Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் பறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி

பறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி

12 minutes read

மெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று பார்வையைக் கூர்மையாக்கினேன். சிறகடித்துக்கொண்டே சூழ நின்ற பறவைகளைப் பார்த்த போதே அவன்தான் என மனம் உறுதிப்படுத்தியது.

நடைபாதையிலிருந்து விலகி புல்வெளியில் கால் பதித்து அவனை நோக்கிப்போனேன். இடது பக்கம் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். முன்பென்றால் ஞாயிற்றுக்கிழமை மாலைகளின் இந்த இடம் கலகலப்பாக இருக்கும் .நிறைய கூட்டம் இருக்கும். நடைபாதையில் நடப்பதே சிரமமாக இருக்கும். புல் வெளியில் குழந்தைகள் ஓட பெற்றோர் பின்னால் துரத்திக்கொண்டிருப்பார்கள்.
இப்போது இந்த கோவிற் பிரச்சனையில் சனங்கள் வந்து அதிகம் உலவுவதில்லை. தங்கள் சுதந்திரத்துக்குக் கட்டுப்பாடு வந்துவிட்டதே என்று சலித்துக்கொண்டே வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறார்கள். கட்டுப்பாடு சிறிது தளர்ந்த நேரத்தில் இப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமையில் இந்த பூங்காவுக்குக் குழந்தைகளை விளையாடக் கூட்டி வருகிறார்கள்.

இந்தப் பூங்கா புல்வெளிகளுடனும் நடைபாதையுடனும் பரந்திருக்கிறது. அதன் ஒரு பக்கத்தில் சிறிய நீரோடை. அதன் குறுக்காக சிறிய மரப்பாலம். நீரோடையின் சரிவில் பச்சைப்பசேலென்ற பசுமை. அந்த சரிவின் மேட்டில் இரண்டு உயரமான மரங்கள். அதன் அருகே வரிசையாய் நான்கு மர இருக்கைகள். அதில் கடைசியாய் இருந்த இருக்கை மட்டும் பச்சை வண்ணம் அடிக்கப்பட்டுத் தனியாய்த் தெரியும்.அதன் கைப்பிடிகள் சற்று வளைந்திருக்கும். அந்த இருக்கையில்தான் அவன் அமர்ந்திருந்தான். எப்போதுமே அந்த இருக்கையில்தான் அவன் அமர்வான். அதற்கு ஏதும் காரணங்கள் இருக்குமோ தெரியவில்லை.
அவனுக்கு மிகவும் நீளமான பெயர். சுருக்கமாக ஜோ. பளபளத்த மஞ்சள் நிற முகம். சிறிய கண்கள். எதிரே நிற்பவரை ஊடுருவும் பார்வை. புன்னகை மலர்ந்திருக்கும் உதடுகள் . பார்த்த முதல் வினாடியே பிடித்துப்போகும் வசீகரம்.

சற்றுக் குனிந்து மடியில் வைத்திருந்த பைக்குள் இருந்த தானியங்களை வலது கையால் எடுத்து விசிறி விசிறி போட்டுக்கொண்டிருந்தான். வேகமாய் வந்து உண்ணும் பறவைகள் மீது அவன் பார்வை பதிந்திருந்தது. அந்த பறவைகள் மீது என்ன பிரியமோ,
இந்தப் பறவைகளுக்காகவே அவன் இங்கு வருகிறானோ என்று பல சமயங்களில் நான் நினைத்துக்கொள்வதுண்டு. வெண் நிறத்தில் சாம்பல் நிறம் தடவிய இறகுகளுடன் இந்த பறவைகள் கூட்டமாய் நின்று உண்பதைப் பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.

நீரோடைகள் இருக்குமிடங்களில் இந்த பெலிகன் இன பறவைகளைப் அதிகம் பார்க்கலாம். பிரிஸ்பேர்ணில் பல இடங்களில் இப்பறவைகள் உலவுவதை பார்த்திருக்கிறேன். நான் அப்பறவைகளை பார்த்துக்கொண்டே கிட்ட நெருங்கினேன்.

க்கும்,க்கும் என்று சிறு ஒலியை எழுப்பியபடியே தங்கள் முன்னால் வந்து விழும் வெண்ணிற பொரிகளை தம் நீண்ட அலகினால் கொத்தி விழுங்கிக் கொண்டிருந்தன.
சற்றுக் குனிந்திருந்த அவனின் உதடுகள் சிறிது அசைவது போல் தெரிந்தன. அந்தப் பறவைகளுடன் ஏதாவது பேசுகிறானா, என்ன பேசுவான்?
தான் பிறந்து வளர்ந்த வியட்நாம் பற்றியோ, அல்லது கடல் தாண்டி வந்து இப்போது வாழும் அவுஸ்திரேலிய வாழ்வு பற்றியோ பேசக்கூடும். சமீபகாலமாக தான் அனுபவிக்கின்ற துயரம் பற்றிக்கூட பகிரக்கூடும்.
நான் அருகே சென்று ‘ஜோ..’ என்றேன்.

சட்டென்று நிமிர்ந்தவன் ‘டொக்டர்’ என்றபடி எழுந்து நின்றான்.

மாலைநேர மஞ்சள் வெய்யில் பட்டு அவன் முகம் பொன்னிறமாய் ஒளிர்ந்தது. சிறிய கண்களில் சிறு மலர்வு தெரிந்தது. என்னை எதிர்பார்த்தவன் போல அவன் மெல்ல புன்னகைத்தான். தடித்த உதடுகள் சற்று விரிந்து மூடியது. சதைப்பிடிப்பான கன்னத்தை கையால் தேய்த்தபடி “ ஹலோ டொக்டர் .. நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் நீங்கள் இங்கு வரவில்லை. இன்று வரக்கூடும் என்று என் மனசு சொன்னது. “ என்றான். தெளிவான ஆங்கிலத்தில் பேசினான்.

“மாறி மாறி ஏதாவது வேலைகள் வந்து விடுகின்றன. என்ன ஜோ. பறவைகள் என்ன சொல்கின்றன. “
அவன் அதே புன்னகையுடன் பறவைகளைப் பார்த்தான்.

“பறவைகளின் பாஷை கூட எனக்கு இப்போதெல்லாம் புரிகிறது டொக்டர் . “

“நல்லது. நீ பேசிக்கொண்டிரு. உன்னிடம் சொல்ல ஒரு விஷயம் இருக்கிறது. வருகின்ற புதன்கிழமை ஒரு மருத்துவ கற்பித்தலுக்காக பேர்த்துக்கு போகிறேன். மூன்று மாதம் அங்கேதான் இருப்பேன். வரும் செப்டம்பர் கடைசியில் திரும்பி வந்துவிடுவேன். “

ஒரு வினாடி அவன் முகம் மாறியது. ஒரு வித தவிப்போடு என்னைப் பார்த்தான்.

“கவலைப்படாதே. எல்லாவற்றுக்கும் இங்கே மருத்துவ வசதி இருக்கிறது. எதுவென்றாலும் எங்கள் மெடிக்கல் சென்ரருக்கு போ. டொக்டர் மார்ஷாவிடம் காட்டிக்கொள்.”

‘சரி டொக்டர்’ குரல் மெலிதாய் ஒலித்தது.

என் தோளுக்கு மேலாக பின்புறம் சென்ற அவன் பார்வையில் ஒரு மிரட்சி தெரித்தது. நான் திரும்பிப் பார்த்தேன்.

பொன் நிற முடிகள் தோளில் பரவ வெள்ளை வெளேரென்ற நிறத்தில் பழுப்பு கண்களுடன் மெல்லிய உயரமான தோற்றத்தில் ஓர் இளம்பெண் முகமெல்லாம் சிரிப்புடன் வந்து கொண்டிருந்தாள்.
“அவள் என் சிநேகிதி லாரா. அவளுக்கு என் விஷயம் தெரியாது. “

வார்த்தைகள் திக்கித் திணறி வந்தன.

எனக்குப் புரிந்தது.

“வெறும் சிநேகிதியா,அல்லது…”

“என்னைப் பொறுத்தவரை வெறும் சிநேகிதிதான். அவள்தான் என்னைக் காதலிப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கிறாள். “

நான் அவன் முகத்தைப் பார்த்தேன். கண்களின் கீழ் தசையில் ஓர் அசைவு. உதடுகளில் ஒரு நடுக்கம். கண நேரத்தில் சுதாகரித்துக்கொண்டு முகத்தில் மலர்ச்சியை வரவழைத்துக்கொண்டான்.

“ஹாய் ஜோ, “

அருகே வந்த பெண்ணிடம் “இவர் டொக்டர் ராஜ். தெரிந்தவர். “

என்று அறிமுகம் செய்து வைத்தான். அந்த பெண் வேறு நாட்டைச்சேர்ந்தவளாய் இருக்கவேண்டும் . முகபாவனையும் பளிங்குக் கண்களும் ஐரோப்பிய இனத்தவர் என்று அடையாளப்படுத்தியது. அவனை விட சற்று உயரமாக இருந்தாள். அவனைக் கண்கள் பளிச்சிடப் பார்த்தாள். அந்த பார்வையில் ஒருவித நெகிழ்ச்சி இருந்தது.

நான் ஹலோ சொல்லி இருவரிடமும் விடை பெற்று நடைபாதைக்குத் திரும்பினேன்.
சீராக நடக்கத்தொடங்கினேன்.

மனம் அமைதியாக இல்லாமல் உள்ளுக்குள் அலைபாய்ந்தது. சிறிது நடந்து விட்டு திரும்பிப் பார்த்தேன். இருவரும் இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். மனதுக்குள் பெரும் பாரம் அழுத்தியது.
என் ஐம்பது வயதுக்குள் என் மருத்துவ சேவையில் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறேன். வித விதமான நோய்கள், விதவிதமான பாதிப்புகள் என்று மொழி தாண்டி இனம் தாண்டி வரும் மனிதர்கள்.
பிரிஸ்பேர்ணின் வடக்கு நகர் ஒன்றின் மருத்துவ நிலையத்தில் கடமை புரியும் என்னிடம் முதல் தடவை ஜோ ஒரு நோயாளியாக வந்த நாள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதற்கு முன்னால் ஆறு மாதங்களாக அவனை அறிந்திருக்கிறேன். வேலைகள் அற்ற ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பூங்காவுக்கு நான் நடைப்பயிற்சிக்கு வருவதுண்டு. அந்த ஞாயிறுகளில் தவறாமல் அவனை இதே நீரேரியின் கரையில் இதே இருக்கையில் பார்த்திருக்கிறேன். ஆரம்பத்தில் புன்னகையை பரிமாறிக்கொண்டு கடந்து போயிருக்கிறேன். பின்னர் அதே இருக்கையில் அமர்ந்து பேசத்தொடங்கினோம். அவ்வப்போது தன்னைப்பற்றியும்சொல்லியிருக்கிறான்.

அவனது கதை மிகவும் துயரம் நிறைந்தது. சிரித்துப் பேசும் இந்த இளைஞன் இருபத்தெட்டு வயதுக்குள் இத்தனை துன்பம் அனுபவித்திருக்கிறானே என்று கவலையோடு நினைத்திருக்கிறேன்.
“எனக்கு அப்பா இல்லை. அவர் அன்பை நான் உணர்ந்ததில்லை.தம்பிக்கு ஒரு வயது இருக்கும் போதே அவர் எங்களை விட்டு விட்டு வட வியட்நாமுக்குப் போய்விட்டார். அம்மா தனியாக இருந்து எவ்வளவோ கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தாள். வியட்நாமின் மேகாங் ஆற்றங்கரைக் கிராமம் ஒன்றில்தான் நாங்கள் வாழ்ந்தோம். அம்மாவின் சின்ன வயதுக் காலமெல்லாம் துன்பத்திலேயே கழிந்திருக்கிறது. அமெரிக்க இராணுவத்தின் ஆக்கிரமிப்பு போரின் அத்தனை வலிகளையும் சின்ன வயதில் அனுபவித்தவள். வறுமை ஒரு புறம், உயிர்ப் பயம் ஒரு புறமுமாக மூங்கில் காடுகளில் ஒழித்து ஒழித்து வாழ்வைக் கடந்தவள். அப்பா விட்டுப் போனதும் அதே வறுமை தொடர்ந்தது. பசி பட்டினியோடுதான் எங்கள் வாழ்க்கை இருந்தது. நானும் தம்பியும் நீர் நிலைகளில் தூண்டில் போட்டு பிடித்துவரும் சிறுமீன்களை சுட்டு சாப்பிடுவோம். சோளம் பயிர்ச்செய்வோம். பூசணி நடுவோம். அந்த வருமானங்கள் போதவில்லை. எங்கள் உறவில் சிலர் அவுஸ்திரேலியா போகலாம் என்று தீர்மானித்து எங்களையும் அழைத்தார்கள். இருந்த சிறு நிலத்தையும் விற்று மிகுதிக்கு கடன் பட்டு அவர்களோடு நாமும் புறப்பட்டோம். இந்தோனேஷியா வரை விமானத்தில் வந்து அங்கு ஆறுமாதங்கள் நிர்க்கதியாய் நின்றோம். பின் அங்கிருந்து படகில் இங்கே வந்தோம். நவுறு முகாமில் இரண்டு வருஷம் இருந்து படாதபாடு பட்டோம். ஏன் வந்தோம் என்று கூட நினைக்கவைத்த காலங்கள் அவை. அதன் பிறகு எத்தனையோ விசாரணைகளுக்கு பிறகு பிரிஸ்பேர்ண் கொண்டு வந்து விட்டார்கள். இப்போதும் தற்காலிக விசாதான். அதைப் புதுப்பித்துக்கொண்டு இருக்கிறோம். இந்த நாடு அனுமதிக்கும் வரை இங்கு வாழலாம் என்ற தற்காலிக நிம்மதிதான் இது. “

சுறு சுறுப்பாகவும் அழகாகவும் புத்திசாலியாகவும் உள்ள இளைஞன், இயற்கையை ரசிப்பவன், பறவைகளை நேசிப்பவன், உள்ளுக்குள் நிறைய சோகங்களை வைத்திருப்பவன்.

சோர்வாக இருக்கிறது, வழமை போல் சாப்பிட முடிவதில்லை என்று சொல்லித்தான் என்னிடம் காட்ட வந்தான். பரிசோதித்துப்பார்த்தேன். காய்ச்சல் இல்லை. இரத்த அழுத்தம் இல்லை. நாடித்துடிப்பு சீராக இருந்தது. யோசித்துப் பார்த்ததில் சின்ன சந்தேகம் எழுந்தது.

“எழுதித் தருகிறேன். இரத்தப்பரிசோதனை செய்து கொள்ள. “

அதன்படி அவன் இரத்தம் கொடுத்து, அதன் மருத்துவ அறிக்கை அடுத்தநாள் அவசரம் என்று குறிப்பிடப்பட்டு என் மேஜையில் இருந்தது. அவசரம் என்பதால் தொலைநகலில் அனுப்பப் பட்டிருக்கிறது. அதைப் படித்த எனக்கு தலை சுற்றியது. ஓரளவு ஊகம் இருந்தது. அதை எழுத்தில் படிக்கும்போது ஆற்றாமை எழுந்தது. அவனுக்கு இரத்தப்புற்றுநோய்க்கான அறிகுறி. இரத்தத்தில் வித்தியாசம் காட்டியது.
வரவேற்புப் பெண்ணிடம் சொல்லி அவனை வீட்டில் யாரையாவது கூட்டிக்கொண்டு வரும்படி தகவல் கொடுத்தேன்.

மறுநாள் மதியப்பொழுதில் வந்தான். தனியேதான் வந்தான்.

“வீட்டிலிருந்து யாரையும் கூட்டி வரவில்லையா.. “

அவன் புருவத்தை சிறிது உயர்த்தி கேள்விக்குறியுடன் பார்த்தான்.

“உன் வீட்டில் உள்ள யாருடனாவது நான் பேச வேண்டும். “

“ஏன் டொக்டர் எனக்கு ஏதாவது பிரச்சனையா,.எதுவாயினும் என்னிடமே சொல்லுங்கள்.”

“உனக்கு இரத்தத்தில் சிறு வித்தியாசம் இருக்கிறது. நீ றோயல் பிரிஸ்பேர்ண் பொது வைத்தியசாலைக்கு போக வேண்டிவரும். உன் மருத்துவ அறிக்கைகளை அங்கு அனுப்பிவிட்டேன். இரத்தபுற்று நோய் நிபுணர் குழுவுடனும் கதைத்திருக்கிறேன். அவர்கள் உன்னை அழைப்பார்கள்”

ஒரு வினாடி அவன் முகம் அதிர்ச்சியில் உறைந்தது. உதடுகள் துடிக்க ஏக்கத்தோடு என்னைப் பார்த்தான். கண்களை வெட்டி முகத்தை தாழ்த்திக் கொண்டான் .

சிறிது நேரம் அவனிடமிருந்து எந்த வார்த்தையும் வரவில்லை. தன்னை நிதானப்படுத்த அவனுக்கு அவகாசம் தேவைப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு நிமிட அமைதிக்குப் பிறகு ‘டொக்ரர்’ என்றான்.

“உன் வீட்டில் யாரையாவது கூட்டி வா. நான் அவர்களோடு பேசுகிறேன். நீ தைரியமாக இரு.”

“வேண்டாம் டொக்டர் .வீட்டில் யாருக்கும் தெரியவேண்டாம்”

“அது எப்படி ஜோ..மருத்துவ பரிசோதனைகளுக்காக பொது மருத்துவமனைக்கு போனால் ஒன்றிரண்டு நாட்கள் தங்க வேண்டியும் வரும். அதற்கு உன் வீட்டு ஆட்களின் உதவி வேண்டும். “

“இல்லை டொக்டர். நானே சமாளித்துக்கொள்வேன். எனக்கு நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உதவி செய்வார்கள். “

கீழ் உதட்டை பற்களால் கடித்துத் தன்னை நிதானப்படுத்த முயன்று கொண்டிருந்தான்.

“நன்றி டொக்டர். ” என்று சொல்லி எழுந்து போனான்.

மறுநாளே அவன் பொது வைத்தியசாலைக்கு அழைக்கப்பட்டிருக்கிறான். ஒரு வாரத்தில் அவனது விரிவான மருத்துவ அறிக்கை என் கணினி திரையில் விரிந்தது. இரத்தப்புற்றுநோய் அவன் உடலுக்குள் ஊடுருவியிருக்கிறது. அறிக்கையைப் பார்த்தவுடனேயே புரிந்தது. கடுமையான வகையைச்சேர்ந்த இதை குணப்படுத்தும் வாய்ப்பு குறைவு. வெளியே தெரியாமல் உள்ளுக்குள்ளேயே பரவி அவனை விரைவில் கொல்லப்போகிறது.

அவனை ஒரு நோயாளியாக மட்டும் என்னால் பார்க்க முடியவில்லை . அதையும் தாண்டிய ஏதோ ஓர் உணர்வு, அந்த இளைஞனின் நிலை எனக்குள் பதட்டத்தை ஏற்படுத்தியது.

இரண்டாம் நாள் மருத்துவ நிலையம் வந்து என்னை சந்தித்தான். வெயில் நேரம் வந்ததில் முகம் வியர்வையில் மினு மினுத்தது. கொஞ்சம் மெலிந்திருந்தான். கண்களில் சோர்வு இருந்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல் மெல்லிய புன்னகையுடன் என்னைப் பார்த்தான்.

“என் நிலை பற்றி விளக்கமாக எனக்கு எல்லாமே சொல்லியுள்ளார்கள் டொக்டர். மருத்துவம் பற்றி எதுவுமே எனக்கு தெரியாது. ஆனால் இப்போது என் நோய் பற்றிய சகல விஷயங்களையும் புரிந்து கொள்கிறேன். அவ்வளவு விளக்கம் தந்திருக்கிறார்கள். எந்த நேரமும் என் மரணம் நிகழலாம். இல்லையா டொக்டர் ..”
குரல் அடைத்துப்போயிற்று எனக்கு.

“ஓரளவு எதிர்பார்த்ததுதான் டொக்டர், பரவாயில்லை, எது வந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். “
“உன் வீட்டிலிருந்து யாரையாவது இப்போதாவது கூட்டி வந்திருக்கலாம் ஜோ.. “
ஆதங்கத்தோடு கேட்டேன்.

“வேண்டாம் டொக்டர் .இப்போதுதான் எங்கள் வீடு சிறிது நிம்மதியாக இருக்கிறது. நான் பெயிண்ட் கொம்பனி ஒன்றில் வேலை செய்கிறேன். தம்பி ஓர் உணவு விடுதியில் வேலை செய்கிறான் . அம்மா இப்போதுதான் சிறிது மகிழ்வோடு இருக்கிறாள். நல்ல உடை உடுத்திக்கொள்கிறாள். நல்ல சாப்பாடு சாப்பிடுகிறாள். இந்த மகிழ்ச்சியைக் கலைக்க வேண்டாம். “

“ஆனால் என்றேனும் ஒருநாள் அம்மாவுக்கு உன் நிலமை தெரியத்தானே போகிறது.”

“அதை அப்போது பார்த்துக்கொள்ளலாம் .நான் கடைசியாக பார்ப்பது அவளது அழுத முகமாக இருக்க வேண்டாம் டொக்டர். அவளது கவலை படிந்த முகத்தை இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டு வருகிறேன். “

அவன் குரல் தழு தழுத்தது. முகத்தை துடைத்துக்கொண்டு சோர்வோடு எழுந்து போனான்.
வாழ்வில் வறுமையைக் கடந்து, சந்தோஷங்களை அனுபவிக்க வேண்டிய வயதில், அத்தனையையும் இழந்து விட்டு வாழும் நாட்களை எண்ணிக்கொண்டிருக்க வேண்டிய கொடுமை.

இவனுக்கு இப்படியொரு நிலமை வராமலே இருந்திருக்கலாமே! வேகமான நடையிலும் மனம் அந்த கணத்தை நினைத்துத் தத்தளித்துக் கொண்டேயிருந்தது. இப்போது வெயில் நன்றாகத் தணிந்து விட்டது. மெல்லிய குளிரோடு காற்று வந்து முகத்தை தடவிச் சென்றது. நான் எதிர்ப்பக்க நடைபாதையில் நாலு சுற்று நடந்து விட்டு மறுபடி அவன் இருந்த இடத்துக்கு வந்தேன் . அந்த பெண்ணைக் காணவில்லை. அவன் மட்டும் தனியாக இருக்கையில் அமர்ந்திருந்தான். பூங்காவில் நடமாட்டம் குறைந்திருந்தது .நடந்த களைப்புக்குச் சிறிது ஆசுவாசப்படுத்திய பின் போகலாம் என்று நினைத்து அவன் அருகே போய் அமர்ந்தேன்.

தானியங்கள் போட்டு முடிந்ததால் பையை மடித்துக் கையில் வைத்திருந்தான். பறவைகள் கழுத்தைத் திருப்பி அவனைப் பார்ப்பதும் நடை போடுவதுமாக சுற்றிச் சுற்றி நின்றன.

“இந்தப் பறவைகளோடு எனக்கு ஒரு பந்தம் இருக்கிறது டொக்டர் . ஒவ்வொரு ஞாயிறும் இந்த பறவைகளுக்காகவே இங்கே வருகிறேன். பாருங்கள் என்னை அவைகளுக்கு நன்றாகவே அடையாளம் தெரிகிறது. என்னை மிகவும் நேசிக்கின்ற பறவைகள் “.

அந்த பறவைகள் மீதே அவன் பார்வை பதிந்திருந்தது. கீழ் உதட்டை பற்களால் அழுத்தியபடி ஏதோ யோசனையில் இருந்தான். பேசுவதற்கு முற்படாமல் நானும் அமைதியாக இருந்தேன்.
ஒரு நிமிடத்தின் பின் மெலிந்த குரலில் பேசினான் .

“லாரா மிகுந்த வருத்தத்துடன் போகிறாள் . “

ஏன் என்பது போல் அவன் முகத்தைக் பார்த்தேன்.

“ஏதோ ஒரு மாற்றம் என்னில் தெரிகிறதாம். முன்பு போல் நான் உற்சாகமாக தன்னோடு கதைப்பதில்லையாம். என்னால் இதற்கு என்ன பதிலைப் கூற முடியும். ஓரளவுதானே என்னாலும் நடிக்கமுடியும். “

உடைந்து நொறுங்கும் அவனின் மனச்சிதைவுகள் அவன் கண்களிலும் பிரதிபலித்தது.
அவளின் வார்த்தைகள் தந்த வலியை மறைக்கக் கண்களை அழுத்தமாய் மூடித்திறந்தான். மெலிதாய் நீர் திரையிட்ட அந்த கண்களை கூர்ந்து பார்த்து எதையும் ஆராய எனக்கு விருப்பமில்லை. அவனையறியாமல் மனதுக்குள் உருவான காதல் அந்த கண்களுக்குள் புதையுண்டு கிடக்கலாம். அதை தெரிந்து கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன்,.
பேசுவதற்கு எதுவுமே இல்லாதது போல வார்த்தைகள் தொண்டைக்குள்ளேயே சிக்கிக்கொண்டு நின்றன.
ஐந்து நிமிட அமைதியின் பின் நான் எழுந்தேன்.

“நான் வருகிறேன் ஜோ. நான் பேர்த்திலிருந்து திரும்பி வந்து உன்னைச் சந்திக்கிறேன் “நல்லது டொக்டர்” கை பற்றிக்கொண்டு சொன்னான்.

மனப்பாரத்துடன் நடைபாதையில் நடந்தேன். பொழுது இருண்டு கொண்டு வந்தது. தெரு விளக்குகள் பளிச்சிட்டன.

நான் பேர்த்துக்கு போய் மூன்று மாதங்கள் கடந்து விட்டன. காலம் கடந்தது தெரியாத அளவுக்கு வேலைப்பளு. இடையே ஒரு தடவை டொக்டர் மார்ஷாவுடன் கதைத்தபோது ஜோ தன் அம்மாவைக் காலில் ஒரு காயம் என்று கூட்டி வந்து காட்டிக் கொண்டு போனதாக சொன்னார்.

நான் திரும்ப பிரிஸ்பேர்ணுக்கு ஒரு சனிக்கிழமை மாலை வந்து இறங்கினேன்.

அப்போது குளிர்காலம் முடிந்திருந்தது . மிதமான வெய்யிலும் வெளிச்சமுமாக பிரிஸ்பேர்ண் பிரகாசித்தது.
மறுநாள் ஞாயிறு வந்த அலுப்பையும் பார்க்காமல் பூங்காவுக்கு போனேன். அன்றும் வெய்யில் மஞ்சளாய் பரவியிருந்தது. வானம் தெளிந்திருந்தது. ஜம்பர் எதுவும் இல்லாமல் டீ ஷேர்ட்டுடன் நடப்பதும் இலகுவாக இருந்தது. வாசலில் நின்ற மரங்களில் இலைகள் தெரியாதவாறு ஊதா பூக்கள் மலர்ந்தது நின்றன. பூங்காவில் அதிக ஆட்களைக் காண முடியவில்லை. இரண்டு குழந்தைகளை ஊஞ்சலில் அமர வைத்து தாய்மார் ஆட வைத்துக்கொண்டிருந்தார்கள்.

நான் உட்பக்க நடைபாதையில் வேகமாக நடந்தேன். நீரேரியின் அருகே என் பார்வை ஓடியது. சரிவின் மேலே புல் பரப்பில் ஏழெட்டு பெலிகன் பறவைகள் சிறகுகளை அடித்தபடி இங்கும் அங்குமாய் தத்தித் தத்திநடந்து கொண்டிருந்தன.

அருகே மெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த மர இருக்கை வெறுமையாய் இருந்தது.

.

நிறைவு பெற்றது..

.

.

.

.

.தாமரைச்செல்வி – அவுஸ்திரேலியா

.

நன்றி : நடு இணைய இதழ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More