவை ஒரு முடிவே தெரியாத கால சுழற்சியில் அவரை சிக்க வைக்கின்றன. எதனால் திடீரென இப்படி நடக்கிறது? எப்படி நிறுத்துவது? இதனால் என்ன பயன் என நமக்குள்ளே குறுகுறுக்கும் கேள்விகளுக்கு அப்துல் காலிக் விடை கண்டுபிடித்துச் சொல்வதுதான் இந்த ‘மாநாடு’.

மாநாடு
மாநாடு

எத்தனையோ காலத்திற்குப் பிறகு அதிரடியாய், ரகளையாய், ஸ்டைலாய் சிம்பு. ‘தனக்கு மிக முக்கியமான படம்’ என நினைத்தே நடித்தாரோ என்னவோ அதிக பொறுப்புணர்வு அவரின் நடிப்பில் தெரிகிறது. ஆக்‌ஷன், காமெடி, சென்டிமென்ட் என எல்லாப் பக்கமும் சலங்கை கட்டியாடும் சிம்புவின் இந்த வெர்ஷனைப் பார்க்கும் நமக்கும் உற்சாகம் பற்றிக்கொள்கிறது. நல்லதொரு ரீஸ்டார்ட் எஸ்.டி.ஆர்!

டைம் லூப் படம் என்பதில் பெரிய சர்ப்ரைஸ் எல்லாம் இல்லைதான். ஆனால் திரும்பத் திரும்ப நடக்கும் கதையின் மிகப்பெரிய சர்ப்ரைஸ் எஸ்.ஜே சூர்யா. கொஞ்சம் அசந்தாலும் சலிப்பு தட்டி நம்மை போன் நோண்ட வைக்கும் காட்சியமைப்புகளை தன் நேர்த்தியான உடல்மொழியால், தனக்கேயுரிய பாணியில் வசனங்களால் ரசிக்க வைக்கிறார். மாநாட்டின் முக்கிய ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜே சூர்யாதான்.

எஸ்.ஏ.சி, வாகை சந்திரசேகர், ஒய்.ஜி மகேந்திரன், கருணாகரன், பிரேம்ஜி என சீனியர்களும் ஜுனியர்களுமாய் மாநாட்டுக் கூட்டம். அதில் சட்டென கவர்வது ஒய்.ஜி மகேந்திரன். மற்றவர்களும் தங்கள் பங்களிப்பை சரியாகக் செய்திருக்கிறார்கள். கல்யாணி பிரியதர்ஷனுக்கு ஒரே ஒரு காட்சியில் மட்டுமே கதையில் பங்கெடுப்பதற்கான வாய்ப்பு.

ஹீரோவுக்கு ஒரு பி.ஜி.எம், நெகட்டிவ் கேரக்டருக்கு ஒரு பி.ஜி.எம் என பின்னணி இசை முழுக்க பதிந்திருக்கிறது யுவனின் முத்திரை. ஒரே ஒரு பாடல்காட்சிதான். அதற்கும் சேர்த்து பின்னணி இசையில் கெத்து காட்டியிருக்கிறார் யுவன். முன் பின்னாய் சலிக்காமல் குதிரையைப் போல் ஓடும் திரைக்கதைக்கு சட் சட்டென கடிவாளம் போட்டு ட்ராக் மாற்றி மேலும் சுவாரஸ்யம் ஏற்றுகிறார் பிரவீன் கே.எல். நூறு படங்கள் செய்த அனுபவம் அவரின் படக்கோவையில் மிளிர்கிறது. ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவு பளிச்.

மாநாடு
மாநாடு

டெனட் தொடங்கி ஏகப்பட்ட படங்களின் சாயலைப் பூசி, ‘இது இப்படித்தான்ப்பா’ என எதிர்பார்க்கவைத்து முற்றிலும் வேறொன்றை தன் ப்ளேவரில் பரிமாறியிருப்பதில் தெரிகிறது வெங்கட் பிரபுவின் புத்திசாலித்தனம். திரும்பத் திரும்ப நடக்கும் காட்சிகள் அலுப்படையச் செய்துவிடும் என யோசித்து ஒவ்வொரு முறையும் சின்னச் சின்ன சுவாரஸ்யங்களைச் சேர்த்திருப்பது, தன் ட்ரேட் மார்க் காமெடி ட்ரீட்மென்ட் என மாநாடு நெடுக வெங்கட் பிரபுவின் கொடி ஓங்கிப் பறக்கிறது. இன அரசியல், கல்யாணி ப்ரியதர்ஷன் விளக்கும் காட்சி என எல்லாவற்றையும் மேம்போக்காக பேசிச் சென்றாலும் உறுத்தாத வகையில் பயணித்திருப்பது ப்ளஸ்.

வெங்கட் பிரபு படங்களின் பெரிய பலம் அவருக்கும் அவர் படத்தில் நடிப்பவர்களுக்குமான ஆப் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரி. அதை அப்படியே திரையில் யதார்த்தமாய் கடத்துவதில் கெட்டிக்கார கேப்டன். இந்தப் படத்திலும் சிம்புவின் பலங்களை அறிந்து அதில் மட்டுமே கவனம் செலுத்தி களமாடியிருப்பதால் நமக்கும் புதியதொரு சிம்பு வெர்ஷனை பார்த்த திருப்தி.

சிறுபான்மையினர் மேல் பழிபோடும் நிகழ்கால அரசியல், பிரிவினைப் பேச்சுகள் போன்றவற்றை ஒரு முன்னணி ஹீரோவின் வழியே (அவை வசனங்களாக மட்டுமே இருந்தாலும்) பேச நினைத்திருப்பதற்கு பாராட்டுகள்.

திரைக்கதையின் முக்கிய இடத்திற்கு கதை நகர எடுத்துக்கொள்ளும் நேரம், இவர்களை இயக்குவது யார், என்ன காரணம் போன்றவற்றை எளிதாக யூகிக்க முடிவது போன்றவை மாநாட்டின் குறைகள். லாஜிக் இடறல்கள் ஆங்காங்கே தட்டுப்பட்டாலும், ‘இது என்ன ஜானர் படம்னே முடிவு பண்ணல, இதுல லாஜிக் எல்லாம் எதுக்கு’ என ஜாலியாக தோளைத் தட்டிச் சொல்லிச் செல்கிறார் வெங்கட் பிரபு.

நிஜ மாநாட்டிற்குச் செல்வது போலவே கூட்டமாய்ச் சென்று கைதட்டி வெளியுலகை மறந்து கொஞ்சநேரம் அங்கே லயித்துவிட்டுக் கலைவதற்கான வாய்ப்பை இந்த ரீல் மாநாடும் வழங்குகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More