Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாகவர் ஸ்டோரி சினம்கொள் | ஈழத்தின் கலைவெளிச்சம்

சினம்கொள் | ஈழத்தின் கலைவெளிச்சம்

4 minutes read

சினம் கொள் எப்படி?

ஸ்கை மேஜிக் பட நிறுவனம் சார்பில் காயத்ரி ரஞ்சித் மற்றும் பாக்யலட்சுமி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் ஈழத்தமிழர்கள் பங்களிப்பில் பாக்ய லட்சுமி வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் சினம் கொள். 1983 ஜூலையில் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம் அரசியல் ரீதியாக தமிழர்களுக்கு என தனி நாடு கேட்கும் போராட்டமாக மாறியது.

பல கட்டங்களை கடந்து அது ஆயுதப்போராட்டமாக மாறி நடைபெற்று வந்த தமிழ் ஈழ யுத்தம் 2009 இல் முடிவுக்கு வந்தது. ஈழப் போராட்டம் நின்றுபோன பின், ஈழத்தமிழ் மக்கள் நிம்மதியான

வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள் என்கிற பிம்பத்தை இலங்கை அரசாங்கம் கட்டமைக்க முயற்சித்து வருகிறது.

இல்லை, அது பொய் என சர்வதேச அரங்கில் உரத்து குரல் கொடுத்து வருகின்றனர் இலங்கைத் தமிழர்கள். யுத்தம் முடிவுக்கு வந்த பின், அது சம்பந்தமாக ஏராளமான திரைப்படங்கள் வணிக நோக்குடன் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது.

ஆனால், இன்றைய இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் நிலை என்ன என்பதை சமரசமின்றி யதார்த்தமாக பதிவு செய்திருக்கும் முதல் படமாக இலங்கைத் தமிழர்களால் வழிமொழியப்பட்ட படமாக உள்ளது ‘சினம்கொள்’.

தனிநாடு கேட்டு போராடிய தமிழர்களின் ஆயுதப்போராட்டம் முறியடிக்கப்பட்ட பின் தமிழர்கள் நிம்மதியாக, சுபிட்சமாக இருக்கிறார்கள் என்பது கட்டுக்கதை என்பதை முகத்தில் அறைந்து கூறுகிறது சினம்கொள் திரைப்படம்.

இலங்கையில் தமிழ் மக்கள் நுட்பமான இன அழிப்பு,பாரம்பரிய நிலம் பறிப்பு ஆகியவற்றுக்கு உள்ளாகி சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து வருகிறார்கள் என்பதை ஆழமாகவும் அழகியலுடன் கூடிய கலைப்படைப்பாக சொல்லியிருக்கிற படம் தான் சினம்கொள்.

ஈழ ஆய்வாளர் பரணி கிருஷ்ணரஜனி,புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னணி பொறுப்பாளரான தமிழினி அவர்களின் சாவு இயற்கையானது அல்ல என குறிப்பிட்டிருந்தார். அத்துடன், இலங்கைச் சிறையிலிருந்து “விடுதலை“யான போராளிகள் அனைவருமே வெளி வந்து குறுகிய காலத்தில் நோய்வாய்ப்பட்டு இறப்பதைப் பற்றியும், அத்துடன் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த ஆயுதம் ஏந்திய போருக்குப் பின்னர், தமிழீழப்பகுதிகளில் தமிழ்மக்களுக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பாரம்பரிய நிலங்களை பாதுகாப்பு வளையம் என்கிற பெயரில் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார். இவற்றை அடிப்படை திரைக்கதையாக கொண்டுள்ளது சினம்கொள்.

சிறையிலிருந்து எட்டாண்டுகளுக்குப் பின் வெளியே வருகிற போராளி அமுதனின் பார்வையில் விரியும் திரைக்கதை அடுத்தடுத்துப் பல அதிர்வுகளை படம் பார்க்கும் பார்வையாளனுக்கு ஏற்படுத்திக்கொண்டேயிருக்கிறது.

அமுதனாக நடித்திருக்கும் அரவிந்தன் சிவஞானம், அசல் போராளியாகவே படத்தில் வாழ்ந்திருக்கிறார். கண்களில் அவர் காட்டும் சோகமும் உறுதியும் ஈழ போராளிகளை நினைவூட்டுகிறது. கடத்தப்பட்ட பெண்ணை மீட்கப் படகில் செல்லும் காட்சியில் நெஞ்சு நிமிர்த்தி அவர் நிற்பதும் அண்ணனின் தம்பி(பிரபாகரன்) என அடித்துப் பேசுவதும் அவருக்குப் பெருமை சேர்க்கின்றன.

அவருடைய மனைவியாக நடித்திருக்கும் நாவினி டெரி, பல்லாண்டுகளுக்குப் பிறகு கணவன் முகம் கண்டதும் கதறிக்கொண்டு ஓடிவரும் காட்சியில் கலங்காத கல்நெஞ்சையும் கலங்கடித்து விடுகிறது. போராளி யாழினியாக நடித்திருக்கும் லீலாவதி பேசும் வசனங்கள் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கான அறிவுரை. பிரேம், தீபச்செல்வன், தனஞ்செயன், பாலா,மதுமிதா, பேபி டென்சிகா உட்பட படத்தில் நடித்திருக்கிற அனைவரும் யதார்த்தம் மீறாத நடிப்பால் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

எம்.ஆர்.பழனிக்குமாரின் ஒளிப்பதிவு ஈழத்தின் இயற்கை எழிலையும் ஈழத்து மக்களின் அவல வாழ்வையும் ஒருங்கே காட்சிப்படுத்தியிருக்கிறது. என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் உருக வைக்கின்றன. பின்னணி இசை திரைக்கதைக்குப் பக்க பலமாக அமைந்திருக்கிறது.

படத்தின் வசனங்களையும் பாடல்களையும் எழுதியதோடு ஒரு போராளி வேடத்திலும் நடித்திருக்கிறார் தீபச்செல்வன். அவர் பொறுமையாகத் தெரிகிறார். அவருடைய வசனவரிகள் ஒவ்வொன்றும் அனலாய் தெறிக்கிறது. ஒரே படத்தில் இவ்வளவு விசயங்களை, அதுவும் நுட்பமான அரசியல் விசயங்களையும் ஒரு வசனம் ஒரு காட்சி மூலம் பார்வையாளனுக்கு கடத்தி விட முடியும் என்பதற்குச் சான்றாக விளங்குகிறார் இயக்குநர் ரஞ்சித் ஜோசப். ஆயுதம் ஏந்தியபோருக்குப் பின்னர் தமிழ் நிலங்களில் சிங்களர்களின் ஆக்கிரமிப்பு, போர்க்காலத்தில் இயக்கம் உருவாக்கிய தொழில்களின் மேற்பார்வையாளராக இருந்தவர்களே அதற்கு தனி உரிமையாளர்களாகி ஒதுங்கியது, தமிழினத்துக்குள்ளேயே இருக்கும் எட்டப்பன்கள், ஈழமக்களின் இன்றைய கையறு நிலை, குறிப்பாக போராளிகளின் நிலை ஆகிய எல்லாவற்றையும் சமரசம் இன்றி நேர்மையாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

ஜெயிலில் இருந்து வருகிற பொடியன்கள் எல்லாம் கொஞ்ச நாள்ல இப்படி திடீர்னு,செத்துப்போயிடுதுகள் என்கிற ஒற்றைவரி வசனத்துக்குள் ஓராயிரம் செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

எல்லாவற்றையும் தாண்டி அன்றாட வாழ்வுக்கே அல்லாடும் நிலை என்றாலும் மனம் தளராமல், குழப்பம் இல்லாமல் அண்ணன் சொன்ன அறமே நம்மைக் காக்கும், நம் இனத்தைக் காக்கும் என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்லியிருக்கும் ரஞ்சித் ஜோசப் இருளில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு கலை வெளிச்சமாக மின்னுகிறார்.

திரையரங்குகளில் வெளியிடக் கூடிய சர்வதேச தரத்துடன் சினம்கொள் படம் தயாரிக்கப்பட்டு இருந்தாலும் தணிக்கை சான்றிதழ் பெற போராட வேண்டியிருக்கும் என்பதால் படத்தை ஜனவரி 14 பொங்கல் முதல் Eelam play என்ற ஓ.டி.டி தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

நடிகர்- நடிகைகள்

அரவிந்தன் சிவஞானம்

நர்வினி டெரி

லீலாவதி

பிரேம்

தீபச்செல்வன்

தனஞ்ஜெயன்

பாலா

மதுமிதா

பேபி டென்சிகா

தொழில் நுட்பக் கலைஞர்கள்:

ஒளிப்பதிவு : எம்.ஆர்.பழனிக்குமார்

இசை : என்.ஆர்.ரகுநந்தன்

வசனம் மற்றும் : தீபச்செல்வன்.

எடிட்டிங் – அருணாசலம் சிவலிங்கம்.

கலை – நிஸங்கா ராஜகரா.

தயாரிப்பு:காயத்ரி ரஞ்சித், பாக்யலட்சுமி வெங்கடேஷ்.

கதை, திரைக்கதை,

இயக்கம்: ரஞ்சித் ஜோசப்

இராமானுஜம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More