Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் குழந்தைகளின் நடவடிக்கைகளை மாற்றும் தந்திரங்கள்

குழந்தைகளின் நடவடிக்கைகளை மாற்றும் தந்திரங்கள்

4 minutes read

குழந்தையின் செயல்பாட்டை மாற்றும் தந்திரங்கள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கவனத்தை மாற்றுதல்
உங்கள் குழந்தையை ஒரு நடவடிக்கையிலிருந்து இன்னொரு நடவடிக்கைக்கு மாற்றுவதென்பது, உங்களுக்கு கடினமான ஒன்றாக இருக்காது. எப்போதென்றால், அவர்களின் தேவைகளை நீங்கள் உணர்வு பூர்வமாக அறியும்போது.

உங்கள் குழந்தை விளையாட்டுப் பொருட்களை வைத்துக்கொண்டு, நீங்கள் ரசிக்கும்படியான ஒரு விளையாட்டை மேற்கொண்டுள்ளது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அது இரவுநேரம். உங்கள் குழந்தை தூங்குவதற்கான நேரமாக இருக்கிறது. சரியான நேரத்தில் குழந்தை தூங்கி எழுந்தால்தான் அதன் ஆரோக்கியமும், மறுநாளைக்கான அதன் செயல்பாடும் சிறப்பாக அமையும் என்ற கவலை உங்களுக்கு. ஆனால் குழந்தையோ விளையாட்டில் தீவிரமாய் இருக்கிறது. எனவே, விளையாட்டிலிருந்து உங்களின் குழந்தையை விடுவித்து, அதை படுக்கைக்கு அழைத்து வரும் செயல்பாட்டை நீங்கள் எப்படி சாமர்த்தியமாய் கையாள்வீர்கள். இதோ உங்களுக்கான வாய்ப்புகள்:

குழந்தை அழ அழ, அதை வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டு படுக்கைக்கு செல்வீர்கள்.
குழந்தையின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், அனைத்து விளையாட்டுப் பொருட்களையும் எடுத்து, அதற்கான பையில் போடுவீர்கள்.
படுக்கையின்போது உங்களின் குழந்தை விரும்பிக் கேட்கும் பாடலைப் பாடி, அந்த இசைக்கு உங்கள் குழந்தையின் ரியாக்ஷன் எப்படி இருக்கிறது என்பதை கவனித்து, சாதகமாக இருந்தால், குழந்தையை மெதுவாக தூக்கிக் கொண்டு, படுக்கைக்கு செல்வீர்கள்.
மூன்றாவது வகையை நீங்கள் தேர்வு செய்தால், நீங்கள் குழந்தையை கையாள்வதில் தேர்ச்சி பெற்றுள்ளீர்கள் என்று அர்த்தம். இக்கட்டுரை, குழந்தைகளின் நடவடிக்கைகளை சூழலுக்கு ஏற்ப மாற்றுவது குறித்த ஆலோசனைகளை பெற்றோர்களுக்கு வழங்குகிறது.

நடவடிக்கை மாற்றம் தொடர்பாக குழந்தையைக் கையாளும்போது, எப்போதுமே சாதுர்யமாக நடந்து கொள்வது முக்கியம். குழந்தைக்கும் உணர்வுகள் உண்டு, அதற்கும் விருப்பங்கள் உண்டு என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம். உதாரணமாக, ஒரு பெரிய நபர், ஆர்வமாக ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாலோ அல்லது படம் பார்த்துக் கொண்டிருந்தாலோ, அவர் அதிலிருந்து வேறு ஒரு செயல்பாட்டில் உடனே ஈடுபட விரும்ப மாட்டார். ஆனால், குழந்தை மட்டும் தன் செயலை உடனே மாற்றிக் கொள்ளும் என்று நாம் நினைப்பது தவறு.

பெற்றோர், தம் குழந்தையிடம் ராணுவ கட்டுப்பாட்டையும், கண்டிப்பையும் காட்டக் கூடாது. மாறாக, நெகிழ்வுத் தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். குழந்தைக்கு அவகாசம் தருவது முக்கியம்.

எச்சரிக்கை
ஒரு குழந்தை பூங்காவில் மும்முரமாக விளையாடிக் கொண்டுள்ளது. அதற்கு வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமே இல்லை. ஆனால் சிறிது நேரத்தில் வீட்டிற்கு சென்றாக வேண்டும். இந்த சமயத்தில் பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?

குழந்தையிடம், இன்னும் 10 நிமிடங்கள் விளையாடி விட்டு, வீட்டிற்கு சென்றுவிடலாம் என்று கூற வேண்டும். ஆனால், அதை குழந்தை சட்டை செய்யாமல் இருக்கலாம். ஆனால், அதற்காக நீங்கள் 10 நிமிடங்கள் கழிந்தவுடன் உங்களின் குழந்தையை கோபத்துடன் சத்தம் போடக்கூடாது. மீண்டும் சிறிது அவகாசம் கொடுத்து, மென்மையான மற்றும் நட்பு ரீதியிலான குரலில், சொல்லி குழந்தையின் மனதை மாற்ற வேண்டும்.

அடுத்த சலுகை
பூங்காவில் மும்முரமாக விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தை, அவ்வளவு எளிதாக தன் நடவடிக்கையை மற்றொன்றுக்கு மாற்றிக்கொள்ள விரும்பாது. எனவே, பெற்றோர் பலவந்தமாக அந்தக் குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயற்சிப்பது சரியல்ல. அதற்கு பதிலாக வேறொரு வழிமுறையின் அடிப்படையில் நிலைமையைக் கையாள வேண்டும்.

நாம் இன்னும் 5 நிமிடத்தில் வீட்டிற்கு புறப்பட வேண்டும். அங்கே உனக்காக கரடி பொம்மை காத்துக் கொண்டுள்ளது என்று இன்னொரு சலுகையை வழங்க வேண்டும். இதன்மூலம், நாம் இந்த விளையாட்டை முடித்து வீட்டிற்கு சென்றால், அங்கே இன்னொரு சந்தோஷம் நமக்காக காத்துக் கொண்டுள்ளது என்ற ஆர்வத்தில் குழந்தை வீட்டிற்கு புறப்பட சம்மதிக்கும்.

குழந்தையை ஈடுபடுத்துதல்
ஸ்நாக்ஸ் எடுத்துக் கொள்ளும் நேரத்தில், உங்களின் குழந்தை நீச்சல் குளம் அல்லது வீட்டின் குளியல் தொட்டி ஆகிய ஏதேனும் ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்தால், அதை எப்படி வெளியேக் கொண்டு வந்து, உடை மாற்றி, பின்னர் அதற்கான தின்பண்டத்தை வழங்குவது? என்று ஒரு பெற்றோருக்கு குழப்பம் ஏற்படும்.

இதுபோன்ற நிலையில் குழந்தைக்கு ஆசை காட்டி அதன் கவனத்தை கவர முயற்சிக்க வேண்டும். “நாம் வேறு துணி மாற்றிக் கொண்டு ஸ்நாக்ஸ் சாப்பிடலாமா? ஸ்நாக்ஸ் யாருக்குப் பிடிக்கும்? என்று கேட்டு குழந்தைக்கு ஆர்வத்தை தூண்ட வேண்டும். இதன்மூலம், குழந்தையை தண்ணீரிலிருந்து வெளியே கொண்டு வருவது எளிதான ஒன்றாக அமையும்.

பாடல்கள்
குழந்தையின் நடவடிக்கைகளை மாற்றுவதில் பாடல்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. குழந்தையை பாடலின் மூலம் ஈர்த்து வைத்திருப்பது முக்கியம். உதாரணமாக, குளிக்க வேண்டிய நேரத்தில், உங்களின் குழந்தை விளையாட்டில் மும்முரமாக இருந்தால், வழக்கமாக குளிக்கும்போது பாடும் பாடல்களில் ஒன்றைப் பாடி, குளிக்க வருமாறு உங்களின் குழந்தையை தூண்ட வேண்டும்.

குளிக்கும்போது, வழக்கமான பாடல்களைப் பாட வேண்டும். தண்ணீர் ஊற்றும்போது ஒரு பாடல், சோப்பு போடும்போது ஒரு பாடல் மற்றும் துவட்டும்போது ஒரு பாடல் மற்றும் உடை மாற்றும்போது ஒரு பாடல் என பல்வேறு பாடல்களை கைவசம் வைத்துக்கொண்டு, குளிக்கும் செயல்பாட்டின் மீதான உங்கள் குழந்தையின் ஆர்வத்தை அதிகரிக்கலாம்.

பாராட்டு தெரிவித்தல்
ஒரு நடவடிக்கையிலிருந்து இன்னொன்றுக்கு குழந்தையை ஈடுபடுத்த முயற்சிக்கும்போது, அதுவரை குழந்தை ஈடுபட்டுக் கொண்டிருந்த செயலைப் பற்றி நாம் பாராட்டுத் தெரிவித்து, குழந்தையின் முயற்சியை அங்கீகரிக்க வேண்டும்.

உதாரணமாக, விளையாட்டு சாமானை வைத்து, வீடு கட்டிக் கொண்டிருந்தால், வீடு நன்றாக கட்டுகிறாய் என்று பாராட்டி விட்டு, இப்போது படிக்கும் வேலை இருக்கிறது. எனவே, அதை முடித்துவிட்டு, இந்த கட்டுமான வேலையைத் தொடரலாம். ஏனெனில், நீ ஒரு திறமைசாலி என்று குழந்தையைப் பாராட்டி, அதை படிக்கும் நடவடிக்கைக்கு மாற்றலாம்.

ஆதாரம் : தினமணி கல்விமலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More