June 7, 2023 7:46 am

விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் ‘லியோ’ எனும் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இதற்காக பிரத்யேக காணொளி ஒன்றையும் படக்குழுவினர் இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.

தமிழ் திரையுலகத்தின் வியாபாரத்தை லாபத்துடன் விரிவாக்கம் செய்த படைப்பாளிகளில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘லியோ’.

இதில் விஜய் கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கிறார். இவர்களுடன் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், நடிகை பிரியா ஆனந்த், அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

மனோஜ் பரஹம்சா ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித் குமார் தயாரிக்கிறார்.

இந்திய திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ‘லியோ’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வட இந்திய மாநிலமான காஷ்மீரில் நடைபெற்றது.

கடும் குளிர் இருந்த போதும் படக்குழுவினர் பாதுகாப்பு அம்சங்களுடன் படப்பிடிப்பில் பங்கு பற்றினர். ஒரு மாத காலம் தொடர்ந்து நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

அத்துடன் கடும் குளிரிலும் ஒத்துழைப்பு வழங்கிய உள்ளூர் மக்கள், காவல்துறை அதிகாரிகள், துணை ராணுவ வீரர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து காணொளி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

மேலும் நாயகனான விஜய் படப்பிடிப்பிற்கு உதவி புரிந்த துணை இராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்து பேசியிருக்கும் காணொளியும் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்