ஒரு மாலைப் பொழுது. வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்தாள் நிவேதா. அவளுக்கு 21 வயது. மாநிறமாய் இருந்தாலும் பார்ப்பதற்கு அழகாக இருப்பாள். பழைய டிவிஎஸ் 50இல் மிகவும் நிதானமாக, பொறுமையாக வாகனத்தை இயக்கும் பழக்கம் கொண்டவள். அன்றைக்கும் அதே நிதானமான வேகத்துடன் வீடு திரும்பிக் கொண்டு இருந்தாள். வழியில் தோழியைச் சந்தித்து சிறிது நேரம் பரஸ்பரம் பேசி மகிழ்ந்து விட்டு, ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தாள். மொத்தமும் இரு அறைகளே கொண்ட எளிமையான வீடு. ஏழ்மையான வீடும் கூட.
அவளுடைய குடும்பம் அழகான அளவான குடும்பம். அம்மா,அப்பா மற்றும் தம்பி. இவர்கள் தான் இவளின் உலகம். குடும்பத்தின் மீது அளவற்ற பாசமும், அக்கறையும் கொண்டவள். அவர்களுக்கு இவள்தான் உலகம் என்று சொல்ல முடியாது. இவளது தம்பி தான் அவர்களின் உலகம். தம்பி இவளை விட 6 வயது சிறியவன். ஏனோ பெற்றோருக்கு இவளை விட, செல்லக் குழந்தையான தம்பியின் மீது பற்று அதிகம். எப்பவும் போலவே அன்றைக்கும், இரவு வேளையில் அம்மா உணவு சமைத்துக் கொண்டிருக்க, நிவேதாவும் அவளது தம்பியும், சிறு சிறு சண்டைகளுடன் தொலைக்காட்சியில் படத்தைப் பார்த்துக் கொண்டு நேரத்தை மகிழ்ச்சியுடன் கழித்தனர்.
இரவு மணி சுமார் 9.00 இருக்கும். திடீரென கதவு தட்டும் சத்தம் கேட்க, வழக்கம் போல் அப்பா தான் வந்து விட்டார்களோ என ஆசையில் குழந்தைகள் எழுந்து வாசலை நோக்கிப் பார்த்தனர். வெளியில் ஒரு ஆடவர் நின்று கொண்டிருந்தார்.
“இங்கே ராமநாதன் அவரோட வீடு?”
“ஹ்ம்ம்.. எங்கப்பாதான் சொல்லுங்க. என்ன விஷயம்?” என நிவேதா சாதாரணமாய்க் கேட்டாள். வந்திருந்தவரோ தலை மேல் இடி விழுந்த செய்தியைக் கூற வந்திருக்கிறாரென அவர்கள் யாரும் அறிய வாய்ப்பில்லை.
“வந்து.. அதாவது.. உங்க அப்பாவுக்கு.. உங்க அப்பா இருக்காங்களா? வெளிய எங்கயும் போயிருக்காங்களா?” என தட்டுத் தடுமாறிச் சொல்ல வந்த விசயத்தை எப்படி இவர்களிடத்தில் சொல்லுவது என மென்று விழுங்கினார். ‘இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? ஏற்க மன தைரியம் உள்ளவர்களா?” என்ற எண்ண ஓட்டத்தில், அவரோ வார்த்தைகள் கிடைக்காமல் தத்தளித்துக் கொண்டிருந்தார்.
“ ஆமா. ஏன் என்னாச்சு? நீங்க யாரு?” என நிவேதா கேட்க, “இல்லை நான் அண்ணா நிலையம் பஸ் ஸ்டாண்ட் கிட்ட இருந்து வர்றேன். உங்க அப்பா.. அவரு பஸ்ல ஏறும் போது, கால் தவறி கீழ விழுந்துட்டார். அந்த பஸ் ஓட்டிட்டு வந்த டிரைவர்,கண்டக்டரே பெரியாஸ்பத்திரில சேர்த்து இருக்காங்க. வீட்டுல தகவல் சொல்ல சொன்னாங்க. நான் வர்றேன்” என்று கொட்ட வந்த விசயத்தைக் கொட்டித் தீர்த்த படபடப்பில் சென்றுவிட்டார்.
செய்வதறியாது நிவேதா அம்மாவையும் தம்பியையும் பார்க்க, அம்மாவோ, ‘என்ன செய்வது?’ என்று குழப்பத்தில் திகைப்பில் இருந்தார். தம்பியோ, “அக்கா என்னாச்சு? யாரு அவரு?” எனக் கேட்க.. சட்டென நிவேதாவின் சமயோசித புத்திகூர்மை வேலை செய்யத் தொடங்கியது.
“தம்பியை நான் கூட்டிக்கொண்டு என்னன்னு பார்த்துட்டு வர்றேன்மா. அப்பாவுக்கு ஒண்ணும் ஆகி இருக்காது. நான் போயிக் கூட்டிட்டு வந்துடுறேன்மா. நீ இங்கயே அமைதியா இரும்மா” என அம்மாவின் படபடப்பைக் குறைக்க முயன்றாள். தம்பியை அழைத்துக் கொண்டு நிவேதா துரிதமாகக் கிளம்பினாள்.
“அம்மா எதுவும் பணம் இருக்கா?”
“எதுக்குமா ?”
“இல்லம்மா.. அப்பாவுக்கு மருந்து வாங்கணும்னா .. இல்ல வரும் போது ஆட்டோல வர்றது மாதிரி கூட இருக்கலாம். எதுக்கும் இருக்குறதை கொடும்மா.. பார்த்துக்குவோம்.”
“அப்பா கொடுத்த 300 ரூபாய் இருக்கும்மா.”
“சரி கொடும்மா “ என பணத்தை உள்ளாரப் படப்படப்போடு வாங்கிக் கொண்டு, வெளியில் எதையும் வெளிபடுத்திக் கொள்ளாமல் சென்றாள்.
வீட்டு வாசலைத் தாண்டும் முன்பே.. அது வரை இல்லாத பயம் வேகமாய் எட்டிப் பார்த்தது. ‘கடவுளே! எல்லாமே நல்லபடியா இருக்கணும். எங்க அப்பாவுக்கு எதுவும் நடந்து இருக்கக் கூடாது’ என கடவுளை வேண்டிய படியே பஸ் ஏற ஆயத்தமானாள்.
“ஏன்க்கா அம்மாவை வீட்டுல இருக்கச் சொன்ன? அம்மாவையும் கூட்டிட்டு வந்து இருக்கலாம்ல?”
ஆயிரம் வார்த்தைகள்இருந்தாலும், அவரவருக்கு இக்கட்டான சூழ்நிலை வரும் போது வார்த்தைள் மட்டும் அல்ல வாயசைவும் தடைபடுமே. அப்படித்தான் நிவேதாவுக்கு ஆனது. வலியோடு ஒரு வழியாக, மனதில் நினைத்ததை எப்படி தம்பியிடம் சொல்வது என கண நேரம் யோசித்து, “இல்லப்பா.. அம்மா பெரியவுங்க. அங்க ஆஸ்ப்பத்திரியில நிறைய நோயாளிகள் இருப்பாங்க. நாம போறது வேற அவசர சிகிச்சை பிரிவுப்பா. அதனாலதான்” என்றாள். அவனுக்குப் புரிந்ததோ இல்லையோ, அக்காவின் பேச்சில் இருந்த பதட்டத்தையும், தடுமாற்றத்தையும் கண்டு எதுவும் பேசாமல் அமைதியாக பின்தொடர்ந்தான்.
கோட்டைச் சுவர்களைப் போல் ஆஸ்பத்திரியின் வெளிச் சுவர்கள் இருந்தன. ‘பல முறை இதே வழியில், இதே மருத்துவமனையைக் கடந்து சென்றிருந்தாலும், இன்று மட்டும் ஏன் என் மனம் இவ்வளவு கனக்கிறது. என்னைப் போல் எத்தனை மனிதர்கள் படபடப்போடு உள்ளே இருக்கிறார்களோ?’ என்ற எண்ணம் வேறு ஒரு பக்கம். எங்கே சென்று யாரைப் பார்ப்பது? எந்த நுழைவாயில் வழியாகச் செல்வது?’ என்பது கூட அவளுக்குத் தெரியாது.முன்னர் ஓர் முறை அப்பாவிற்கு ஒரு ஆபரேஷன் செய்து, 5 நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருந்த பொழுது கூட அப்பா, எங்களை இங்கே கூட்டி வர அனுமதிக்க வில்லை. இங்கே வந்து மற்ற நோயாளிகளைப் பார்த்து எதுவும் பயந்து விடுவோம்ன்னு சொன்னாராம். அம்மா சொன்னது எல்லாம் மனதில் ஒரு புறம் ஓடிக்கொண்டு இருக்க.. அவசர சிகிச்சை பிரிவை நோக்கி வேகமாக நடந்தாள்.
“இங்கே ராமநாதன் என்பவர்.. பஸ்ல இருந்து கீழ விழுந்துட்டார்ன்னு சேர்த்து இருந்தாங்களாமே.தெரியுமா?” என கேட்க.. நர்ஸ் டாக்டர் எல்லோரும் அடுத்தடுத்த அவசர சிகிச்சையில், இவளின் தவிப்பு புரியாமல் அவரவர் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். அதற்குள்ளாகவே இவளுக்கும் தம்பிக்கும் லேசாக பயம் தொற்றிக் கொண்டது. தலையில், கை காலில் ரத்த காயத்துடன், இரு நோயாளிகளைப் பார்த்த மிரட்சியில் மீண்டும் உள்ளே சென்று டாக்டரைப் பார்த்தாள் நிவேதா.
“சார். என்னோட அப்பா ராமநாதன் அவரு பேரு. பஸ்ல இருந்து விழுந்து அதே டிரைவர்,கண்டக்டர் வந்து அட்மிட் பண்ணாங்கல்ல சார்? அவரோட பொண்ணு தான் நான்.”
“ஓ. அந்தக் கேசா? அது Unnamed ( பெயர் சூட்டபடாத) கேசு. அது அந்தப் பக்கம் ஸ்ட்ரெட்ச்சர்ல இருந்துச்சு பாரும்மா. வெளிய வராண்டால தான் இருந்துச்சு பாரும்மா.”
வெளியில் வந்து அங்கிருந்த ஒருவரிடம் கேட்டால், “இந்த இடத்துல இருந்த ஸ்ட்ரெட்ச்சர்ரா? இப்போ தான் பாப்பா.. மார்ச்சுவரிக்கு எடுத்துட்டுப் போனாங்க. அங்கே போயிப் பாரும்மா.”
தம்பியை இறுகப் பற்றிக் கொண்டு, ‘கண்டிப்பாக என் அப்பா அங்க போயி இருக்க மாட்டாங்க’ என நினைக்கும் போதே பெரியவர் ஒருவர், “நீ தேடுறவருக்கு ஒரு 50 வயது இருக்குமா பாப்பா?” எனக் கேட்டார்.
“ஆமாங்க அய்யா.”
“அவரை மார்ச்சுவரிக்குத் தான்ம்மா எடுத்துட்டுப் போனாங்க. அங்கே போயிப் பாரும்மா. ஏன்ம்மா வீட்டுல யாரும் பெரியவங்க இல்லையா? அங்கே எல்லாம் நீயா போகாதேம்மா. அதுவும் இந்த சின்ன பையனைக் கூட்டிக்கிட்டு” என்றார். மேலும் மேலும் பயம் தொற்றிக் கொண்டது இருவருக்கும்.
உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியே வேகமாக நடந்தாள். மெயின் ரோட்டுக்கு ஒரு வழியாக வந்ததும், ஏனோ அவள் மனம் சிறு அமைதி கொண்டது. ஏதோ பெரிய ஆபத்தில் இருந்து மீண்டு வந்தது போல. ஆனாலும் அவளுடைய உள்மனது ஒரு தெளிந்த நிலைக்கு வரவில்லை. அந்த நேரத்தில் அவளுக்கு இரண்டு ஃபோன் நம்பர் ஞாபகம் வந்தது. ஒண்ணு அவளது அப்பாவின் முதலாளி வீட்டு போன் நம்பர். அவரிடம் நடந்ததைச் சொல்லி விளக்க, “நீ போயிப் பார்த்தீயாம்மா” எனக் கேட்டார்.
“இல்லைங்க அவங்க சொன்னாங்க.”
“நீ அது எல்லாம் ஒண்ணும் மனசைப் போட்டுக் குழப்பிக்காதே. வீட்டுக்குப் போய்ப் படுத்துத் தூங்கும்மா. உங்க அப்பா வந்துடுவார்” என தைரியம் அஒன்னார். ஆனால் நிவேதா மனம் ஆசுவாசம் கொள்ளாமல் அடங்க மறுத்தது.
அடுத்து இவர்களது குடும்ப டாக்டருக்கு அழைத்தாள். அவர் முன்னாள் சீஃப் டாக்டராக இதே மருத்துவமனையில் இருந்தவர் தானே என ஞாபகம் வர, அவருக்கும் அழைத்துப் பேசினாள். அவரும், “இப்போ எதுவும் செய்ய முடியாதும்மா. காலை வரை பார்ப்போம். அப்பா வந்துடுவாரு.. காலைல பார்க்கலாம்” எனச் சொல்லி அழைப்பைத் துண்டித்து விட்டார்.
ஒருவழியாகத் துணிந்து என்ன நடந்தாலும் பரவாயில்லை என நிவேதா ஒரு முடிவுக்கு வந்தாள். ‘அம்மா வேற வீட்டுல தனியா இருக்காங்க.. அவங்களுக்கு என்ன பதில் சொல்லுவது? நேரம் ஆக ஆக இன்னொரு பயம் அம்மா எங்கே கிளம்பி வந்துடுவாங்களோன்னு!! இருந்தாலும் அவங்களா வரமாட்டங்கன்னு ஒரு எண்ணத்தில்தான் நான் தம்பியைக்கூட அழைத்துக் கொண்டு வந்தேன்’ என்ற ஒரு தைரியம் அவளை முன்னோக்கி நடத்திச் சென்றது. இருந்தாலும், ‘மார்ர்சுவரிக்குப் போகணுமே! எப்படி?’ என்ற தயக்கத்தில் மெதுவாகத் தயங்கித் தயங்கி அங்கே மருத்துவமனையில் இருப்பவர்களிடம் வழி கேட்டு, மார்ர்சுவரி நோக்கி நடக்க முனைந்தாள்.
மார்ச்சுவரி நெருங்க நெருங்க ஒரு வித துர்நாற்றம் வீசியது. இருவருக்குமே குடலைப் புரட்ட ஆரம்பித்து விட்டது. இதுவரை நுகராத ஒரு துர்நாற்றம். பிணவறையை நெருங்கிவிட்டதை நிவேதா உணர்ந்தாள்.
அங்கேயும் பெரிய சுவர்கள். பூட்டிய இரும்புக் கதவுகள். “அண்ணே அண்ணே.. அய்யா அய்யா.. யாராச்சும் இருக்கீங்களா?” என பெருத்தக் குரலோடு கூக்குரலிட்டாள். உள்ளே இருந்து ஒருவர், “என்னமா இந்த நேரத்துல? யாருமா நீ? என்ன வேணும்?” எனக் கேட்டார்.
“இல்லை எங்கப்பா உள்ள இருக்காருன்னு பார்க்கணும். பஸ்ல ஏறும் போது விழுந்துட்டார்ன்னு சொல்லி அட்மிட் பண்ணாங்களாம். அவரை மார்ச்சுவரிக்கு எடுத்துட்டு வந்துட்டாங்கன்னு சொன்னாங்க. பார்க்கணும். தயவு செய்து கதவைத் திறந்து விடுங்க ப்ளீஸ்.. ப்ளீஸ்..”
“இல்லம்மா. இப்போ எல்லாம் திறக்க முடியாது. எல்லாம் மூடியாச்சு. டைம் முடிஞ்சு போச்சு. நாளைக்கு காலையிலதான்ம்மா. கிளம்பு.. கிளம்பு.”
“இல்லய்யா. எங்கம்மா அங்க தனியா இருக்காங்க. நானும் தம்பியும் அப்பாவ தேடித் தான் வந்து இருக்கோம். கொஞ்சம் தயவு பண்ணுங்க. வீட்டுக்குப் போனா நிம்மதியே இருக்காது.அவரு இல்லைன்னு பார்த்துட்டுப் போயிட்டா கொஞ்சம் நிம்மதியா இருக்கும்ங்க. கொஞ்சம் உதவி பண்ணுங்க அய்யா.”
“சரிம்மா. நீ மட்டும் வா. அந்த சின்ன பையன வெளிய நிக்க சொல்லு” என அவரு மெதுவாக உள்ளே அழைத்துக் கொண்டு போனார். உள்ளே செல்லச் செல்ல முன்பு இருந்ததை விட துர்நாற்றம் சொல்ல முடியாத அளவுக்கு. பெரியவரை நெருங்கி செல்லும் போதுதான் நிவேதாக்குப் புரிந்தது.அவர் சாராயம் குடித்து இருப்பது.
இது வரை இல்லாத ஒரு பயம் அவளுக்குள். அதை பயம் என்று எப்படிச் சொல்வது?
அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இருள் மங்கிய இடத்தில், ஒரே ஒரு சோடியம் வேப்பர் லாம்ப் எரிந்து கொண்டிருந்தது பிணவறையின் வெளிவளாகத்தில். அப்படியும் கடந்து பிணவறைக்குள் சென்று விட்டால், மூக்கை பிடித்தும் துர்நாற்றத்தை அவளால் தாங்க முடியவில்லை. இந்த துர்நாற்றத்தை மறக்க, மரத்துபோக சாராயம்தான் அவருக்குத் துணை செய்கிறது எனப் புரிந்து கொண்டாள்..
அவள் அத்தனை மனக் கஷ்டத்தோடு வந்தது,காணக் கூடாத காட்சியைக் காணவே என்பது அவள் அறியாதது. ஆம், அவளது தந்தை பிணங்களோடு பிணமாக ஓர் ஓரத்தில் படுத்து இருந்தார். அவளது பார்வையில் அவர் உறங்கிக் கொண்டு இருப்பதாகவே தோற்றமளித்தது.உடலில் எந்தவித கீறலும் இல்லை. தலையில் மட்டும் லேசாக ரத்தம் வடிந்திருந்தது.
அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அந்த ஒரு கணம்,அவளின் வாழ்க்கையில் விவரிக்க முடியாத ஒரு சோகம். அவளின் கண்களில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வரவில்லை. கண்ணுக்கு வெளியில் வந்தால்தான் கண்ணீரா என்ன? முதலில் எப்படி அவ்வளவு தூரம் அத்தனை பிணங்களைத் தாண்டி வந்தால் என்பது, அவள் திரும்பி வருகையில் தான் அவளுக்கே தெரிந்தது. வரும் வழியில் அப்பாவுக்கு அருகில் இருந்த ரத்த வெள்ளத்தில் மிதந்த சில பிணங்களைப் பார்த்து அவளால் எதுவுமே செய்ய இயலாமல், வாயில் வரும் வாந்தியையும் கட்டுபடுத்தி ஒரு வழியாக தம்பி இருக்கும் இடம் சென்றடைந்தாள்.
அவளுக்குள் ஒரே வினாடியில் எண்ணற்ற கேள்விகள். ‘தம்பியிடம் என்னச் சொல்வத? நம்ம அப்பா நம்மள விட்டுட்டு போயிட்டார்ன்னு சொல்லுறதா? அப்பாவை ஆட்டோல கூட்டிகிட்டு வர்றேன்னு அம்மாகிட்ட சொன்னேனே!! இப்போ அவரு எங்கன்னு கேட்டா என்ன பதில் சொல்வேன்?’ என இப்படி ஆயிரம் ஆயிரம் கேள்விகளோடு நடைப்பிணமாக, ‘நடந்தவை எல்லாம் கனவாக இருக்க கூடாதா? என்னை யாரேனும் அடித்து எழுப்பி விடக் கூடாதா? என் அப்பா,எனக்கு ஒண்ணும் இல்லைடா கண்ணுன்னு எழுந்து ஓடி வந்து, என் தோளைப் பற்றிக் கொள்ளக் கூடாதா? என நிவேதா கலங்கினாள்.
அவளின் கால்கள் சக்தியற்று, வாழ்க்கையின் இறுதிக்கே வந்துவிட்டது போல் ஓர் உணர்வு. இவ்வளவுதானா வாழ்க்கை எனும் கேள்விகளோடு வீடு நோக்கி தம்பியை அணைத்தவாறு சென்றாள்.
* எனக்கு என் பெயரை பதிவிடுவதில் உடன்பாடில்லை என்றாலும், இந்தக் கதையில் மட்டும் என் பெயரை உபயோகிக்க ஏனோ மனம் ஏங்கியது.
– நிவேதா
நன்றி : இது தமிழ் இணையம்