Sunday, May 5, 2024

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் சிறுகதை | காதல் என்ன செய்யும்? | மகாலிங்கம் பத்மநாபன்

சிறுகதை | காதல் என்ன செய்யும்? | மகாலிங்கம் பத்மநாபன்

7 minutes read

Drawing1 (1)

உண்மையான காதல் என்ன செய்யும்? “எங்கிருந்தாலும் வாழ்க” என்று மனப்பூர்வமாக வாழ்த்தும். உண்மை மறைக்கப்பட்டு கட்டாயமாய் கட்டுவிக்கப்பட்ட பெண்ணை அவள் விரும்பியவனுடனேயே சேர்த்து வைத்த உண்மையான ஆண் மக்களும் இந்தப் பூமியிலே வாழ்ந்திருக்கின்றார்கள். காதலும் வீரமும் தான் எம் பழம் தமிழ் கலாச்சாரம் என்பதை புறநானூறு கூறும். வீரமுள்ள ஆண்மகன் தான் விரும்பிய பெண்ணுக்காக தன் உயிரையும் கொடுப்பான். இன்றைய கோழைகள் போல தற்கொலை செய்து அல்ல. அவள் விரும்பிய வாழ்வை அமைத்துக் கொடுக்க போராடி அப்போராட்டத்தில் தன் உயிரையும் கொடுப்பான்.

இன்று தமிழர்  மத்தியில் வீரமுள்ள ஆண் மக்களைக் காண முடியவில்லை. சுய நலம் மட்டுமின்றி  குறுகிய மனப்பான்மையும் கொண்ட கோழைகளைத் தான் காண்கின்றோம். தாம் விரும்பிய பெண் தமக்குக் கிடைக்க மாட்டாள் என்று அறிந்ததும் அவளை எப்படி அழிக்கலாம்? என்று திட்டமிடும் காமுகர்களைத் தான் காண்கிறோம். ஒருவேளை  மனோதத்துவ நிபுணர்கள் கூறுவதைப் போன்று ((Love& hate))காதலும் வெறுப்பும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தானோ?

இந்தக் கதையில் வரும் பூபாலன் இன்னொரு வகையானவன். இவன் 9ஆம் வகுப்பும் தங்கை விஜயா 6ஆம் வகுப்பும் படிக்கும் போது இவர்களின் தந்தை தாய் கனகத்தையும் இவர்களையும் தவிக்க விட்டு இறந்து போனார். கனகம் தன் சோகத்தை அடக்கிக் கொண்டு பிள்ளைகளை வளர்க்க என்ன செய்யலாம் என்று யோசிக்கத் தொடங்கினாள். இது தானே எமது சமூகத்தில் என்றென்றும் நடப்பது. பொறுப்பு வந்து விடுமோ  என்று உறவினர்கள் விலகி விடுவார்கள். ஊரும் சமூகமும் தமக்கு அதைப்பற்றி என்ன கவலை? என்று பேசாமல் இருந்து விடும். ஆனால் பெண்ணைத் தலைவியாய் கொண்ட குடும்பங்கள் எவரிடமும் எதனையும் எதிர்பார்ப்பதில்லை. தமது ஆற்றல் தம்மிடமுள்ள வளம் என்பதை வைத்துக் கொண்டு தமது வாழ்வைத் தொடர்வார்கள்.

கனகம் படிக்காதவள். கணவர் வழிவந்த ஒரு காணி மட்டும் நகரத்தின் எல்லையில் இருக்கின்றது. பிள்ளைகளின் படிப்புக்காக கணவர் உயிருடன் இருந்தபோதிருந்தே நகரத்தில் ஒரு சிறு வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார்கள். இப்போ பிள்ளைகளை உணவு உடை கொடுத்து வளர்க்கவேண்டும். படிப்பிக்க வேண்டும் காலையில் இடியாப்பம் அவித்து சாப்பாட்டு கடைகளுக்கு கொடுத்து சம்பாதிக்கத் திட்டமிட்டாள். கனகம் கூடைகளில் அடுக்கிக் கொடுத்துவிடும் இடியப்பங்களை கௌரவம் பார்க்காமல் தலையில் சுமந்து சென்று கடைகளுக்கு கொடுத்துவிட்டு வந்து பூபாலன் பாடசாலைக்குச் செல்வான். மாலையில் பாடசாலையால் வரும்போது அதற்குரிய பணத்தை கடைகளில் வாங்கி மா தேங்காய் முதலிய பொருட்களை வாங்கி வருவான். இப்போ அடுப்பு எரிக்க விறகுக்கு என்ன செய்வது? தென்னங் காணிகளுக்குச் சென்று மட்டை பொச்சு மட்ட வாங்கி சுமந்து வருவான். இது பட்டணம் அல்லவா? கழிவுப் பொருட்களுக்கும் காசு தான்.

பிள்ளை படும்பாட்டைப் பார்த்த கனகம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி ஒரு மாதிரி அவனுக்கு ஒரு பழைய சைக்கிளை வாங்கிக் கொடுத்தாள். பூபாலனால் இப்போ நகரத்தின் எல்லைக்கு சைக்கிளில் சென்று அங்குள்ள பற்றைகளிலிருந்து தடிகளைக் கட்டி சைக்கிளில் கட்டிவரவும் முடிந்தது. பூபாலன் தன் தாயின் மேலும் தங்கையின் மேலும் மிகுந்த அன்பும் பாசமும்வைத்திருந்தான். விஜயாவுக்கோ தன் அண்ணனின் மேல் உயிர். வீட்டு வாடகையையும் கொடுத்து பிள்ளைகளையும் வளர்க்க வருமானம் போதவில்லை. கனகம் பாக்கு கடைகளுக்கு பாக்குச்சீவிக் கொடுத்து வருமானத்தைப் பெருக்க எண்ணி தோழுக்கு மேல் வளர்ந்த பிள்ளையுடன் ஆலோசித்தாள். பணத்தைக் கொடுக்க மறந்த கடவுள் கனகத்தின் பிள்ளைகளுக்கு அழகைக் கொடுக்க மறக்கவில்லை. பூபாலன் நல்ல நிறமும் உயரமும் உள்ளவன். கனகம் அவன் பாடசாலை செல்ல ஆயத்தமாகும் போதெல்லாம் தன் கண்ணே பட்டு விடுமோ என்று பயப்படுவாள். விஜயாவும் அழகி தான். பூபாலனின் தோற்றப் பொலிவையும் மரியாதையாக கதைக்கும் முறையையும் கண்டு பாக்குக் கடைக்காரர்கள் பாக்குச்சீவும் பணியை மட்டுமல்ல இரண்டு பெரிய பாக்குவெட்டிகளையும் கொடுத்தார்கள். கனகம் விஜயாவையோ பூபாலனையோ பாக்கு வெட்ட அனுமதிப்பதில்லை. பூபாலனும் விஜயாவும் இரவில் தூங்கும் போது சில வேளைகளில் நடுச்சாமத்திலும் பாக்கு வெட்டும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.

ஓய்வாக இருக்கும் போது பூபாலன் தாயின் உள்ளங் கையைத் தடவி தடவிப் பார்ப்பான். “அம்மா நான் படித்து உத்தியோகம் பார்த்து உங்களையும் தங்கையையும் நல்லாய்ப் பார்ப்பேன்” என்று உறுதி கூறுவான். காலம் எப்படிப் போனதென்றே தெரியவில்லை. விஜயா இப்போது 9ஆம் வகுப்பு சித்தியடைந்துவிட்டாள். பூபாலன் க.பொ.த(சா.த)பரீட்சையில் சித்தியடைந்து  உயர் தர வகுப்பில் படித்துக் கொண்டு இருக்கிறான். இருவரையும் படிப்பிக்க கனகத்தால் முடியவில்லை. கன்னங்கரா கொண்டு வந்த இலவசக் கல்வி இப்போதும் உண்டு தான். சீருடை, புத்தகங்கள், அப்பியாசப் புத்தகங்கள், வசதிக்கட்டணம், பரீட்சைக்கான கட்டணம், ரியூசன் கட்டணம், விளையாட்டுப்போட்டிகள், நவராத்திரி விழாக்கள், ஆண்டு விழாக்கள் என்று எத்தனை எத்தனை செலவுகள். ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை. விஜயாவைப் பாடசாலையால் மறித்து தையல் பழக அனுப்பினாள். பிள்ளைகள் இருவரும் கெட்டிக்கார்ர்கள் தான். ஆண் ஆதிக்க சமுதாயம் அல்லவா? கனகம் குடும்பமும் பெண்ணை படிக்காமல் மறித்து தையலுக்கு அனுப்பியது.  அந்தக் காலக்கட்டத்திற்கு  ஏற்றது தான். தங்கை படிப்பை இடையில் நிறுத்தியதை நினைத்து பூபாலன் மிகவும் மனம் வருந்தினான். தங்கையை அணைத்து “நீ ஒன்றுக்கும் யோசிக்காதே. நான் படித்து உத்தியோகம் பார்த்து உனக்கு நல்ல சீதனம் கொடுத்து நல்ல மாப்பிளைக்குக் கட்டி வைப்பேன்” என்று கூறுவான்.

இப்போ பூபாலன் பல்கலைக் கழக மாணவன். தாயின் சம்பாத்தியம் போதவில்லை. தையல் பழகிய விஜயாவிற்கு ஒரு பழைய ‘சிங்கர்’ தையல் இயந்திரம் வாங்கியது இப்போது பெரிதும் உதவியது. விஜயா நன்கு தைப்பாளாகையால் இப்போ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடி விட்டது. தமயன் பல்கலைக்கழகத்தில் மற்றவர்களை விட எந்த விடயத்திலும் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக இரவு வெகு நேரம் வரை தைப்பாள். தாயாரினதும் தங்கையினதும் கடும் உழைப்பைக் கண்டு முதலில் உருகிய பூபாலனிடம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் ஏற்படத் தொடங்கியது.

விடுமுறையில் வரும்போது கனகமும் விஜயாவும் விழுந்து விழுந்து உபசரிப்பார்கள். விதம் விதமாய் சமைத்துக் கொடுப்பார்கள். ஆனால் பூபாலனின் மனம் இப்போது இங்கு இல்லை. வீட்டில் நிற்பதும் குறைந்தது. அயலவர்கள் பலதும் சொன்னார்கள். கோமளவல்லி என்ற தன்னுடன் பல்கலைக் கழகத்தில் படிக்கின்ற மாணவியைக் காதலிக்கின்றான் என்றும் அவளுடன் தான் விடுமுறைக் காலத்தில் சுத்தித் திரிகின்றான் என்றும் கூறினார்கள். கனகமும் விஜயாவும் அதை நம்பவில்லை. எது எப்படி என்றாலும் அவன் உத்தியோகம் பார்த்து விஜயாவைக் கரைசேர்ப்பான் என்றும் தன்னை ஒருபோதும் கைவிடமாட்டான் என்றும் உறுதிபட நம்பினார்கள். காலம் என்ன சொல்லப்போகின்றதோ?

Drawing2 (1)

யார் அறிவார் பூபாலன் பட்டம் பெற்று வெளியேறவும் அவன் முன்பு எழுதிய பரீட்சை காரணமாக அவனுக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்கவும் சரியாக இருந்தது. பூபாலன் ஒரு நாளையும் வீணாக்க வில்லை. உடனடியாகவே கோமளவல்லியைப் பதிவுத் திருமணம் செய்து தான் வேலை செய்யும் கொழும்பு மாநகரத்திற்கு அவளையும் அழைத்துச் சென்று விட்டான். பூபாலனுடன் படித்த இன்னொரு தோழனிடமிருந்து விஜயாவும் கனகமும் அறிந்து கொண்டனர்.  அவன் எங்கிருந்தாலும் கோமளவல்லியுடன் சந்தோசமாக வாழ வேண்டும் என்றே  நல்லூர்க்கந்தனிடம் வேண்டிக் கொண்டனர்.

பூபாலனின் செலவு இல்லாத படியால் அவர்களின் வருமானம் அவர்கள் இருவருக்கும் போதுமானதாக இருந்தது. விஜயா தாயாரை வெகுநேரம் வரை பாக்கு வெட்ட வேண்டாம் என்று தடுத்துவிட்டாள். தாயும் மகளும் சிக்கனமாகச் செலவு செய்த மிச்சம் பிடித்த காசில் விஜயாவிற் கென்று ஒரு சங்கிலியும் செய்து விட்டார்கள். விஜயாவும் கனகமும் பூபாலனிடம் வைத்த அன்பு ஒரு போதும் மாறவில்லை. ஆனால் ஒருமுறை கோமளவல்லியையும் அழைத்துக்கொண்டு தம்மிடம் வந்து போனான் என்றால் நல்லது என்று ஏக்கத்துடன் நினைப்பார்கள்.

ஆனால் பூபாலன் தாயாருக்கு  அல்லது தங்கைக்கு ஒரு கடிதம் போடக்கூட எண்ணவில்லை. அவன் அவர்கள் மேல் வைத்த அன்பு போலியானதா? அல்லது இன்னொருவர் மேல் புதிதாக அன்பு வைக்கும்போது முன்பு மற்றவர்கள் மேல் வைத்த அன்பு மறைந்து விடுமா? அன்பு அப்படிப்பட்டது அல்லவே? அன்பு எல்லை அற்றது அல்லவா? காதல் ஒருவனை அவ்வாறு மாற்றிவிடுமா “அம்மா உன்னை நான் கடைசிவரை காப்பேன்” என்று தாயாரிடமும் “உன்னை நான் கரையேற்றுவேன்” என்று விஜயா இடமும் வாக்களித்தவன் அதனை எவ்வாறு மறந்தான்? அவர்களின் உழைப்பில் படித்தவன் முதல் சம்பளத்தில் மட்டுமல்ல தொடர்ந்து வந்த எந்தச் சம்பளத்திலும் அவர்களுக்கு ஒரு சிறிய பகுதியையாவது அனுப்பினான் இல்லை. கோமளவல்லி வசதியாக வாழவேண்டும் என்பதற்காக நகரை விட்டுச் சற்றுத் தூரத்தில் தென்னையும் வேறு மரங்களும் சூழ்ந்த ஒரு வீட்டை தனக்கு போக்குவரத்துக்கு சற்று பிரைச்சனை என்ற போதிலும் வாடகைக்கு எடுத்து சில மாதங்கள் வரை மிக மகிழ்ச்சியாக வாழ்ந்தான்.

வார விடுமுறை நாட்களில் சினிமா நாடகம் கோல்பேஸ் கடற்கரை என்று மிக உல்லாசமாகப் பொழுது போயிற்று. காலம் ஒரு போதும் ஒரே மாதிரி நகர்வதில்லை. மாற்றம் ஒன்று தான் மாறாதது அல்லவா? அந்தக் காலத்தில் வீட்டிற்குள் குளியலறைகள் இல்லை. அதுவும் நகரத்திற்கு வெளியே கிணற்றில் தான் அள்ளிக் குளிக்க வேண்டும். கோமளவல்லி குளிக்கும் கிணற்றைச் சுற்றி தகரத்தினால் அடைக்கப்பட்ட வேலி இருந்தது. வீட்டின் உரிமையாளர் வீட்டை பூபாலனுக்கு வாடகைக்கு விட்ட போதிலும் தென்னை மரங்களைக் கள்ளுச் சீவுபவர்களுக்கு குத்தகைக்கு  விட்டிருந்தார். கள்ளுச் சீவுபவன் தான் குளிக்கும் போது மேலிருந்து தன்னை பார்ப்பதாக கோமளவல்லி முறைப்பாடு செய்தாள். பூபாலனின் கண்களைக் காதல் மறைத்தது. உண்மையிலேயே மரத்திலிருந்து பார்த்தானா? அல்லது காகம் இருக்கப் பனம் பழம் விழுந்தது போல கோமளவல்லி குளிக்கும் நேரமும் அவன் கள்ளிறக்க மரத்தில் ஏறிய நேரமும் ஒன்றாக இருந்ததா?

பூபாலன் எதனையும் ஆராயும் நிலையிலும் இல்லை அடுத்த நாள் பூபாலன் வேலைக்குச் செல்லவில்லை. நகரத்திற்குச் சென்று நல்ல கூரான கத்தி ஒன்றை வாங்கி வந்து கள்ளிறக்குபவன் வரும் வரை மறைவாக ஒளித்திருந்தான். ஒரு மரத்தில் இறக்கிய கள்ளினை நிலத்திதிலிருந்த பெரிய பாத்திரத்தில் ஊற்ற அவன் குனிந்தபோது பூபாலன் பாய்ந்து அவனது கழுத்தில் வெட்டிய போது அவனது தலை வேறாக விழுந்தது. பூபாலன் மலங்க மலங்க விழித்தான். தான் செய்துவிட்ட காரியத்தின் பரிமாணத்தை அப்போது தான் உணர்ந்தான். கோமளவல்லி தனது தலையில் அடித்துக்கொண்டு பேய் பிடித்தவள் போலக்கத்தினாள். வழக்கு நடைபெற்றது. கனகமும் விஜயாவும் தமது சொற்ப நகைகளையும் விற்று தம்மிடம் சேமிப்பிலிருந்த பணத்துடன் அப்புக்காத்துக்களுக்குக் கொடுத்து வழக்காடியும் பூபாலனுக்கு ஆயுள் காலச்சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

கோமளவல்லியுடன் இருக்க விரும்பிய பூபாலன் சிறையிலிருந்து தப்பியோடினான். திரும்பவும் கைது செய்யப்பட்டு முதல் முறை என்பதால் எச்சரிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டான். கோமளவல்லி ஒரு முறை அவனைச் சிறையில் சென்று பார்த்தாள். மறுபடியும் ஓடவேண்டாம் என்று மன்றாட்டமாக வேண்டினாள். நன்னடத்தையுடன் நடந்துகொள்பவர்களுக்கு தண்டனை குறைக்கப்படுவதால் பார்த்து நடந்துகொள்ளுமாறு கூறினாள். தான் செலவுக்குப் பணமின்றிச் சிரமப்படுவதாகவும் கூறி விடைபெற்றாள்.

கனகமும் விஜயாவும் கிரமமாக பூபாலனைச் சென்று பார்த்தனர். போகும் போது மதியத்திற்கு கோழி இறைச்சிக் கறியுடன் சோறு இரவுக்கு சம்பல் முட்டைப் பொரியலுடன் இடியப்பமும் கொண்டு செல்வார்கள். பூபாலன் மீண்டும் சிறையை விட்டுத் தப்பி ஓடினான். இம்முறை பிடிபட்ட அவனுக்கு மேலும் சில ஆண்டுகள் கூடுதலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கோமளவல்லி அவனை மீண்டும் சிறைக்குச் சென்று பார்க்கவில்லை.

கனகமும் விஜயாவும் பார்க்கச் சென்ற போது கோமளவல்லிக்குப் பண உதவி செய்யும் படி கூறினான். கனகமும் விஜயாவும் தம்மிடம் மீதமிருந்த பணத்துடன் தாங்கள் வாடிக்கையாக துணியெடுக்கும் கடையில் கோமளவல்லிக்கு துணிகளையும் எடுத்துக் கொண்டு அவளைப் பார்க்கச் சென்றனர். அவர்களுடைய ஏழ்மைக் கோலத்தில் சென்ற அவர்களை அவள் பெரிதாக வரவேற்கவில்லை. பூபாலன் தன்னுடைய பொறுப்பற்ற நடவடிக்கையால் தன்னுடைய வாழ்க்கையையும் அழித்து விட்டதாக குற்றம் சாட்டினாள். அவர்கள் சோகமாக வீடு திரும்பினர். அடுத்த முறை சிறைச்சாலை சென்ற கனகத்திடம் தந்தையின் காணியை விற்று தனது பங்கை கோமளெவல்லிக்குக் கொடுக்குமாறு கூறினான். அதனைத் தங்கைக்கு சீதனமாக்க் கொடுக்க இருந்ததை மறந்தான்.

கனகம் காணியை விற்று விஜயாவின் பங்கை புத்திசாலித்தனமாக வங்கியில் இட்டுவிட்டு பூபாலனின் பங்கை கோமளவல்லியிடம் சென்று கொடுத்தனர். கோமளவல்லி பெயருக்கு ஏற்ப உண்மையிலேயே மிகவும் அழகி தான். நல்ல நிறம். மெல்லிய உயர்ந்த தோற்றம். ஓவல் (oval) வடிவ முகம். பார்த்தவர் மயங்கும் வடிவம். பூபாலன் கண்டு மயங்கியது ஆச்சரியமல்ல. ஆனால் தான் வாழ்ந்த விதம் தன்னையே நம்பியிருந்த தாயையும் தங்கையையும் மறந்துபோனது தான் கொடுமை. ஆறு மாதங்கள் போயிருக்கும். ஒரு நாள் கோமளவல்லி கனகம் வீட்டிற்கு வந்தாள். அப்போது விஜயாவும் உடனிருந்தாள். கோமளவல்லி “அம்மா நான் பூபாலனுக்காக அம்மா ஐயா சகோதரர்களையும் விட்டு விட்டு வந்தனான். இப்போதும் சகோதரர்கள் என்னுடன் முகம் கொடுத்து பேசுவதில்லை. ஐயா அம்மாவுக்கும் வயது போய்விட்டது. தாங்கள் வெகுகாலம் உயிருடன் இருக்கப் போவதில்லை என்றும் தனிய இருந்து என்ன செய்யப் போகிறாய்? வேறு ஒரு கல்யாணத்தைச் செய். உன்ரை மச்சான்மார்  எல்லாவற்றையும் மறந்து உன்னைக் கட்டத் தயாராக இருக்கிறார்கள். என்று சொல்லி என்னைக் கட்டாயப்படுத்தினம். நீங்களும் பெண் பிள்ளை பெத்து வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கும் விளங்கும் தானே? தயவு செய்து பூபாலனுக்கு விளங்கப்படுத்துங்கோ” என்று கூறி பூபாலனுக்கு எழுதிய ஒரு கடிதமும் கொடுத்து சென்றாள்.  இவ்வாறாக பூபாலனின் தெய்வீகமான காதல் முடிவுக்கு வந்ததை நினைத்து கனகமும் விஜயாவும் மிகவும் மனம் வேதனையுற்றனர்.

அடுத்த முறை பூபாலனைப் பார்க்கப் போனபோது அவனிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. அதனை வாசித்த பூபாலன் வெகுநேரம் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தான். கனகமும் விஜயாவும் ஆறுதல் சொன்னார்கள். பார்வையாளர் நேரம் முடிந்து அவர்கள் போக வெளிக்கிட பூபாலன் ஓடிவந்து தனது இரண்டு கைகளாலும் இருவரினது கைகளையும் பற்றி “அம்மா நான் உங்களுக்குச் செய்த துரோகத்திற்கு இந்தத் தண்டனை எனக்குத் தேவை தான்” என்று சொல்லி “ஓ” என்று அழுதான். கம்பிகளினூடாக தம் கைகளைப்பற்றி அழுபவனுக்கு அவர்களால்  அவனது கையை தடவி விடுவதைத் தவிர என்ன கூறி ஆறுதல் படுத்த முடியும்?  இப்போது கனகம் வயது போய் கூனிக் கிழவியாகி விட்டார். விஜயாவும் தமிழர் சமூகத்தின் ஏழைப் பெண்களின் வழமை போல முதிர் கன்னியாகி விட்டாள். ஆனாலும் இன்றும் மாதமொருமுறை பூபாலனைப் பார்க்க சிறைச்சாலைக்குச் செல்கின்றார்கள். போகும்போது அவனுக்கு பிடித்த பச்சை அரிசிச்சோறு, கோழி இறைச்சிக்கறி, இடியப்பம், முட்டைப் பொரியல்  கொண்டு போக தவறுவதில்லை.

நிறைவு……

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வு நிலை அதிபர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More