Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் நேர்காணல் | சாந்தா ஜெராஜ் | ஆவூரான்

நேர்காணல் | சாந்தா ஜெராஜ் | ஆவூரான்

7 minutes read

மெல்பேர்ணில் கடந்த 04/08/13 புதன் கிழமை வி.ஜி.பி தொழில் நிறுவனத்தின் அதிபர் விஜிபி சந்தோசம் அவர்களின் தலைமையில் சாந்தா ஜெராஜ் அவர்களின்  இரண்டு நூல்கள் வெளியீட்டு வைக்கப்பட்டது. உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டுக்கு வருகை தந்த அம்பதுக்கும் மேற்பட்ட அறிஞர்கள் கலந்து கொண்டதோடு நூலையும் விமர்சனம்செய்து சிறப்பித்தார்கள்

சாந்தாக் கேக், சாந்தா சமையல், பல் கலைக் களஞ்சியம் என்பதோடு அவுஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் பல சஞ்சிகைகளில் பல ஆக்கங்களை எழுதிவரும் சாந்தா ஜெராஜ், யார் இந்த  சாந்தா ஜெராஜ்?  இந்தக் கேள்வியோடு அவரைப் போய் தான் பார்ப்போமே என்று அவரின் வீட்டுக் கதவைத் தட்டினோம் சிரித்த முகத்தோடு வரவேற்றார்.

 

கே: தமிழில் இவ்வளவு பற்றுடன் இலக்கியம், சமையல் கலைகள், படைக்கிறீர்கள் இதற்க்கு உங்களின் ஆசானாக இருந்து  ஊக்கி வித்தவர்கள் என்றால் யாரை சொல்வீர்கள்?

நான் முதலில் எனது பெற்றோரைத்தான் சொல்வேன் அவர்கள் தான் எனக்கு முதலில் ஊக்கிவித்தவர்கள் நான் எனது ஆரம்பக் கல்வியை மாத்தளையில் தொடர்ந்த போது வெறும் புத்தகப் படிப்போடு நின்று விடாது கலைகளில் ஈடுபடுத்திக் கொண்டேன் எமது கலைகளும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.

அதன் பின்பு யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் எனது படிப்பை தொடர்ந்தேன் அங்கேயும் படிப்போடு மற்றைய கலைகளிலும் என்னை ஈடுபடுத்தினேன் அதற்கான சந்தர்ப்பம் அங்கு கிடைத்தது. அதற்கு ஊக்கிவித்தவர் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்று இன்று சிட்னியில் வசித்து வரும்  திருமதி. ஞானாக் குலேந்திரன் அவர்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்

இவர் யாழ் பல்கலை கழகத்தின் பேராசிரியராகவும், பின்பு தஞ்சாவூர்ப் பல் கலைக் கழகத்தில் பேராசிரியராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கே: மாணவர் பருவத்தில் இருந்து தமிழிலும் கலைகளிலும் பற்றாக இருந்த நீங்கள் இன்று ஒரு சமையல் கலை நிபுணராக வரக் காரணம் என்ன?

எனது திருமணத்துக்குப் பின் என்னால் எனது உயர் கல்வியை தொடர முடியாமல் போய் விட்டது.  அதனால் பெண்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்க கூடாது என்ற நிலையில் பாடசாலைக் கல்வியை தவிர வேறு என்னென்ன கலைகளை கற்கலாம், எதிர் காலத்துக்கு வேண்டியதாக இருக்க வேணும் என்று தேடினேன் பெண்களுக்கு உகந்ததான தையல், கேக் செய்தல், கேக்அலங்காரம், மணப்பெண் அலங்காரம் என்று தேடித்தேடி எல்லாக் கலைகளையும் கற்றேன். மாத்தளையில் இருந்து கண்டிக்குப் போய் கற்று முடித்தேன்.

 

கே: திருமணத்தின் பின்பு இந்தக் கலைகளைக் கற்பதற்கு உங்களின் கணவரின் ஆதரவு, ஊக்குவிப்பு எப்படி இருந்தது?

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள் எனக்கு கணவர் அமைந்ததெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்று தான் சொல்வேன். எனக்கு அமைந்த கணவர் எனது விருப்பத்துக்கு தடையாக இருக்காமல் எனது விருப்பத்துக்கு ஒத்துழைப்பும் ஆதரவும் தந்த படியால் தான் நான் இன்று இந்த நிலையில் இருக்கிறேன் இந்தக் கலைகளை கற்கும் போது அவரே என்னை கூட்டிக் கொண்டு போய் கூட இருந்து கூட்டிக் கொண்டு வருவார் அவருக்கு இயலாத போது எனது பெற்றோர் உதவியுடன் வருவேன்.

 

கே: சாந்தா சமையல் கலை நிகழ்ச்சிகளை நீங்கள் தமிழ் நாட்டில் ஒளிபரப்பாகும் ஜெயா, சண், ராஜ் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து நடாத்தினீர்கள் அதன் அனுபவம் எப்படி இருந்தது?

1984 தொடக்கம் 89வரையும்சென்னையில் வாழ்ந்து கொண்டிருந்தோம். அந்தக் காலகட்டத்தில் சென்னையில் மூன்று கண்காட்சிகளை நடாத்தினேன் இரண்டு கேக் கண்காட்சிகளும் ஒரு மலர் கண்காட்சியும் இதனை அப்போது தூரதர்சன் ஒளிபரப்பியது சில சமையல் நிகழ்ச்சிகளை அவர்களுக்கும் செய்து காட்டினேன். அதன் பின்பாக வந்த கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தார் என்னை அழைத்து இதனை ஒரு தொடர் நிகழ்ச்சியாக செய்து மக்களுக்கு வழங்க ஒரு சந்தர்ப்பம் அமைத்து தந்தது இதற்கு தூரதர்சன் நிறுவாகிகளுக்குக் தான் நன்றி சொல்லவேண்டும்.

shaanth jeyaraj

 

கே: சமையல் கலையை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு தயாரிக்கும் போது அதில் உங்களுக்கு இருந்த சிரமங்கள் அதனால் பெற்ற அனுபவங்கள் என்று கேட்டால் எதனைச் சொல்வீர்கள்?

மிகவும் கஸ்ரமான நிலையில் தான் அதனை நடாத்தினோம் ஒரு குழுவாக இருந்து பத்து நிமிட நிகழ்ச்சிக்காக பல மணிநேரத்தை செலவு செய்தோம் அதில் பெரிய வரவேற்பு தமிழ் நாட்டு மக்களிடம் இருந்து கிடைத்தால் ஜெயா ரிவி, சண் ரிவி, ராஜ் ரிவி என்று ஒரு நாளைக்கு ஆறு சோக்கள் நடாத்தினோம். ஆறு நிகழ்ச்சிக்கும் போகும் போது புடவை, நகை, தலை அலங்காரம்  எல்லாம் மாற்றி தான் போகவேண்டும் இதற்காக பலர் சுற்றி இருந்து உதவி செய்வார்கள் இதனால் தான் குழுவோடு நாம் எப்படி வேலை செய்ய வேண்டும் என்று நான் முதலில் கற்றுக் கொண்டேன். ஐந்நூறுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நாடாத்தியது ஒரு பெரிய வெற்றி என்றே கூறுவேன்.  அதோடு இந்த ஐந்து வருடத்தில் மூவாயிரம் பெண்மணிகள் சமையல் கலை கற்றுக் கொண்டார்கள் தமிழ் நாட்டில் மட்டும்.

 

கே: சமையல் கலையில் ஒரு கைதேர்ந்த நிபுணர் என்ற பெயர் கிடைத்து விட்டது அதனை மற்றவருக்கும் கற்றுக் கொடுக்க முயற்சி செய்கிறீர்களா?

நான் முன்பு சொன்னது போன்று தொலைக்காட்சி நிகழ்சிகளின் போது மூவாயிரம் பெண்மணிகள் கற்றார்கள் அதன் பின்பு அவுஸ்திரேலியா வந்து பேர்த் நகரத்தில் வாழ்ந்த போது கலைக் களஞ்சியம் என்ற பெயரில் ஒரு அமைப்பை ஆரம்பித்து  அங்குள்ள சிறுவர்களுக்கு தமிழையும், நடனத்தையும் கற்றுக் கொடுத்ததோடு அங்கு இருந்த  சில பெண்களுக்கு கேக் செய் முறையையும், சமையல்கலையையும் கற்றுக் கொடுத்தோம். இலங்கையிலும், இந்தியாவிலும் கற்றுக் கொடுத்தது போன்று இங்கு அப்படி அமையவில்லை காரணம் பிள்ளைகள் அப்போது சிறியவர்களாக இருந்தார்கள் அவர்களைக் கவனிக்கவேண்டும் இனி புதிய இடம் அப்படி இருந்த போதும் பேர்த் நகரத்தில் இருந்து சிட்னி, மெல்பேர்ண் போன்ற நகரங்களுக்குச் சென்று சமையல் கலை கற்றுக் கொடுத்திருக்கிறேன்.

 

கே: நீங்கள் சிறந்த சிறுகதை எழுத்தாளர் பல கதைகளை நானும் படித்திருக்கிறேன். சிறுகதை எழுதும் ஆற்றல் எப்படி அமைந்தது?

உண்மையாகச் சொன்னால் இது எனக்கு இயற்கையாக அமைந்த ஒன்று நான் எதையாவது எப்போதும் எழுதிக் கொண்டு இருப்பேன் அதனால் நான் பார்த்த, எனக்கு உறுத்தலான சம்பவங்கள், என் மனதில் நிற்கும் போது அதை உடனே ஒரு தாளில் எழுதி வைத்து விட்டுத் தான் அடுத்த வேலை தொடர்வேன். சிறுதை எழுதுகிறேன் என்பதற்காக நான் நிறைய வாசிக்கிறேன் என்று சொல்லமுடியாது. எனக்கு வாசிப்பதற்கு நேரம் கிடைப்பது மிகவும் அரிது மற்றவர்கள் நிறைய வாசித்து எழுதுவார்கள் நான் அப்படி இல்லை. நான் இப்போதும் தமிழ் ஓசை, தமிழ் முரசு போன்ற பத்திரிகைகளுக்கு எழுதிக் கொண்டு தான் இருக்கிறேன். நான் சிறுகதைகள் எழுதி புத்தகம் போடவேண்டும் என்ற நோக்கத்துடனோ வெளியிட வேண்டும் என்றோ எழுதவில்லை எழுபத்தி(77) ஏழு தொடக்கம் இன்று வரை எழுதிய கதைகளை தொகுத்து தருணம் என்ற தலைப்பில் வெளியிடுகிறேன்.

 

கே: பல்கலைக் களஞ்சியம் என்றால் என்ன அதன் செயற்பாடுகள் என்ன என்று விளக்க முடியுமா?

நாங்கள் அவுஸ்திரேலியாவுக்கு வந்து பேர்த் நகரத்தில் வாழத்தொடங்கிய போது அங்கு குறைந்த எண்ணிக்கையிலான தமிழர்களே அங்கு வாழ்ந்தார்கள் அபோது எனது பிள்ளைகள் சிறுவர்கள் அவர்களுக்கு வேண்டிய தமிழை சொல்லிக் கொடுக்கவும் நடனம், இசை, நாட்டியம் சொல்லிக் கொடுத்து எமது  கலை பண்பாடு பேணவேண்டும் என்ற எண்ணம் எம்மில் ஒங்கி இருந்ததால் நானும் கணவரும் சேர்ந்து ஒரு பாடசாலை ஒன்றை ஆரம்பித்து எங்களால் முடிந்ததை செய்ய முற்பட்ட போது 1995 பல்கலைக் களஞ்சியம் ஆரம்பித்து தமிழையும், ஒரு பாடமாகவும் நடனம் இசை, மணப் பெண் அலங்காரம், சமையல் என்று எல்லாம் சொல்லிக் கொடுத்தோம்.

 

கே: ராஜ்ஷா புரொடக்ஷன் “இளமை” என்ற குறும் இசைப் படத்தை வெளியிடுகின்றது. நீங்களும் உங்கள் குடும்பமும் சினிமாப் பின்னணியுடன் தொடர்புடையவர்கள் என்பதை அறிகிறேன்.

இலங்கையில் எனது தாய் மாமன் பெயர் எஸ். எம் நாயகம், அவர் தஞ்சாவூரில் இருந்து  தொழில் ரீதியாக இலங்கை வந்தவர் சிங்கள மொழியிலான படங்களை எடுக்க தொழில் நூட்பக் கலைஞர்களை கொண்டு போய் இலங்கையில் சினிமா என்ற ஒன்றை ஆரம்பித்து வைத்தவர் அவர்தான் இலங்கையில் சினிமாவின் தந்தையும் அவர் தான் (father of the movie.) என்றால் எஸ்.எம். நாயகம் நான்

அந்தக் காலத்தில் நாம் விடுமுறைக்கு மாமாவின் வீட்டுக்குப் போகும் போதெல்லாம் நாங்கள் அந்த ஸ்ரூடியோக்குள் தான் இருப்போம் அங்கு பல படங்களின் காட்சிகளை படம் எடுப்பதை நாம் நேரில் பார்ப்போம்

அவர் பல சிங்கள வெற்றிப் படங்களை தந்தவர்  அந்தப் பழக்கப் பட்ட விடையம் அது எம்மிலும் பதிந்து கொண்டது அதன் பின்பு எனது கணவர் அவருடை முயற்சியில் உருவானது தான் ”காத்திருப்பேன் உனக்காக” திரைப்படம் இது தான் எமது சினிமாப் பிரவேசம் இதன் தொடர் எமது பிள்ளைகளும் இன்று வளர்ந்து  சினிமாக் கொம்பனி ஒன்றை ஆரம்பித்திருக்கிறோம், சினிமாப் படம், குறும்படம், விளம்பரப் படம் போன்றவை தயாரிக்கக் கூடிய கலைஞர்கள் பலர் இதில் இணைந்து செயல்பட இருக்கிறார்கள்.

 

கே: மெல்பேர்னில் தருணம் சிறுகதை (தொகுதி), அசைவ உணவுக் கையேடு, இளமை(இசை காட்சிப் படம்), பல்கலைக் களஞ்சியம் என்று அறிமுக விழாநடாத்த முடிவு செய்திருக்கிறீர்கள் இதனை விளக்கமாக சொல்லுங்கள்.

அவுஸ்திரேலியாவில் இவ்வாண்டு நடக்கவிருக்கும் மாபெரும் தமிழ் விழா உலகத்தமிழ் இலக்கிய மாநாடாகும் இதில் கலந்து சிறப்பிக்க தமிழகத்தை சேர்ந்த பிரபல விஜிபி தொழில் நிறுவனத்தின் அதிபர் திரு.விஜிபி. சந்தோசம் அவர்களும், கவிக்கோ அப்துல்ரகுமான், நீதியரசர் வள்ளிநாயகம் அவர்களுடன் இன்னும் அம்பதுக்கும் மேற்பட அறிஞர்கள் கலந்து கொள்ள வருகிறார்கள். திரு.விஜிபி. சந்தோசம் அவர்கள் எனது ஆக்கங்களை வெளியீட்டு வைத்து சிறப்புரை ஆற்றுவார்கள். இந்த நிகழ்ச்சியில் மற்றைய அறிஞர்களும் சிறப்புரை ஆற்றி  விழாவை பெருமைப் படுத்துவார்கள்.

 

கே: இவ்வளவு சாதனைகளையும் செய்து விட்டு மிகவும் சாதாரணமாக இருக்கும் நீங்கள் இங்கு வாழும் பெண்களுக்கு என்ன சொல்வீர்கள்?

அனைத்துப் பெண்களும் தமக்கு அமைந்த வாழ்க்கை இது தான் என்று இருந்து விடாமல் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க முயற்சி செய்ய வேண்டு நாம் எதை செய்ய வேண்டும் என்று நாம் முதலில் தீர்மானிக்க வேண்டும் எது எமக்குப் பொருத்தமானது என்பதை தேர்ந்தெடுத்து அதில் முழுக்கவனத்தையும் செலுத்தி உண்மையாக உழைக்க வேண்டும். தொலைக்காட்சி பார்ப்பதாக இருந்தாலும் சரி குறிப்பிட்ட நேர்த்தை ஒதுக்கி அதனை செய்யவேண்டும். நாளாந்த வாழ்க்கைக்கு தேவையானதை அதாவது சமையல் கலை, கேக் அலங்காரம், தையல் கலைகளை கற்கவேண்டும் இன்று வாழ்க்கை முறை மாறிவருவதால் நாமும் அதனோடு ஒத்துப் போகவேண்டும்.  இயன்றவரை இவைகளை பழகவேண்டும் அப்படி செய்யப் பழகினால் வாழ்வில் சந்தோசமாக வாழலாம்.

 

நன்றி, வணக்கம் .

arooraan   ஆவூரான் | அவுஸ்திரேலியாவிலிருந்து

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More