Wednesday, April 14, 2021

இதையும் படிங்க

நீள் இரவு | சிறுகதை | கவிஜி

இருப்பதிலேயே மோசமான இரவு பிணம் காக்கும் இரவுதான். எல்லாம் மியூட் ஆகி... காலத்தைக் கடப்பது சகிக்க இயலாத கசப்பின்...

அம்மாவின் கனவு | பா.உதயன் கவிதை

ஆயிரம்கவி எழுதிஅடுத்தடுத்துபேப்பரில் போட்டேன் காலை மாலைஎன்று சொல்லிபாவம் நானும்பார்த்திருந்தேன் காலை வந்தபேப்பரிலும்மாலை வந்தபேப்பரிலும்காணவில்லைஎன் கவிதனையே

கலாச்சார அதிகாரசபையின் நினைவரங்கம்

மாளிகைக்காடு நிருபர்  சாய்ந்தமருது பிரதேச செயலக கலாச்சார பிரிவு மற்றும்  கலாச்சார அதிகாரசபையின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேசத்தில் இருந்து...

கல்முனை பூபால் ‘கவிமாமணி நீலாபாலன்’ காலமானார்!

கவிஞர் கல்முனை பூபால் என்றகவிமாமணி நீலாபாலன்இன்று காலை காலமானார்… - ஈழக்கவி தமிழ்க் கவிதை...

முட்டாளாட்சி | சி்.கிரிஷாந்த்ராஜ் கவிதை

நீதி தேவதைநிர்வாணமாய் நிற்கிறாள்!ஆடை களைந்ததுஅரசாங்கம்தான்!கைகளில் தராசைஏந்திக்கொள்வதா?மார்பையும் பிறப்புறுப்பையும்மறைத்துக்கொள்வதா? நடுத்தெருவில்சாமானியனைஏறி மிதிக்கும் சட்டம்,ஆளுங்கட்சியின்மடியில் சூப்பிகுடித்துப் படுத்திருக்கிறது!

ஆசிரியர்

தந்தை | சிறுகதை | பா.சந்திரசேகர்

தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி – 2015 சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு ரூ.10,000 பெறும் சிறுகதை

“”ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. அம்மாடி” என்று கையை உதறிக் கொண்டார் ரத்தினம்பிள்ளை. கொஞ்சம் அசட்டை காரணமாகவோ, வயதாகிவிட்ட தடுமாற்றம் காரணமாகவோ கொதித்த ரசத்தை இறக்கி வைக்கப் போனவர் கையை நன்றாகச் சுட்டுக் கொண்டுவிட்டார். எரிச்சல் தாங்காமல் அவர் கண்களில் கண்ணீர் சுரந்துவிட்டது. இயலாமையினாலும் கை எரிச்சல் தந்த வேதனையிலுமாகத் தளர்ந்துபோய் “”அம்மா, அம்மா” என்று வாய்விட்டு அரற்றிவிட்டார்.

“”என்ன பிள்ளைவாள்? இத்தனை வயசுக்கப்புறம் அம்மா நினைப்பு” என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்த நாயுடு, பிள்ளை இருந்த நிலைமையைக் கண்டதும் விஷயத்தை ஊகித்து உணர்ந்தவராக, “”அடடா, என்ன பிள்ளைவாள் கையைச்சுட்டுகிட்டீங்களா? கொஞ்சம் தேங்காயெண்ணெயைத் தடவிக்கிட்டு வந்து இப்படி உட்காருங்க, ஒண்ணும் அவசரமில்லே” என்றார் ஆதரவாக,

“”பரவாயில்லே நாயுடு, இதெல்லாம் என்ன சூடு? கொஞ்ச நேரம் ஆனா சரியாயிடும். இதைவிடப்பெரிய கடுமையான சூட்டையெல்லாம் மனசிலே வாங்கிகிட்டு மரத்துப்போனவனாச்சே நான்” என்று கூறிவிட்டு நாயுடுவை அங்கிருந்த நாற்காலியில் உட்காரச் சொல்லிவிட்டு தட்டை எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தார் ரத்தினம் பிள்ளை.

நாயுடு தான் கொண்டு வந்திருந்த மதிய உணவுப்பொட்டலத்தை ஒரு புறமாக வைத்துவிட்டு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு தளர்ந்த உள்ளத்தோடும் உடலோடும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பிள்ளையைப் பார்த்தார். அவரது நெஞ்சு பச்சாதாபத்தால் இளகியது. “பாவம், பிள்ளை உடம்பைவிட

மனசு ரொம்பத் தளர்ந்து விட்டார். இந்த வயதில் இவரைப் போன்ற மனிதருக்கு இப்படி ஒரு வாழ்க்கையா? இதுதான் தலைவிதி என்பது போலிருக்கிறது. எல்லாம் இருந்தும் அனுபவிக்கக் கொடுப்பினை இல்லை’ என்று நாயுடுவின் நெஞ்சம் எண்ணமிட்டது.

ரத்தினம் பிள்ளை சாப்பிட்டு முடித்தவுடன் உடைமாற்றி மதிய உணவிற்காக சிறிது தயிர் சாதத்தைப் பிசைந்து ஒரு டப்பாவில் போட்டுக் கொண்டு புறப்பட்டார். இருவரும் சற்றுத் தூரத்தில் இருந்த பஸ் ஸ்டாப்பை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

இருவருக்கும் டவுனில் இருந்த ஒரு ஜவுளிக்கடையில் வேலை. நாயுடு விற்பனைப் பிரிவிலும், பிள்ளை கணக்குப் பிரிவிலும் பணியாற்றி வந்தனர். காலையில் இருவரும் சேர்ந்தே போய், மதிய உணவு இடைவேளையின் போது கடை மாடியிலேயே சாப்பிட்டுவிட்டு சற்று ஓய்வெடுத்துக் கொண்டு, பிறகு மீண்டும் வேலை பார்த்துவிட்டு இரவு ஒன்பது மணிக்குமேல் வீட்டிற்குத் திரும்புவார்கள். பிள்ளை தங்கியிருந்த அறைக்குப் பக்கத்துத் தெருவிலேயே நாயுடுவின் வீடு இருந்ததனால் இருவரும் சேர்ந்தே வேலைக்குப் போய்விட்டு ஒருவருக்கொருவர் துணையாக ஒன்றாகவே வீடு திரும்புவார்கள்.

நாயுடுவும் பிள்ளை வயதுடையவர்தான், என்றாலும்கூட மனதைத் தளரவிடாமல் திடமாக வைத்திருந்த காரணத்தால் அவரது உடலிலும் தளர்ச்சி அவ்வளவாகத் தெரியாமல் திடமாக இருந்தது. அவர் அரசாங்க உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். உத்தியோகத்திலிருந்தபோதே தன்னுடைய பெண்ணை நல்ல இடமாகப் பார்த்து கல்யாணம் செய்து வைத்துவிட்டார். அவள் குழந்தை குட்டிகளுடன் சுகமாக வாழ்ந்து வருகிறாள். அவருடைய மகன் விஷயத்தில் தான் அவருக்குத் தீராத மனக்குறை இருந்து வந்தது.

“”நான் உத்தியோகம் பார்த்துகிட்டிருந்தப்போ நான் நினைச்சிருந்தா என் செüகரியங்களையும் தேவைகளையும் ஓரளவு குறைச்சுகிட்டு பையனை மேலே படிக்கவச்சு நல்ல வேலைக்கு அனுப்பியிருக்கலாம், ஆனா எனக்கு அப்ப அது தோணலை. அவன் எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சதும் ஒரு நண்பர் சொன்னாரேன்னு இந்த இஞ்சினியரிங் கம்பெனிலே வேலைக்கு சேர்த்து விட்டேன். அப்படியில்லாம மேலே படிக்கவச்சிருந்தா அவனும் படிச்சுட்டு பெரிய வேலைக்குப் போயி நல்லா சம்பளம் வாங்கிகிட்டு இன்னிக்கு வசதியா இருந்திருப்பான். ஆனா, அப்ப எனக்கு அவன் வேலைக்குப் போயி கொண்டாந்து கொடுத்த சின்னத்தொகைதான் பெரிசாப்பட்டது. அவனோட எதிர்காலம், அவன் வாழ்க்கை, அவன் குடும்பம் எதுவுமே என் சிந்தனையிலே தட்டுப்படலை. அதோட விளைவு இப்ப அவன் சிரமப்படறான். இத்தனைக்கும் தன்னை மேலே படிக்க வைக்கலையே தான் பெரிய வேலைக்குப் போக முடியலியேன்னு அவனுக்கு என் மேலே குறையோ, கோபமோ கிடையாது. எனக்கு எந்தக்குறையும் வைக்காம தாங்கத்தான் செய்யறான். இந்த வயசான காலத்திலே வேலைக்கெல்லாம் போக வேண்டாம், பேசாம ஓய்வெடுத்துகிட்டு வீட்டிலேயே இருங்கன்னுதான் சண்டை போடறான். ஆனா எனக்குத்தான் மனசுலே ஒரு உறுத்தல். அவன் சிரமப்படறதைப் பார்த்துத் தாங்கலை. அதனாலே முடிஞ்ச வரைக்கும் நம்மளாலே ஆனதைச் செய்யலாமுன்னு இந்த வேலைக்கு வந்து கிட்டிருக்கேன். ஏதோ என் சம்பளமும் குடும்பத்துக்கு ஓரளவு உதவியாத்தான் இருக்குது”. மதிய நேரங்களில் சாப்பிட்டு முடித்த பிறகு ஓய்வாக கடை மாடியில் படுத்திருக்கும்போது இருவரும் மனம் விட்டுப் பேசும் சமயங்களில் அடிக்கடி நாயுடு இப்படிச் சொல்வதுண்டு.

ஆனால் பிள்ளையின் கதை வேறு மாதிரியானது.

இளம் வயதிலேயே தந்தையை இழந்துவிட்ட அவர் வாழ்க்கையின் ஆரம்பகாலம் முதலே பலவகைகளிலும் சிரமப்பட்டே வளர்ந்தார். வறுமையிலும் சிறுமையிலுமே அவரது இளம்பருவம் கழிந்தது. இல்லாமை காரணமாக அவரது உறவினர்களும் ஏனையோர்களும் அவரிடம் காட்டிய உதாசீனத்தையும், அவமதிப்புகளையும் சகித்துக் கொண்டே அவர் வாழ்க்கை தொடர்ந்தது. அவராலும் என்ன முயன்றும் தனக்கென்று பெரிதாக எதையும் சாதித்துக் கொள்ள முடியவில்லை. கிடைத்த தனியார் நிறுவன குமாஸ்தா வேலையைக் கொண்டே திருப்தியுற வேண்டியிருந்தது. இளமையில் அனுபவித்த வேதனைகளும், அவமதிப்புகளும், ஏக்கங்களும் அவர் மனதில் ஆறாத ரணமாகத் தங்கிவிட்டன.

எனவே, அவர் தன்னுடைய ஒரே மகனை வாழ்க்கையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயர்த்திவிட ஆசைப்பட்டார். அவன் மீது தன் உயிரையே வைத்திருந்த அவர் இளம் வயது முதலே அவனது தேவைகளையும் விருப்பங்களையும் உடனுக்குடன் நிறைவேற்றி விடுவார். அவன் ஆசைப்பட்டது எதுவாக இருந்தாலும் அது தன் சக்திக்கு மீறியது என்றாலும் கூட அதனை நிறைவேற்றித் தருவதற்கு அவர் சற்றும் தயக்கம் காட்டியதில்லை. அவனை வாழ்க்கையில் எப்படியாவது ஓர் உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்தே தீருவது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதற்கு அவனுக்கு உயர்ந்த கல்வியளித்து உயரச் செய்வதுதான் ஒரே வழி என்று முடிவு செய்து கொண்டு அதற்காக வைராக்கியமாகச் செயல்பட்டார்.

தன்னுடைய ஊரிலிருந்து ஐம்பது மைலுக்கு அப்பால் ஒரு டவுனில் கல்வியில் தரம் உயர்ந்த ஒரு பள்ளியில், அதிகமான பணச்செலவைப் பொருட்படுத்தாமல் ஹாஸ்டலில் சேர்த்துப் படிக்க வைத்தார். வாரம் தவறாமல் செலவையும் சிரமத்தையும் சற்றும் லட்சியம் செய்யாமல் அவனது ஹாஸ்டலுக்குச் சென்று அவனைப் பார்த்தும் அவனது தேவைகளைப் பூர்த்தி செய்தும் திரும்புவார். தன்னுடைய, குடும்பத்தினுடைய அத்தியாவசியமான தேவைகளைக்கூட தியாகம் செய்துவிட்டு பிள்ளையின் படிப்பிற்காகச் செலவிட்டார். நலிந்து கொண்டிருக்கும் உடல் நிலையைப் பற்றிக் கவலைப்படாமல், ஆபீஸ் முடிந்த பிறகு மாலைநேரத்தில் ஒரு வக்கீலிடம் பார்ட் டைம் டைப்பிஸ்டாகப் பணியாற்றியும் பிள்ளையின் படிப்பிற்காகவும் துணிமணிகளுக்காகவும் செலவிட்டார். தனக்கு நல்ல சாப்பாடு வேண்டுமென்ற சிந்தனையோ, நல்ல உடைகள் வேண்டுமே என்ற நினைவோகூட இல்லாமல் மிகவும் எளிமையாகவும் சிக்கனமாகவும் வாழ்ந்து பிள்ளையின் தேவைகளை ஈடுசெய்தார். பணம் போதாதபோதெல்லாம் அலுவலகத்தில் என்னென்ன லோன் போட முடியுமோ, அவ்வளவும் போட்டு வாங்கிச் செலவிட்டார்.

உயர்நிலைப்படிப்பும், பிறகு பட்டப்படிப்பும் முடிந்தவுடன் யார் யாரையோ சிபாரிசு பிடித்து எப்படியெல்லாமோ செலவிட்டு தன் மகனை எம்.பி.ஏ., யில் சேர்த்துவிட்டார்.

அவர் மகன் படித்து முடித்துவிட்டு வெளியே வந்த சில மாதங்களுக்குள்ளாகவே அவனுக்கு நல்லதோர் உத்தியோகம் கிடைத்தது. அவன் உத்தியோகத்தில் சேர்வதற்கும், அவர் உத்தியோகத்திலிருந்து ஓய்வுபெறுவதற்கும் சரியாக இருந்தது. அவர் பணிநிறைவின்போது அவருக்குக் கிடைத்த பி.எஃப் போன்ற தொகைகள் மிகவும் சொற்பமாகவே இருந்தன.

ஒரே பிள்ளை, நல்ல உத்தியோகம், பார்க்கவும் நன்றாக இருந்தான், பெண்ணைப் பெற்றவர்கள், “நான்’, “நீ’ என்று போட்டி போட்டுக் கொண்டு வந்தனர். நன்கு யோசித்து நிதானித்து ஆராய்ந்து ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து மகனுக்குத் திருமணத்தையும் நடத்தி வைத்தார்.

திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே அவரது மனைவி தன்னுடைய கடமை முடிந்துவிட்டது என்பது போல கண்ணை மூடிவிட்டாள். ஊரிலே வேறு சொத்து சுகமோ, நெருங்கிய சுற்றமோ இல்லாத நிலையில் அவர் அங்கிருக்க வேண்டிய அவசியமோ காரணமோ இல்லாமற்போகவே அவரும் தன் மகனுடன் அவன் உத்தியோகம் பார்த்த ஊருக்கே சென்று அவனுடன் வசிக்கத் தொடங்கினார்.

நாளாவட்டத்தில் அவரது மருமகளுக்கு அவரது இருப்பு அவசியமற்றதாகவும் சுமையாகவுமே பட்டது. அவர் தன் மகன் மீது காட்டிய பரிவும் பாசமும் அவளுக்குத் தன் புருஷன் மீது அவர் சுமத்தும் அநாவசிய சுமையாகவும் அர்த்தமற்ற பிதற்றலாகவுமே தோன்றியது. குடும்பத்தில் பெரியவர் என்ற முறையில் அவர் சொல்லிய அறிவுரைகளும், ஆலோசனைகளும் தங்கள் மீது அவர் செலுத்த முயலும் ஆதிக்கம் என்றே அவளுக்குப்பட்டது. எனவே சிறுகச் சிறுக பிரச்னைகள் தோன்றத் தொடங்கின. நாளாவட்டத்தில் அவரது பேச்சுக்களுக்குப் புறக்கணிப்பும், அவர் சொல்கிறார் என்பதற்காகவே அதற்கு நேர்மாறாகவும் செயல்படத் தொடங்கினாள்.

எந்த சம்பவத்தையும், புறக்கணிப்பையும், சிறு சிறு அவமதிப்புகளையும் அவர் தன் மகனது மனம் வருந்துமேயென்று அவனது கவனத்திற்குக் கொண்டு செல்வதே கிடையாது. ஆனாலும் அவரது மருமகள் அவரைப்பற்றி சதா ஏதாவது குறை கூறி வந்தாள். இதனால் மகனது மனதிலும் தன் தந்தை தேவையில்லாமல் அநாவசியமாக குடும்ப விஷயங்களில் தலையிட்டுக் குழப்புவதாகவே எண்ணம் தோன்றி வளர்ந்தது. படிப்படியாக அவன் தன் தந்தையிடம் பேசுவது குறைந்து கொண்டே வந்து பிறகு நின்றே போய்விட்டது.

கல்யாணமான புதிதில் எங்காவது வெளியே போவதென்றால் முன்னதாகவே விஷயத்தை அவரிடம் கூறிவிட்டு, பிறகு செல்வது என்றிருந்த நிலை மாறி, புறப்பட்டு வெளியே போகும்போது சொல்வது என்று ஆகி, நாளாவட்டத்தில் எங்கே போகிறோம் என்று கூடச் சொல்லாமல் செல்லத் தொடங்கினர். சமயங்களில் அவர்கள் அவர் ஒருவர் இருப்பதாகவே லட்சியம் செய்யாமல் நடந்து கொள்ளத் தொடங்கினர். சொந்த வீட்டிலேயே, உரிமையுள்ள வீட்டிலேயே அவர் தன்னை அந்நியமாக உணரத் தலைப்பட்டார். அப்படி உணர்த்தப்பட்டார்.

ரத்தினம் பிள்ளைக்கு தன்னுடைய மகனது இந்தப் பாரா முகம் பெருத்த அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருந்து வந்தது. என்றாலும் அவரால் தன் பிள்ளையைப் பார்க்காமல் அவனை விட்டுப் பிரிந்து இருக்க முடியாதே என்ற ஆதங்கத்தில் அத்தனையையும் பொறுத்துக் கொண்டு இருந்து வந்தார்.

ஒரு நாள் அவருக்குக் கடுமையான தலைவலி. தாங்கமுடியாத வேதனையோடு முனகிக் கொண்டு படுத்திருந்தார். அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்த அவரது மகன் அவர் படுத்திருப்பதையோ, அவர் முனகலையோ சற்றும் லட்சியம் செய்யவேயில்லை. உள்ளே சென்று தன் மனைவியிடம், “”என்ன அவருக்கு?” என்று விசாரித்தான்.

“”என்னமோ தலைவலியாம்” என்றாள் அவள் அலட்சியமாக.

“”ஏதாவது அமிர்தாஞ்சனம் கொடுப்பதுதானே?”

“”எல்லாம் கொடுத்தாகிவிட்டது”

தன்னுடைய மகன் அருகில் வந்து, “”என்ன செய்கிறது?” என்று பரிவோடு ஒரு வார்த்தை கேட்டிருந்தால் இந்தத் தலைவலி என்ன? வேறு எந்த வலியாக இருந்தாலும் பறந்து போயிருக்குமே என்று கண்களில் நீர்மல்க எண்ணமிட்டார் பிள்ளை.

ஒரு கட்டத்தில் அவருடைய கண்ணைப் பரிசோதனை செய்து கண்ணாடியை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவர் மிகவும் தயக்கத்துடன் தன் மகனை அணுகி விஷயத்தைத் தெரிவித்தார். அவன் ஒன்றுமே பதில் சொல்லவில்லை.

அவர் சொல்லிவிட்டு அந்தண்டை சென்றதும் மருமகள் விரைந்து வந்து, “”என்ன விஷயம்?” என்று தன் கணவனிடம் கேட்டாள். அவன் விவரம் கூறினான்.

“”இப்போ கண்ணாடி மாத்தாமே என்ன கொறஞ்சு போச்சு. எந்த ஆபிசில போய் இப்ப குப்ப கொட்டப் போறார். இந்த மாசம் தலைக்கு மேலே செலவு இருக்கு. எல்லாம் ரெண்டு மாசம் போனதும் பார்த்துக்கலாமுன்னு சொல்லுங்க” என்றாள் உரத்த குரலில், அவருக்குக் கேட்க வேண்டும் என்பதற்காகவே. அவர் அதைப்பற்றி அதற்குப் பிறகு வாயையே திறக்கவில்லை. அதைவிட வேதனையான விஷயம் என்னவென்றால், இது நடந்து நாலு மாதம் ஆகியும்கூட அவரது மகன் அதைப்பற்றிக் கேட்கவோ கவலைப்படவோ இல்லை என்பதுதான். இது அவரது மனதில் ஆழமான புண்ணை ஏற்படுத்திவிட்டது.

இவ்வளவுக்கு இடையிலும் அவருக்கு இருந்த பெரிய ஆறுதல் பேரன் ரமணன்தான். ஒரு வயது ஆன அவன் தன் தாத்தாவிடம் ஒட்டிக் கொண்டான். பகல் நேரங்களில் அவனுடன் விளையாடுவதிலும் மாலை நேரங்களில் அவனைத் தூக்கிக்கொண்டு வெளியே உலாவச் செல்வதிலும் பெரிய நிறைவைக் கண்டார் அவர். கொஞ்ச காலத்தில் அதனையும் அவரது மருமகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஏதோதோ காரணங்களைக்கூறி குழந்தை அவரிடம் செல்வதைத் தவிர்க்கத் தொடங்கினாள்.

“”வெளியே அடிக்கும் காற்றிலிருக்கும் தூசி குழந்தையின் உடம்புக்கு ஆகாது” என்று கூறி அவர் குழந்தையை வெளியே உலாவ அழைத்துச் செல்வதைத் தடுத்துவிட்டாள்.

ஒரு நாள் குழந்தை ரமணன் சாக்லேட் வேண்டுமென்று கேட்கவே அவர் உடனே கடைக்குச் சென்று சாக்லேட் வாங்கி வந்து குழந்தையிடம் கொடுத்தார். அவன் அதை வாயில் போடப் போகும் போது மருமகள் ஓடிவந்து அதைப்பிடிங்கித் தூர எறிந்துவிட்டு, “”இப்படிக் கண்ட குப்பையையும் வாங்கிக் குடுத்தால் நாளைக்கு உடம்புக்கு ஏதாவது வந்துவிட்டால் யார் அவஸ்தைப்படுவது? பேசாம ஒங்க வேலையைப் பார்த்துகிட்டுப் போக வேண்டியதுதானே?” என்று அவரிடம் சிடுசிடுத்தாள்.

பிள்ளையின் நெஞ்சு நொறுங்கிவிட்டது. அவரால் இதனைத் தாங்கவே முடியவில்லை. சாக்லேட்டைப் பிடுங்கி எறிந்தபோது வாய் வரை கொண்டு சென்ற சாக்லேட் தனக்குக் கிடைக்காமல் போன அந்த நிமிஷத்தில் குழந்தை ரமணனின் முகத்தில் தோன்றிய அதிர்ச்சியும் ஏமாற்றமும் அவரை உலுக்கிவிட்டது. சாக்லேட் பறிபோன துயரத்தில் குழந்தையின் கண்களில் கசிந்த கண்ணீர் அவர் நெஞ்சைப் பெருந்தீயாகச் சுட்டது. அவரால் தாங்கமுடியாமல் தன் மகன் வந்தவுடன் அவனிடம் நடந்த விஷயத்தைக் கூறி தன் பேரப்பிள்ளைக்கு ஒரு சாக்லேட் வாங்கித் தரக் கூடத் தனக்கு உரிமையில்லையா என்று ஆத்திரத்துடன் கேட்டார்.

பதிலுக்கு அவர் மகன், “”அவ பெத்தவ, அவளுக்குப் பிள்ளையை எப்படி வளர்க்கனுமுன்னு தெரியாதா? உங்களுக்கு ஏன் இந்த அநாவசியமான வேலையெல்லாம். பேசாம போட்டதைச் சாப்பிட்டுட்டு ஒரு மூலையிலே கிடக்க வேண்டியதுதானே?” என்றான் சிடுசிடுப்புடன். அவனை பெற்று வளர்த்து ஆளாக்கி அவன் ஒரு பிள்ளைக்கும் தகப்பனாகும்படி உயர்த்தியவர் அவர்தான் என்பதனை அடியோடு மறந்துவிட்டு.

பிள்ளை பொங்கிவிட்டார்.

“”நீ போடறதை தின்னுகிட்டு மூலையிலே முடங்கிக்கிடக்க நான் நீ வளர்க்கிற நாயில்லே… நான் உன்னைப் பெத்தவன். பெத்தவன்கற பாசமோ பெரியவன்கற மரியாதையோ இல்லாத இடத்திலே இனியும் நான் இருந்தா அது எனக்குக் கேவலம்” என்று கூறிவிட்டு தன்னுடைய ஆஸ்தியான இரண்டொரு உடைகளுடன் அந்த இரவிலேயே வெளியே கிளம்பிவிட்டார்.

அவர் பையும் கையுமாக வெளியேறியபோது கூட, அவர் மகனும் மருமகளும் பார்த்துக் கொண்டு அப்படியே நின்றார்களே தவிர, அவரைப் போக வேண்டாம் என்று கூறவோ தடுக்கவோ இல்லை. “எங்கே போய்விடப் போகிறார், அவருக்கு வேறு போக்கிடம் ஏது? எங்காவது இரண்டுநாள் சுற்றிவிட்டு மீண்டும் இங்குதானே வந்து நிற்க வேண்டும்?’ என்ற எண்ணம் அவர்களுக்கு,

ரத்தினம் பிள்ளையின் நண்பர் ஒருவர் அவருக்கு உதவினார். இந்த ஜவுளிக்கடையில் கணக்குப்பிள்ளை வேலையும் வாங்கிக் கொடுத்து தற்போது அவர் குடியிருக்கும் அறையையும் வாடகைக்குப் பிடித்துக் கொடுத்து உதவினார். ஜவுளிக்கடையில் பிள்ளையின் தேவைகளுக்கு அதிகமாகவே சம்பளம் கொடுத்தனர். மிகவும் மரியாதையுடனும் நடத்தினர். அறையும் ஒரு வீட்டின் மாடியில் வசதியாக நல்ல காற்றோட்டத்துடன் அமைந்திருந்தது. கீழ் வீட்டில் குடியிருந்த வீட்டின் உரிமையாளரும் பிள்ளையைப் பற்றிய விபரங்களை அவர் நண்பர் மூலம் தெரிந்து கொண்டு பிள்ளையிடம் மிகவும் அன்புடனும் பரிவுடனும் நடந்து கொண்டார்.

அவர் வீட்டைவிட்டு வெளியேறி ஒரு வாரத்திற்குப் பிறகு எப்படியோ விசாரித்துக் கொண்டு அவரைத் தேடி வந்த அவரது மகன் வீட்டிற்கு வருமாறு அழைத்தான். அவனது அழைப்பில் தவறு செய்துவிட்டு திருந்திய உணர்வோ, பரிவோ, பாசமோ எதுவுமில்லாமல் ஏதோ கடமைக்குக் கூப்பிடும் உணர்வே இருந்தது.

“” என் காலம் முடியற வரைக்கும் நான் இப்படியே இருந்துடுறேன், நீ போ” என்று உறுதியாகக்கூறி அவனை அனுப்பிவிட்டார் பிள்ளை.

வேலை செய்வதோ, தானே சமைத்துச் சாப்பிடுவதோ பிள்ளைக்குச் சிரமமாக இருக்கவில்லை. ஆனால் இந்த வயதில் தனிமையில் பாசபந்தங்களே அற்று தனிமையாக அநாதை போலக் காலம் கழிப்பதைத்தான் அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இளம் பருவத்தில் தன் மகன் தன் மீது காட்டிய அளப்பரிய பாசத்தை, அவனுடைய ஒட்டுறவை இப்போது நினைவுகூர்ந்து மனம் நெகிழ்வார் அவர்.

“அப்பா, அப்பா’ என்று சதா தன்னிடம் ஒட்டிக் கொண்ட மகனை அலுவலகத்திலிருந்து திரும்பியதும் ஓடிவந்து தாவி அணைத்துக் கொண்ட மகனை, சாப்பிடும்போது வந்து மடியில் அமர்ந்து கொண்டு அவர் தன் கையால் ஊட்டிவிடும் எச்சில் சோற்றுக்குப் பிடிவாதம் பிடித்த மகனை, உயர்நிலைப்பள்ளியில் படித்தபோது கூட இரவில் தன் நெஞ்சிலே தலை வைத்துப் படுத்துக் கொண்ட மகனை, அவரது முகம் ஏதாவது பிரச்னையில் சிறிது வாடியிருந்தாலும், “”என்னப்பா, என்னப்பா” என்று துடித்துப்போன பாசம் நிரம்பிய பழைய மகனை – எண்ணி எண்ணி மருகிக் கண்ணீர் வடித்துக் தூக்கம் இழப்பார் அவர். பேரப்பிள்ளையை, அவனது மழலைப் பேச்சை, தளர்நடையை தன் மீது அவன் காட்டிய ஒட்டுதலை எண்ணி இரவெல்லாம் கண்ணீர் வடிப்பார் அவர். பல இரவுகள் இந்த நினைவுகள் தந்த சித்திரவதையில் நித்திரையின்றியே கழித்தார் அவர். பாசத்திற்கும் பரிவிற்கும் அன்பான ஆதரவான உறவுக்குமாக அவர் மனம் ஏங்கிக்கொண்டே இருந்தது.

பிள்ளையும் நாயுடுவும் பரஸ்பரம் தங்களது மனக்குமுறல்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.

மறுநாள் தீபாவளி.

நாயுடு, “”பிள்ளைவாள், நான் நாளைக்குக் காலையிலேயே வர்றேன். நீங்க என் கூட எங்க வீட்டுக்கு வாங்க. எங்க வீட்டிலேயே எண்ணெய்க் குளியலை வச்சுக்கலாம். பண்டிகையை எங்க வீட்டிலேயே கொண்டாடலாம், சாப்பிட்டுட்டு மத்தியானத்துக்கப்பறம் ஒங்க ரூமுக்கு வரலாம்” என்று வற்புறுத்திக்கூப்பிட்டார்.

பிள்ளை ஒப்புக் கொள்ளவில்லை. நாயுடு, “”பிள்ளை, நாங்கள்லாம் இருக்கறப்போ நீங்க இப்படி அநாதை மாதிரி நல்ல நாளும் அதுவுமா தனியா இருக்கறது எங்களுக்கெல்லாம் எவ்வளவு சங்கடமா இருக்கும் தெரியுமா?” என்று வலியுறுத்தினார்.

“”நாயுடு, என்னை மன்னிச்சிடுங்க, எனக்கு இப்ப உங்களை விட்டா வேற உறவோ, ஒட்டோ கிடையாது. ஆனா நான் வர மறுக்கறதுக்குக் காரணம் வேற. நாளைக்கு அங்கே வந்து பண்டிகையை நீங்கள்லாம் உற்சாகமாக கொண்டாறப்போ, நான் எதையாவது நினைச்சுகிட்டு கண்கலங்கினா நல்ல நாளும் அதுவுமா, பிள்ளை குட்டிங்க உள்ள வீட்டிலே ரொம்பச் சங்கடமா இருக்கும். அதனாலேதான் வரலேங்குறேன். தப்பா நினைக்காதீங்க. உங்க மனசு எனக்குத் தெரியாதா? இல்லே என்னைத்தான் உங்களுக்குத் தெரியாதா?” ஏன்று பிடிவாதமாக மறுத்துவிட்டார் ரத்தினம் பிள்ளை.

தீபாவளியன்று அதிகாலையிலேயே வெளியே கிளம்பி எங்கோ போய் தனிமையில் பகல் முழுவதையும் கழித்துவிட்டு இரவு எட்டு

மணிக்கு மேல் அறைக்குத் திரும்பியவரை வீட்டு வாசலிலேயே காத்திருந்து வரவேற்றார் வீட்டின் சொந்தக்காரர்.

“”என்ன பிள்ளைவாள் காலையிலேர்ந்து எங்கே போயிட்டீங்க? நம்ம வீட்டிலே இன்னிக்கு உங்களை சாப்பிடச் சொல்லலாமுன்னு ரெண்டு தடவை மாடிக்கு வந்து பார்த்தேன். ரூம் பூட்டியே இருந்துச்சு” என்று கூறிவிட்டு, “”கொஞ்சம் இருங்க” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றவர் சற்று நேரத்தில் கையில் ஒரு காகிதப் பொட்டலத்துடனும், ஒரு பிளாஸ்டிக் பையுடனும் வந்து அவற்றைப் பிள்ளையிடம் நீட்டினார். அதை வாங்காமல் என்ன என்பது போலப் பார்த்த பிள்ளையிடம், “”உங்க மகன் காலையிலே பத்துமணி சுமாருக்கு வந்தார். உங்களை எங்கே? என்று கேட்டார். நான், நானும் தேடிப்பார்த்தேன், எங்கே போயிருக்காருன்னு தெரியலைன்னு சொன்னேன். அவர் வந்தா நான் வந்து தேடினேன்னு சொல்லி இதைக் கொடுத்திடுங்கன்னு சொல்லி இதைக் கொடுத்திட்டுப் போனார். இதிலே உங்களுக்கு வேட்டி சட்டையும் இந்தப் பையிலே தீபாவளிப் பலகாரங்களும் இருக்காம்” என்றார்.

பிள்ளை அவற்றைக் கைநீட்டி வாங்குவதற்கும், “”சாமி, ஏதாவது பிச்சை போடுங்க” என்று அருகில் ராப்பிச்சைக்காரனின் குரல் கேட்பதற்கும் சரியாக இருந்தது. துணிப்பொட்டலத்தையும் பலகாரப் பையையும் வாங்கிய பிள்ளை அவற்றை அப்படியே அந்த ராப்பிச்சைக்காரனின் நீட்டிய கரங்களில் போட்டுவிட்டார்.

திகைத்துப்போய், “”பிள்ளை” என்று அதிர்ந்த வீட்டுக்காரரிடம், “”என்ன முதலியார்வாள்? ஏன் இப்படித் திகைச்சுப் போயிட்டீங்க? பிள்ளைங்க பெத்தவங்களுக்கு எதைச் செஞ்சாலும் கொடுத்தாலும் பாசத்தோடவும், பரிவோடவும் செய்யணும், கொடுக்கணும், பெத்தவங்களுக்குச் செய்யறது கடமைங்கற நெனைப்போட செய்யறதைவிட, அப்படிச் செய்ய நமக்குக் கொடுத்து வச்சிருக்கோங்கற எண்ணத்தோட செய்யணும், ஆனா என் பையன் இதை பாசத்தோடவோ, பரிவோடவோ ஏன் ஒரு கடமைங்கற உணர்ச்சியோடவோ கூட கொண்டு வந்து கொடுக்கலை. மத்தவங்க யாராவது ஏதாவது சொல்லுவாங்களேங்கற எண்ணத்திலே அல்லது பயத்திலேதான் கொண்டு வந்து கொடுத்திருக்கான். கொஞ்சமாவது அவன் மனசிலே பாசஉணர்ச்சி இருந்திருந்தா நேத்தே வந்து என்னை வீட்டுக்குக் கூப்பிட்டிருக்கலாம், இல்லாட்டி இன்னிக்குக்காலமே வந்து எங்கிட்டே நேரிலே கொடுத்திட்டு கால்லே விழுந்து ஆசிர்வாதம் வாங்கிகிட்டுப் போயிருக்கலாம். இங்க வந்தப்ப என் பேரனையும் அழைச்சிகிட்டு வந்திருந்தாலாவது அவன் மனசிலே ஓரளவாவது பாசம் மிஞ்சியிருக்குன்னு நம்பியிருக்கலாம். இதிலே எதுவுமே இல்லாம யாரோ ஒரு அநாதைக்கு தீபாவளி இனாம் தர்ற மாதிரி அவன் கொண்டு வந்து போட்டுட்டுப் போயிருக்கிறதை நான் எப்படி வாங்கிக்க முடியும்? ஒரு பிச்சைக்காரனுக்கு போடறதைப்போல அவன் கொண்டு வந்து போட்டுட்டுப் போனதை நான் என்னைவிட வசதி குறைஞ்ச வக்கில்லாத ஓர் ஏழைக்குத் தானமாப் போட்டுட்டேன். அவ்வளவுதான்” என்று கூறிவிட்டு திகைத்துச் சிலையாக நின்ற வீட்டுக்காரரிடம் ஒரு பரிதாபகரமான புன்னகையை உதிர்த்துவிட்டுப் படியேறினார் ரத்தினம் பிள்ளை.

அன்று வழக்கம்போலவே கடைக்குப்போக பிள்ளையை அழைக்க வந்த நாயுடு அறை பூட்டி இருப்பதைக் கண்டு வியப்படைந்தார். இந்த நேரத்தில் பிள்ளை வேறு எங்குமே போகும் பழக்கமுடையவர் அல்லவே, எங்கு போயிருப்பார் என்று குழப்பத்துடன் சிந்தித்துக் கொண்டு மாடி பால்கனியில் நின்று கொண்டிருந்த நாயுடுவின் கண்களில் சற்றுத்தூரத்தில் பிள்ளை நடந்து வந்து கொண்டிருப்பது தென்பட்டது. பிள்ளை அருகே வந்ததும் அவரைப் பார்த்த நாயுடு திகைத்துவிட்டார். பிள்ளையின் நெற்றியில் அவர் கோயிலுக்குப் போய்விட்டு வருகிறார் என்பதற்கு அடையாளமாக திருநீறும் குங்குமமும் துலங்கின. அவரது கையில் தொங்கிய பிளாஸ்டிக் பையில் அர்ச்சனை செய்த தேங்காய் பழம் இருப்பது தெளிவாகத்தெரிந்தது.

நாயுடு, “”என்ன பிள்ளைவாள் ரொம்ப அதிசயமாய் இருக்குதே… நீங்க கோயிலுக்கே போகமாட்டீங்களே. நான் கோயில் விசேஷ நாளுங்கள்லே எவ்வளவோ வற்புறுத்திக் கூப்பிட்டப்பல்லாம் கூட நீங்க வந்ததில்லையே இன்னைக்கு என்ன நீங்களே கோயிலுக்குப் போயி அர்ச்சனை பண்ணிட்டு சாமி கும்பிட்டுட்டு வந்திருக்கீங்க. இன்னிக்கு அப்படி என்ன விசேஷம்?” என்றார் தாங்கமாட்டாத வியப்புடன்

கதவைத் திறந்த பிள்ளை, “”உள்ளே வாங்க நாயுடு” என்று கூறிவிட்டு உள்ளே நுழைந்து அங்கு சுவரில் மாட்டப்பட்டிருந்த சாமி படத்தின் முன்பு தேங்காய் பழப்பையை வைத்தார்.

“”என்ன பிள்ளை நான் கேட்டதுக்கும் பதில் சொல்லலையே… இன்னைக்கு என்ன விசேஷம்”

“” இன்னைக்கு ஒரு விஷேசமான நாள்தான் நாயுடு”

புரியாமல் விழித்த நாயுடுவிடம் அமைதியாகச் சொன்னார் பிள்ளை.

“”இன்னைக்கு என் பையனோட கல்யாண நாள்”.

.

– பா.சந்திரசேகர் (ஜூலை 2015) 

நன்றி : சிறுகதைகள்.காம்

இதையும் படிங்க

புலி நிலத்தின் கதை

விடுதலைப்புலிகள் அமைப்பினுள் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட பிளவு, தமிழர்களது ஆயுதப்போராட்டத்துக்கு மாத்திரமல்ல, தமிழ்த்தேசிய அரசியலுக்கே பெரும் சாபமானது. அந்த கொடிய ஆரம்பத்தின்...

அதிகம் பேசப்படும் புத்தகம்

திருமணம் என்ற ‘வதை’ புரிபடுவதற்குரிய எந்த முகாந்திரமும் கொண்டிராத சிறுமி நுஜூத், பிஞ்சு மனதுக்கே உரிய விதமாக, சில ரொட்டித் துண்டுகளுக்காகப் பிச்சை...

மன்னார் ஆயர் பற்றிய புத்தகம்

இறையடி சேர்ந்த மன்னார் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் வாழ்வையும் பணிகளையும் உள்ளடக்கிய விரிவான நூலை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுத ஆரம்பித்துள்ளேன்....

தாகமும் தீரும் | சிறுகதை | விமல் பரம்

“எத்தனை தடவை சொல்லீட்டன் நீ அங்க போறது எனக்குப் பிடிக்கேலை… வேண்டாம்” கணவனின் குரல் கேட்டுத் திரும்பினாள் நித்தியா.

அகரமுதல்வன் கவிதைகள்

01கடல்உன்னை அணைக்கச் சொல்கிறது.காற்றுஉன்னை தீண்டச் சொல்கிறதுகரைஉன்னை மலர்விக்க சொல்கிறதுகாதல்உன்னை ஸ்பரிசிக்க சொல்கிறதுகாமம்நம்மை காண்பிக்க சொல்கிறதுஎன் தீஞ்சுடரே!கடலுக்கு முன்...

பூரணம் | கவிதை

புற்களும்பூச்செடியாகியதுகற்களும்மெத்தையாகியது அவ்வீதியில்அவள் வரவால்என் வயதும்பத்தாகியது வழியில் முன்னேநான் நடக்கஎன் சுவடு வழிஅவள் நடக்க

தொடர்புச் செய்திகள்

பூரணம் | கவிதை

புற்களும்பூச்செடியாகியதுகற்களும்மெத்தையாகியது அவ்வீதியில்அவள் வரவால்என் வயதும்பத்தாகியது வழியில் முன்னேநான் நடக்கஎன் சுவடு வழிஅவள் நடக்க

எனக்குள் பட்டாம்பூச்சி | கவிதை | கயல்விழி

மனதில்பட்டாம்பூச்சிகள்பறப்பதற்கும்பின்னணியில்இளையராஜா இசைகேட்பதற்கும்காதல் வர வேண்டுமாஎன்ன.? இதோ இந்த மின்மினிகள்கண்சிமிட்டும்போதுஅதோ அந்த நிலவைமறைத்தமேகம் விலகும் போது

தனிமை | கவிதை | சுகி கணேசலிங்கம்

கனடாவிலுள்ள விலா கருணா சந்தியாராகத்தின் ஒரு அங்கமாக 01.10.2021 அன்று ஒன்லைன் செயலியூடாக நடாத்தப்பட்ட கவிதைச்சரம் போட்டியில் சுகி கணேசலிங்கம் அவர்களால் எழுதப்பட்ட இக்கவிதை முதலாம் பரிசினைப் பெற்றுக் கொண்டமை...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

நீள் இரவு | சிறுகதை | கவிஜி

இருப்பதிலேயே மோசமான இரவு பிணம் காக்கும் இரவுதான். எல்லாம் மியூட் ஆகி... காலத்தைக் கடப்பது சகிக்க இயலாத கசப்பின்...

40 வயதுக்குள் மாதவிலக்கு நிற்பது நல்ல அறிகுறியல்ல!

இளவயசு மெனோபாஸை ஏதோ முறை தவறின மாதவிலக்குன்னு தப்பாக நினைத்து அலட்சியப்படுத்தாமல் சரியான நேரத்துல மருத்துவ பரிசோதனை அவசியம்.

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 31 | பத்மநாபன் மகாலிங்கம்

தமிழரின் இசைக் கருவிகள்: தமிழரின் இசைக் கருவிகள் மூன்று. 'தமிழ்' என்ற சொல்லின் சிறப்பு ஒலி 'ழ' அல்லவா?  தமிழரின் இசைக் கருவிகளிலும் இந்த 'ழ'...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

தெல்லிப்பளையில் வன்முறையைத் தூண்டிய அமைப்பைத் தடை செய்ய சிவசேனை வேண்டுகோள்!

மறவன்புலவு க. சச்சிதானந்தன் (சிவ சேனை) பிஞ்சு நெஞ்சங்கள். மாணவ மாண்பினர். பயில...

சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தை பற்றிய புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா...

கர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கர்ணன் படத்தின் தவறை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டி பதிவு செய்திருக்கிறார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த...

பிரசாந்த் படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் அந்தகன் படத்தில் மாஸ்டர் படத்தின் மூலம் ரசிகர்களை கவந்தவர் இணைந்திருக்கிறார்.பிரசாந்த்பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'....

சகலருக்கும் பிறக்கும் புத்தாண்டில் சுபீட்சமும் அமைதியும் கிட்டட்டும் | விக்கி

இந்தப் பிலவ வருடம் அனைத்து மக்களுக்கும் சுபீட்சத்தையும் அமைதியையும் நல்க வேண்டும் என இறைவனை இறைஞ்சுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது, உரிமையை வென்றெடுக்கலாம் | சம்பந்தன்

எந்தவிதமான துன்பங்கள் துயரங்கள் வந்தாலும் தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

துயர் பகிர்வு