Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் சித்தாந்தனின் தணற்காலம் | புதிய கவிதை நூல்

சித்தாந்தனின் தணற்காலம் | புதிய கவிதை நூல்

2 minutes read

தணற்காலம்

தொண்ணுாறுகளின் பிற்பகுதியில் கவிதை எழுதத் தொடங்கியவர் தம்பி சித்தாந்தன். இன்று சிறுகதை,விமர்சனம் என பல அம்சங்களையும் அவ்வப்போது தொட்டுத் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பவர். “மறுபாதி” என்ற ஒரு சிற்றிதழையும் வெளிக்கொண்டு வந்தவர். இப்படி மேலோட்டமாக அடையாளப்படுத்தி கடந்துவிட முடியாதபடி, ஈழத்து கவிதை வெளியில் ஒரு தவிர்க்க முடியாத ஒரு கவிஞராக முன்வைக்க வேண்டிய தேவையை இவரின் கவிதைகளின் வழியாக நாம் உணரமுடிகிறது.

தம்பி சித்தாந்தன் எழுத வந்த காலம் என்பது ஈழத்து இலக்கியத்தில் எத்தனை முக்கியத்துவமிக்கதோ அதே அளவு, ஈழத்துப் போர்காலத்திலும் மிக முக்கிய காலப்பகுதியாகும். போரின் உக்கிரம் மிக எளிதாகப் பற்றிக்கொள்ளும் நிலப்பரப்பில் வாழ்ந்தது என்பது சித்தாந்தனின் கவிதைகளில் வெளிப்படையாக தெரிகிறது. உளரீதியாகவும், உடல் ரீதியாகவும் தாக்கமுற்ற மக்களின் நினைவுகளில் என்றும் நிகழ்ந்துகொண்டிருக்கும் போரின் விளைவுகளை சித்தாந்தனின் கவிதைகளில் சந்திக்க முடிகிறது.

தம்பி சிந்தாந்தன் சொல்வதை ப் போன்று, இந்தத் தொகுதியிலுள்ள கவிதைகள் இரண்டாயிரமாண்டு தொடங்கி, இருபது ஆண்டுகள் வரை எழுதப்பட்டவை. அதிலும் குறிப்பாக போருக்கு முன்பும், பின்புமாக எழுதப்பட்டவை என்று வரையறுத்துக் கூறுகிறார். இந்தத் தெளிவான வரையறையை கவிதைகளின் வழியாக நாம் கண்டடைவதற்கு வாய்ப்பைத் தரும் கவிதைககள் குறைவு. போருக்குப் பின்பும், சித்தாந்தனின் கவிதைகள் வலிகளையும், துயரங்களையும் போரின் தவிர்க்க முடியாத விளைவுகளைக் கண்டு தனக்குள்ளாக கொதித்தெழும் உணர்வுகளின் தீவிரத்தில் தகித்துக்கொண்டு நம்மை பற்றிக்கொள்ளும் கவிதைகளே அதிகமிருக்கின்றன.

“வலிகளை மட்டுமே” அறிந்திருக்கும் மனதோடு சித்தாந்தனின் கவிதைகள் நகரத்தொடங்குகின்றன. துரோகத்தனத்தையோ, பழியுணர்ச்சியையோ அறியாத மனதை ஒரு கவிதையில் பதிவுசெய்கிறார். “யாவும் கதைகளான பின், புதை குழியின் மேல் மழைபெய்தாலென்ன, சூரியன் படுத்துறங்கினாலென்ன? என்ற ஆற்றாமையின் கேள்விகளை சுமந்துகொண்டு நமது மனசாட்சியை உலுக்குகின்ற பல வரிகள் நிறைந்திருக்கின்றன. “சொற்களையும் கடந்து நீள்கின்றது கதைகளின் துயரம்” என்று, கவிதையைக் கடந்தும் நம்மை தீவிரமாக அசைத்துக்கொண்டிருக்கும் மாபெரும் துயரங்களை மிக இலகுவாக உணர்வுகளின் மீது படரச் செய்துவிடுகிறார்.
கடந்த இருபது வருடங்களில், போரை மிக அருகிலிருந்து பார்த்த பலரில் கவிஞர் சித்தாந்தனும் ஒருவர். நேரடியாக போரில் பங்கேற்று அந்தக் காலத்தின் ஒரு சமூகத் தேவையை எதிர்கொண்டு தன்னாலான பங்களிப்புக்களை எத்தனையோ பேர் செய்துகொண்டிருக்கையில், கவிதை எழுதுவதை மட்டுமே ஒரு சமூகப் பங்களிப்பாக கற்பனை செய்து இயங்கியவர்களில் ஒருவர்தான் தம்பி சித்தாந்தன் எனப்பார்ப்பதா? வேறு கோணத்தில் நோக்குவதா? என்ற இன்றையக் கேள்வியின் சிக்கலிலிருந்து தப்பிக்க முடியாது என நினைக்கிறேன்.

போர் தீவிரமாக பற்றிக்கொண்டு ஒரு சமூகமே நிர்க்கதியாகி அலறிக்கொண்டிருக்கும் சூழலில், சரியோ தவறோ, அதிக உணர்ச்சிகொண்ட கவிஞர்கள் அனைவரும், அந்த சமூகத்தை எப்படியாவது காப்பாற்றும் பணியில் செத்து மடிந்திருப்பார்கள் என்றுதான் இறுதிப் போர்க்காலத்தில் நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், அதிசயம் என்னவென்றால், சாதாரணமான குடிமக்களும், பெண்களும், குழந்தைகளும், போரளிகளும் தான் களத்தில் அதிகம் மரணித்திருந்தனர். கவிஞர்கள் அனைவரும் உயிர்தப்பியிருந்தனர். இலக்கியவாதிகள் அனைவரும் எதுவும் நடக்காமல் பாதுகாப்பாக இருந்தனர். ஈழத்து இலக்கிய வெளியில் இந்த மாயம் எப்படி நடந்ததென்று இன்றும் கூட புரியவில்லை. இந்த போரின் கொடூரமான நிகழ்வுகளையும், நினைவில் ஆறாத்துயரங்களையும் பதிவு செய்து வைப்பதற்காக, பாடிப்பாடி நினைவுபடுத்துவதற்காக இந்த இலக்கியவாதிகளையும், கவிஞர்களையும் உயிர் பிழைக்க கடவுள் விட்டுவிட்டாரோ? என்ற சந்தேகமும் அடிக்கடி எழாமலில்லை. இந்தக் கேள்விகளும், விமர்சனங்களும் ஒரு புறம் இருக்க, கடந்த இருபது வருடகாலத்தில் போரும், அதன் முடிவும் அதை அருகில் எதிர்கொண்ட ஒரு சமூக மனிதன் தனக்குள்ளாக உணர்ந்தும், தவிர்த்தும், கடந்துவந்த வாழ்வின் தருணங்களை தகிக்கின்ற “தணற்காலமாக” நம்மிடம் கவிதைகளின் வழியாக கொண்டு சேர்ப்பிக்கிறார் என்றவகையில் முக்கியமானது என நினைக்கிறேன்.

தாயதி அநேகமாக ஒருவருடைய ஒரு புத்தகத்தை மாத்திரம்தான் பதிப்பிக்கும். அதுதான் அதன் தீர்க்கமான முடிவும் கூட. ஆனால், சித்தார்ந்தனின் இரண்டாவது நுாலை பதிப்பிக்க வேண்டிய நிலையை அவருடைய கவிதைகளே ஏற்படுத்தி விட்டது. இதை மற்றவர்களும் புரிந்துகொள்வார்கள் என தாயதி நம்புகின்றது.

கவிஞர் சித்தாந்தனின் “தணற்காலம்” தொகுப்பு வெளிவருகின்றது. தம்பி சித்தாந்தனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
“தணற்காலம்” – தாயதியின் 25ஆவது வெளியீடு.

-தில்லை
“தாயதி” சமூக செயலூக்கத்திற்கான முன்னோடி

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More