தமிழ் நடிகர்களின் ரகசியங்கள் என்னென்ன..

தமிழ்ப்பட கதாநாயக நடிகர்களிலேயே, தியாகராஜ பாகவதரைப் போல, வளமையின் உச்சத்தில் வாழ்ந்தவர்களும் இல்லை; வறுமையின் கோரத்தில் வீழ்ந்தவர்களும் இல்லை.

திருமணமே செய்துகொள்ளாத முதல் தமிழ்ப்பட நடிகை டி.ஆர்.ராஜகுமாரி தான். திரையுலகை விட்டு ஒதுங்கிய பிறகு, மீடியாக்களின் வெளிச்சத்திற்கே வராத, பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே காலத்தைக் கழித்த பிரபல நடிகையும் இவர்தான்.

தமிழ்த்திரையுலகின் முதல் கதாநாயகி நடிகையும், முதல் பெண் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான டி.பி.ராஜலட்சுமி, ஒரு தெருவிற்கே உரிமையாளராக இருந்தார். “இந்தியத்தாய்” என்ற பெயரில் படம் தயாரித்து, படுதோல்வியடைந்தார். சொத்துக்களை விற்று, வாடகை வீட்டில் குடியேறினார். விருதிலிருந்த தங்கத்தை உருக்கிவிற்று வந்த வருவாயில், பேரனின் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டு, பக்கவாத நோய்க்கும் ஆளாகி, மீளாமலே மாண்டார். சிறுவயதிலேயே மணவிலக்கு செய்யப்பட்டு, வளர்ந்த பிறகு, காதல் திருமணம் செய்துகொண்ட முதல் தமிழ்நடிகையும் இவர்தான்.

பிரபல நடிகராகவும், வசதியானவராகவும் இருந்தாலும், குடிப்பழக்கம், சில சொந்த படங்களின் படுதோல்விகள் உள்ளிட்ட காரணங்களால், சொத்துக்கள் யாவையுமிழந்து, மனைவியின் தாலியை அடைமானம் வைத்து வாழுமளவிற்கு வறுமைக்கு வந்தவர் டி.ஆர்.மஹாலிங்கம் அவர்கள். கண்ணதாசன், இவரை அணுகி, தன் சொந்த தயாரிப்பான “மாலையிட்ட மங்கை” என்ற படத்திற்கு, இவரை நாயகனாக ஒப்பந்தம் செய்தார். அப்படத்தின் வெற்றியால், இவர் மீண்டும் திரையுலகில் பிரபலமானார். பொருளாதார நிலையையும் ஓரளவுக்கு ஈடேற்றிக்கொண்டார்.

முதன்முதலில் படப்பிடிப்பு அரங்கினுள், படப்பிடிப்புத் தொழிலாளர்களுடனும், இனிமையாகப் பழகி, கலகலப்பான சூழலுக்கு வித்திட்ட தமிழ்த் திரைப்பட நடிகர் ஜெய்சங்கர்தான். தயாரிப்பாளர்,பேசிய சம்பளத்திலிருந்து குறைத்துக் கொடுத்தாலும் கண்டுகொள்ளமாட்டார். மீண்டும் அதே தயாரிப்பாளரே கால்ஷீட் கேட்டாலும் கொடுத்து விடுவார். படப்பிடிப்பிற்கும் முழு ஒத்துழைப்பு கொடுப்பார். தமிழ் கதாநாயக நடிகர்களில், குறுகிய காலத்தில் அதிக படங்களில் நடித்துமுடித்தவரும் இவர்தான்.(ஒன்பது ஆண்டுகளில் 100 படங்களில் கதாநாயகனாக நடித்தார்).

இந்தியாவிலேயே மாநில சட்டமன்ற உறுப்பினரான முதல் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன்தான். அண்ணாவின் மறைவு சோகம் தாளாமல், அதிகமாகக் குடித்து, தற்கொலைக்கு முயன்று, காப்பாற்றப்பட்ட நடிகரும் இவர்தான்.

நடிகர் செந்தாமரை, பள்ளி ஆசிரியராக இருந்து நடிகரானவர். கல்லூரி ஆசிரியராக இருந்து ஜெமினி கணேசன் நடிகரானார். அவரை அடுத்து, செந்தாமரைதான் இவ்வகையில் நடிகரானவர்.இவரைப் போலவே, நடிகர் ராஜேஷும் பள்ளி ஆசிரியராக இருந்து நடிகரானவர். செந்தாமரை நாத்திகர். ஆனாலும் எண்ணியல் சாஸ்திரத்தில் தீவிர நம்பிக்கை உள்ளவராக இருந்தார்.

தமிழ் திரையுலகில், குறைந்த வயதிலேயே காலமான, பிரபலமான முதல் நடிகர் பி.யூ.சின்னப்பாதான். இறக்கும்போது இவர் வயது 35 மட்டுமே. புதுக்கோட்டைக்காரரான இவர், புதுக்கோட்டை சமஸ்தானத்தில் நிறைய வீடுகளை வாங்கியதால், புதுக்கோட்டை அரசர், இவருக்கு அவ்வூரினர் யாரும் வீடுவிற்க தடைவிதித்ததாக செவிவழித் தகவல் உண்டு. “இந்திரஜித்” படத்தில் நடித்த இவர், குடிபோதையில் மூழ்கி நடிக்க வராமல் தாமதிக்க, படத்தயாரிப்பாளர் டி.ஆர்.சுந்தரம், இவரைச் சவுக்காலடித்து, படத்திலிருந்து நீக்கிவிட்டு, தானே நாயகனாக நடித்தார். படம் படுதோல்வியடைந்தது. ஆனாலும், அது குறித்து, டி.ஆர்.சுந்தரம் கவலைப்படவில்லை. தனது திரையுலக மார்க்கெட் பிரபலமாக இருந்த காலத்திலேயே மது, புகை பழக்கம், வரைமுறையற்ற அசைவ உணவுப் பழக்கங்களால் உடல் பருமனாக்கிக் கெடுத்துக்கொண்ட முதல் தமிழ்த்திரையுலகப் பிரபலமும் இவரே ஆவார். தமிழ்ப்படங்களில், இரட்டை வேடமேற்று நடித்த முதல் நடிகரும் இவர்தான் (படம் “உத்தம புத்திரன்”).

இராணுவத்தில் பணியாற்றிவிட்டு, திரையுலகிற்கு வந்த முதல் தமிழ்நடிகர், O.A.K.தேவர் ஆவார்.

பாரதிராஜாவால் அறிமுகமாகி, தமிழ்திரையுலகில் பிரபல நடிகராக வலம்வந்து கொண்டிருந்தபோதே, மதுமோகம் மற்றும் பெண்மோகத்திற்கு அடிமையாகி, படப்பிடிப்புகளில் கூட போதையுடன் கலந்துகொண்டும், காலதாமதமாகப் பங்கேற்றும், தனது திரையுலகை மார்க்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்டுக்கொண்ட இரண்டாவது தமிழ்நடிகர் சுதாகர் ஆவார். (முதல் நடிகர் டி.ஆர்.மஹாலிங்கம் ஆவார்).

முதன்முதலில், விளிம்புநிலை வாழ்வியலைப் பிரதிபலிக்கும் வேடங்களேற்று (எ.கா: திருநங்கை, வெட்டியான்) நடித்த முதல் தமிழ் நகைச்சுவை நடிகர் சுருளிராஜன்தான்.

28 ஆண்டுகளில், 965 படங்களில் நடித்த முதல் தமிழ்ப்பட நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் தேங்காய்சீனிவாசன்தான். குறைந்த வயதிலேயே (44) அதிக படங்களில் நடித்த பெருமையும் இவருக்கே உரியது.

தமிழ் நடிகைகளிலேயே, அதிக அளவில், சொந்தப் படங்களைத் தயாரித்த நடிகை என்ற பெருமையும், தனி விமானம் வைத்திருந்த நடிகை என்ற பெருமையும் கே.ஆர்.விஜயாவிற்கே உண்டு. இவருடைய இயற்பெயர் தெய்வநாயகி. விஜயா என்ற பெயரை, இவர் சூடிக்கொள்ள தூண்டுதலாக இருந்தவர் எம்.ஆர்.ராதா ஆவார்.

தன் சொத்துக்களை ஏமாற்றி, தன்னிடமிருந்து பறித்துக்கொண்ட தன் பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து, வென்று, சொத்துக்களைக் கோவிலுக்கே எழுதிவைத்துவிட்டு, சமூக ஊடக வெளிச்சத்திலிருந்து ஒதுங்கி வாழும் பிரபல தமிழ்நடிகை காஞ்சனா ஆவார். விமானப் பணிப்பெண்ணாக இருந்து, தமிழ் நடிகையான முதல் பெண்மணி இவர்தான். டி.ஆர்.ராஜகுமாரியை அடுத்து, திருமணமே செய்துகொள்ளாத, தமிழ்த் திரையுலகின் இரண்டாவது பிரபல (நாயகி நிலை) நடிகையும் இவர்தான்.

எஸ்.வி.ரங்காராவ், தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகளில், தான் பங்கேற்கும் தேதிகள், நேரம் ஆகியவற்றைக்கூட, முன்கூட்டியே எழுதி இயக்குநரிடம் ஒப்படைத்துவிடுவார். அதன்பிரகாரம் (பெரும்பாலும்) நடித்துக் கொடுத்தும் விடுவார். தான் குறிப்பிட்டிராத தேதி, நேரங்களில், தன்னைப் படப்பிடிப்பிற்கு அழைத்தால், கடுமையாகக் கோபித்து, வர மறுத்துவிடுவார். வயோதிக வேடங்களிலேயே பெரும்பாலும் அசத்திய ரெங்காராவ், மாரடைப்பால் உயிரிந்தபோது, அவருடைய வயது 54 தான். அதாவது, இளம்வயதிலேயே, அதிக படங்களில் முதியவராக, பெரியவராக நடித்த தமிழ் & தெலுங்கு நடிகர் இவர்தான். சாவித்திரிக்கு அடுத்து, தெலுங்குத் திரையுலக ரசிகர்களால், வெகுவாகக் கொண்டாடப்பட்ட சமகால திரையுலக நடிப்புப் பிரமுகர், ரெங்காராவ் மட்டும்தான். நடிப்பின் மீதுள்ள ஆர்வம் காரணமாக, அரசாங்க (தீயணைப்புத்துறை) வேலையை இவர் உதறித்தள்ளியது குறிப்பிடத்தக்கது. மிதமிஞ்சிய மது மற்றும் புகைப்பழக்கத்தால், மாரடைப்பு ஏற்பட்டு காலமானாா்.

நன்றி : ta.quora.com

ஆசிரியர்