Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் வாழ்வெனும் தோணி | செ. சுதர்சன்

வாழ்வெனும் தோணி | செ. சுதர்சன்

2 minutes read
01.
கொஞ்சி மிதந்திடும் வெள்ளலை தாங்கிய
குமிழிகள் விளையாடும்! – அது
கோடிகள் தந்திடு கடல்மடி நாம்நிதம்
கொள்கிற கதைகூறும்
02.
பஞ்சினை ஒத்தவெண் மணலது பாயினில்
பகலவன் சிரிப்புறுவான்! – அவன்
பரவிய மீன்களின் பல்நிற மேனியில்
பளிச்சிடு கூத்திடுவான்!
03.
பஞ்சிகள் பஞ்செனப் பாய்ந்தநம்
பரவையின்
பாதைகள் யார் அறிவார்? – புயல்
பாவிய நள்ளிருள் பாழ்கடல் ஆடிய
பல்சமர் ஆர் உணர்வார்?
04.
அஞ்சிடு விழிதுயர் அக்கரை நின்றிடும்
அகமது யார் நினைவார்? – தினம்
ஆருயிர் சோர்ந்திட வாழ்வெனும் தோணிகள்
அலைவதை யார் தெரிவார்?
05.
உப்புறை காற்றினில் உறைந்திடு உண்மையும்
உலகதன் செவி விழுமே – எம்
உலவிய தோணிகள்; உறைவிடம்; காணிகள்
உருகிய கதை எழுமே!
06.
சப்பியே துப்பிடும் பகையவர் சாவெனும்
சன்னதம் கொண்டு நின்றார்! – பெரும்
சாவெனும் பாயினைத் தாய்மனை சாயவே
சத்தமாய் விரித்து நின்றார்!
07.
அப்பிய புகையுடன் தணலினை மூட்டியே
அரும்வலை எரித்து நின்றார்! – தினம்
ஆடியும் பாடியும் ஓட்டிய தோணிகள்
அனலிடை கருக வைத்தார்!
08.
தப்பியே ஓடிய வேளையில் எங்களின்
கால்களையும் பறித்தார்! – எமை
தாங்கிடும் அம்மனாம் சக்தியும் நின்றிடும்
தனியருள் மரம் தறித்தார்!
09.
வேட்டுகள் தீர்த்துமே வேய்ந்தனர் ஊரையும்
வேரினையும் பறித்தார் – புயல்
வென்ற எம் கைகளால் வேண்டியே சோறதை
உண்டிடும் நிலை கொடுத்தார்
10.
காட்டுரு மந்தையர் போலொரு கயவரின்
காலடிகள் எரிக..! – எம்
காலடி தேடியே சூரியப் பேரொளி
கமலம் என்றே விரிக..!
செ. சுதர்சன்
—– 22/10/2023 ——

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More