Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் வாடகைத் தாயாக மாறும் உறவினர்கள்!

வாடகைத் தாயாக மாறும் உறவினர்கள்!

6 minutes read

குழந்தையின்மை பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லா கருத்தரிப்பு மையத்திலும் தம்பதியினரின் கூட்டம் அலைமோதிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் வாடகைத் தாய்க்கான தேவை வரும் காலங்களில் அதிகமாகும் வாய்ப்புள்ளது. மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தம்பதிகளுக்கு இந்தியா, வாடகைத் தாய்களின் இருப்பிடமாக உருமாறி வருகிறது.

ஆனால் இவற்றால் பண்பு நெறியற்ற நடைமுறைகள், வாடகைத் தாய்கள் ஏமாற்றப்படுதல், இவர்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளைக் கைவிடுதல், மனித கருவின் ஆரம்ப நிலை மற்றும் கருப்பைகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் இடைத்தரகர்களின் மோசடிகள் எனப் பல சம்பவங்கள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகிறது.

கடந்த சில வருடங்களாக, பல்வேறு ஊடகங்களில் இந்தியாவில் வணிகரீதியாக நடைபெறும் வாடகைத் தாய் கருத்தரிப்பு குறித்துப் பரவலாகக் கண்டனம் தெரிவிக்கப்படுவதோடு, தடை செய்யப்பட்டு பொதுநல வாடகைத் தாய் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. இதன் எதிரொலியாகச் சமீபத்தில் மாநிலங்களவையில் வாடகைத் தாய் நெறிமுறை மசோதா (2019) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மசோதாவில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது, அதன் விவரம் என்னவென்று வழக்கறிஞர் அஜிதா விளக்கம் அளித்தார்.

 ‘‘இந்திய மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் இச்சட்டம் முக்கியமானது. குறிப்பாக இந்தியாவில் வெளிநாட்டவரும், இங்குள்ள சில மோசடி கும்பல்களும் அவர்களது வறுமையைப் பயன்படுத்தி, வாடகைத் தாய் முறைக்கு பெண்களை அதிக அளவில் ஈடுபடுத்துகின்றனர்.

இதில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க 2016 ஆம் ஆண்டு ஓரு மசோதா கொண்டு வந்தார்கள். அதில் ‘வாடகைக்குக் கருப்பையைத் தானமாகக் கொடுப்பதோ, சுமப்பதோ, வணிக ரீதியான செயலுக்கு பயன்படுத்தவோ கூடாது’ என்பது முக்கிய கருப்பொருளாக இணைக்கப்பட்டு இருந்தது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவிலும் இதுவே வலியுறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டை சேர்ந்த குழந்தையில்லாத தம்பதியினர், இந்தியாவில் உள்ள வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற ஏற்பாடு செய்தனர். குழந்தை பிறப்பதற்குள் அந்த தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து விட்டனர். யாரிடம் குழந்தையை ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இப்பிரச்சினை குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம்  சில வழிக்காட்டுதல்களை தெரிவித்தது. இது ேபான்ற சம்பவங்களின் அடிப்படையில் 2016 ஆம் ஆண்டு சில திருத்தங்கள் கொண்டு வந்தனர்.  

இந்திய வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெற நினைப்பவர்கள் இந்தியத் தம்பதிகளாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. எப்படி ஒருவருக்கு உறுப்பு தானம் செய்யும் போது சில நெறிமுறைகளோடு கையாளப்படுகிறதோ, அதே போல் ஒரு சூழல் இதற்கும் கொண்டுவரப்பட்டது. முக்கியமாக, வசதியான பணக்காரர்கள் தங்கள் அழகு கெட்டு விடக் கூடாது என்பதற்காக வாடகைத் தாயை அணுகுகிறார்கள்’’ என்றவர் இந்த முறை அதிகமானதற்கான காரணங்களைக் கூறினார்.

“உலகமயமாதல், தனியார் மயமாதல், தாராமயமாதல் போன்ற காரணிகள் இந்தியாவில் புகுத்தப்பட்ட நாட்களிலிருந்து அரசுத் துறைகளைவிட, தனியார் துறையின் வளர்ச்சி அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது. அங்கு தொழிலாளர்களுக்கு நியாயமில்லாத பணிச்சூழல், கட்டுப்பாடுகள் அதிகமாக இருப்பதால், அவர்களின் பாதுகாப்பு குறித்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தப்படுவதில்லை. தொழிலாளர் நலச் சட்டங்கள் இருந்தாலும் தனியார்த் துறைகளில் அவை நீர்த்து விடுகிறது. ஒவ்வொரு ஆணும், பெண்ணும் பத்து முதல் பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்கின்றனர்.

வேலை முடிந்து வீட்டுக்கு செல்ல இரண்டு, மூன்று மணி நேரம் டிராபிக் நெரிசலில் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் இயல்பாகவே அவர்களின் உடல் மற்றும் மனம் சோர்வடைந்து, ஆரோக்கியமான குழந்தை பெற்றுக் கொள்ளும் சூழல் குறைந்து வருகிறது.

ஒரு காலத்தில் குழந்தைகளைக் கட்டுப்படுத்த கருத்தடை மாத்திரைக் கொடுத்தார்கள். தற்போது கருத்தரிக்க வைப்பதற்காக தெருக்கு தெரு மையங்கள் கோடி கோடியாகக் கொள்ளையடித்து வருகின்றனர். உணவு, சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை என்று ஒவ்வொரு இடமாகப் பார்த்தால் ஒட்டு மொத்தமாக அைனத்தையும் நாம் சீரழித்து வைத்திருக்கிறோம். இது போன்ற குழந்தையின்மை விஷயம் விவாகரத்துக்கும் காரணமாக அமைகிறது” என்றார்.    

வாடகைத் தாயாகச் செல்லும் பெண்களை, மருத்துவமனை நிர்வாகம், குழந்தையில்லாத தம்பதியினர், தரகர்கள் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள். ஆனால் குழந்தையைப் பெற்ற பிறகு வாடகைத் தாய்களை யாரும் கண்டுகொள்வதில்லை. மேலும் தரகர்கள் பிடியில் சிக்கி வாடகைத் தாய்கள் ஏமாற்றப்பட்டு வருவது தொடர்கதையாகிறது. இது குறித்து கூறும் அஜிதா, “வாடகைத் தாய்மார்களாக மாறும் பெண்கள் பெரும்பாலும் வறுமையின் காரணமாகத்தான் இந்த தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள்.

இதில் பல பெண்கள் உடல் மற்றும் மனதால் மாற்றங்களை சந்தித்து பல சிரமங்களுக்கு ஆளாகின்றனர். மேலும் வாடகைத்தாயாக இருப்பதற்காக போடப்படும் உடன்படிக்கை இவர்களுக்குச் சாதகமாக இருக்கிறதா என்பது அவர்களுக்கே வெளிச்சம்” என்று கூறியவர் தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மசோதா பற்றிப் பேசினார்.

“தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மசோதா விதிமுறைகளாக வரும் போதுதான் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும். வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்ள விரும்பும் தம்பதியினர்கள் அத்தியாவசிய சான்றிதழ், தகுதி சான்றிதழ் என்ற இரு சான்றிதழ்களை முக்கியமாக சமர்ப்பிக்க வேண்டும்.

அத்தியாவசிய சான்றிதழ் என்பது தம்பதி இருவரில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான சாத்திய கூறுகள் இல்லாத பட்சத்தில் மாவட்ட மருத்துவ குழுவிடம் அதனை உறுதிப்படுத்தி பெற வேண்டும். குழந்தை பிறந்த பிறகு, தம்பதியினர் தான் குழந்தையின் பாதுகாவலர்கள் என்கிற சான்றிதழை நடுவர் நீதிமன்றத்திலிருந்து பெற வேண்டும். வியாபார ரீதியில் பணம் கொடுத்து வாடகைத் தாயாக அமர்த்தக்கூடாது.

ஆனால், மருத்துவச் செலவு, காப்பீட்டுச் செலவு போன்றவற்றை அவருக்குக் கொடுக்கலாம். இவை அத்தியாவசியமானது.பெற்றுக் கொள்பவர்கள் இந்தியாவில் திருமணமாகி குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் நிறைவடைந்தவர்களாக இருக்கணும். வாடகைத்தாயாக இருப்பவர் அந்த தம்பதிக்கு நெருக்கமான உறவினராக இருப்பதோடு, அவரும் திருமணமாகி ஒரு குழந்தை பெற்றிருக்க வேண்டும்.

வாடகைத்தாயாக வருபவர்கள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுத்தரவேண்டும். இதை மீறுபவர்கள் மீது கடுமையான தண்டனை பிறப்பிக்கப்படும்” என்று கூறும் அஜிதா,  அதில் உள்ள பிரச்னைகள் குறித்தும் விவரித்தார்.

“தம்பதிக்கு நெருக்கமான உறவினர் என்பதற்கான அளவுகோலினை தெளிவாக குறிப்பிடவில்லை. இங்குதான் தவறுகள் நடக்கவும், முறைகேடான விஷயங்களுக்கும் வழிவகுக்க வாய்ப்பிருக்கிறது” என்றவர், இந்தியாவில் நிறைவேற்றப்படும் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் பற்றிக் கூறினார்.

“தற்போது தாக்கல் செய்துள்ள மசோதா இன்று அவசியமானது. ஆனால், நாட்டில் உள்ள மிகச் சிறந்த சட்டங்கள் மிகச் சறியான முறையில் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை. உதாரணமாக பெண்களை குடும்பம், பாலியல் வன்முறையிலிருந்தும், உடல்-மன ரீதியாக பாதிக்கப்படும் போது அவர்களை பாதுகாக்கும் நிவாரணமாகச் சட்டங்கள், விதிமுறைகள் சிறப்பானதாக இருந்தாலும், அதை புரோஜனமில்லாத சட்டமாகத்தான் எங்களைப் போன்ற வழக்கறிஞர்களால் பார்க்கப்படுகிறது.

லஞ்சம் வாங்குவது குற்றச் செயல் என்று எல்லோருக்கும் தெரியும். லஞ்சம் வாங்கும் நபர் மீது புகார் அளிக்கும் போது, நமது பெயர் வெளியில் தெரியாமல் அவருக்கு உரிய தண்டனை கொடுக்க வேண்டும். ஆனால், இங்கு நடப்பது எல்லாம் தலைகீழ். லஞ்சம் வாங்கிய நபர் மீத புகார் அளித்தால் பாதிப்பு புகார் அளித்தவருக்கு தான் ஏற்படுகிறது. விளைவு, குற்றம் சுமத்துபவர் குற்றவாளிகளாக பாவிக்கப்படுகிறார்கள்.    

 சமீபத்தில் பொள்ளாச்சியில் அரங்கேறிய பெண்களுக்கு எதிரான உச்சபட்ச  வன்முறையில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் மட்டும் தைரியமாக புகார் கொடுக்கிறாள்.

அந்த பெண்ணின் குடும்பத்தினரை பற்றி காவல்துறை அதிகாரி வெளியே சொல்லும்போது மொத்த குடும்பமேபாதிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு நாட்டில் இது போன்ற சட்டங்கள் அவசியமானதாக இருந்தாலும், அது நடைமுறையில் எப்படி என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’’ என்றார்.

இயற்றப்படும் சட்டங்கள் நன்மைக்கானதாக இருந்தாலும், நடைமுறைப் படுத்துவதில் சிக்கல்கள் உள்ளது. நமக்கான அடிப்படை உரிமைகள் என்னென்ன என்பதைக் கூட அறிந்து கொள்ளத் தயாராக இல்லை. இந்த சூழலில், ‘‘இது போன்ற சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நமக்கும் பங்கு இருக்கிறது” என்று கூறும் அஜிதா, இதற்கான தீர்வினை முன்வைக்கிறார்.

“ஒவ்வொரு இடத்திலும் சண்டையிட்டு, போராடினால் மட்டுமே அதற்கான தீர்வு கிடைக்கும். ஒரு காலத்தில் போக்குவரத்து காவலர்கள் பணம் வாங்குவதற்கு அளவே இல்லாமல் இருந்தது.

ஆனால், இன்று அந்த சூழல் வெகுவாகக் குறைந்துள்ளது. நாம் பணம்  கட்டினால் அதற்கு சிலிப் தர வேண்டும், அதேபோல் கார்டில் கொடுக்கிறோம். உடனே கொடுக்க முடியவில்லை என்றால் பில் வாங்கி போஸ்ட் ஆபீசில் கட்டுகிறோம். இப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ, மக்கள் தங்கள் போராட்டங்களை வெவ்வேறு வடிவில் காட்டினர்.

பணம் வாங்குபவரை நேரடியாக உயர் அதிகாரிகளிடம் அடையாளப்படுத்தும் அளவிற்கு வாட்ஸ் அப் போன்ற தொழில் நுட்பம் வளர்ந்திருக்கிறது.     
இப்படி மாற்றங்கள் நிகழ எல்லோரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

குறிப்பாக அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஆளுகின்றவர்கள் இதை நடைமுறைப்படுத்துவதற்கான எண்ணங்கள் கொண்டவர்களாக மாற வேண்டும். இதில் மக்களின் செயலுக்கும், போராட்டங்களுக்கும் தகுந்தாற் போல் மாற்றங்கள் உருவாகும். அறம் பேணுதல் என்பது சமூகத்திலிருந்தால் மட்டுமே நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஆட்சியாளரைக் கேள்வி கேட்க முடியும்” என்றார்.

– அன்னம் அரசு

– ஜி.சிவக்குமார்

நன்றி : குங்குமம் தோழி | தினகரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More