Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் அதிகம் பேசப்படும் புத்தகம்

அதிகம் பேசப்படும் புத்தகம்

5 minutes read

திருமணம் என்ற ‘வதை’ புரிபடுவதற்குரிய எந்த முகாந்திரமும் கொண்டிராத சிறுமி நுஜூத், பிஞ்சு மனதுக்கே உரிய விதமாக, சில ரொட்டித் துண்டுகளுக்காகப் பிச்சை எடுப்பதற்கு வற்புறுத்தும் தகப்பனை அன்பு செய்கிறாள். அந்த மனிதரில் எந்நேரமும் வீசும் புகையிலை நாற்றத்தைச் சகித்துக்கொள்கிறாள். அதே நேரம், தகப்பன் விரும்பக்கூடிய விதமாக நல்ல குட்டிப்பெண்ணாகத் தானில்லை என்பதையும் உணர்கிறாள். அவளுக்கிருந்த இந்தக் கூருணர்வே அவளை மீட்பை நோக்கி நகர்த்துகிறது. நீதிமன்றத்தின் வாசலைத் தொலைக்காட்சித் திரைகளில் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தவளை நீதிக்காக விரைந்தோட வைக்கிறது.

மின்சாரம் இல்லாமல், குழாய் நீர் வசதியில்லாமல் வாழ்ந்த கிராமத்து வாழ்வை விரும்பும் எளிய மனமும், நுரைத்துப் பொங்கிக் கிளம்பும் கடல் அலைகளில் விளையாடும் கனவுகள் மட்டுமே கொண்ட ஒரு தளிர் நுஜூத். வயதுக்கும், உடலுக்கும், மனதுக்கும் சகிக்காத துயரங்களே அவள் திருமண அனுபவங்களாகின்றன. ஆண்களின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு வாழப் பழகிவிட்ட அல்லது இதுதான் பெண்களுக்கு விதிக்கப்பட்டது, மாற்ற முடியாதது என்று நம்பிய பெண்கள் ஒரு நிலைக்கு மேல் தங்கள் அடையாளத்தை முழுவதும் இழந்து விடுகிறார்கள். அவர்களின் குரல்களிலும் செயல்களிலும் ஆண்களே பிரதியாகி வெளிப்படுகின்றார்கள். நுஜூத்தின் தாய் சொல்லும் மதியுரைகளும், திருமணமாகிச் சென்ற இடத்தில் மாமியாரும் மற்றப் பெண்களும் திணிக்கும் அறிவுரைகளும் ஆண்களின் ஆகிருதிகள்.

ஒவ்வோர் இரவும் காயப்பட்டுத் துன்புறும் தன் பிஞ்சு உடலுடன் சுருண்டு மடங்குகின்ற நுஜூத், இதுவரை சந்தித்த பெண்களைப் போல இந்த அனுபவங்களைச் சாதாரணம் என்றோ இயல்பானதென்றோ பெண்ணுக்கு விதிக்கப்பட்டதென்றோ எண்ணவில்லை. இந்த ‘வதை முகாமிலிருந்து’ தப்பிப்பதற்காக அவள் எடுத்துக்கொள்ளும் பிரயத்தனங்கள், பிடிவாதம் இவற்றால் கிடைக்கும் தண்டனைகளின் கனத்தை விடவும் கனமானது, தன்னைக் காப்பாற்ற முன் வராதவர்களின் மனங்கள் என்றுணர்கிறாள்.

பிஞ்சுக் கரங்களால் விடியற்காலையிலேயே சுத்தம் செய்ய எழுவது, குடும்ப உணவைத் தயாரிக்க நீர் இழுப்பது, கறுப்பு நிலக்கரி போன்ற தடித்த பானைகளைத் தேய்த்துத் துப்புரவாக்குவது என்று பணிச்சுமையால் மென்மையான பின்புறம் வளைந்து, உடல் மெலிந்து வாடி நிற்கும் மகளை விடுவிக்கத் தாய் எண்ணுகிறாளில்லை. ஒவ்வோர் இரவிலும் தன் பிஞ்சு மகள் இழுக்கும் சுமையால் ஆழமாகப் பதிந்திருக்கும் கவலையின் கோடுகளை அழிப்பதற்கு அவள் முயற்சிக்கிறாளில்லை. ஏனென்றால், இந்தச் சோதனைகள், வலிகள் அனைத்தும் அவளும் இழுத்த சுமைகள்தான். பெண்ணாகப்பட்டவள் இவற்றுடன் கலந்த இயற்கை எனவும் இந்த நெருப்பை ஒவ்வொரு பெண்ணும் கடந்தே ஆக வேண்டும் எனவும் நம்புகிறாள்.

ஆனால், தவ்ளாவின் கண்களுக்கோ நுஜூத்தின் பிரகாசம் ஒளிர்கிறது. சிறுமியின் விடுதலைத் தாகம் தணிவதற்குச் சாத்தியமான வாசல்கள் பற்றி தவ்ளா சொல்கிறாள். “நீ சொல்வதை யாருமே கேட்கவில்லை என்றால் நீ நேரடியாக நீதிமன்றத்திற்குப் போக வேண்டும்.” தவ்ளாவினால் மட்டும் இது எப்படி முடிகின்றது? அவளும் நுஜூத் வாழும் அதே புவியியல் எல்லைக்குள்தானே வாழ்கிறாள். நுஜூத்தின் தகப்பனுக்குத்தான் முன்னாள் மனைவியாக இருந்தாள். அங்குள்ள சாதாரணப் பெண்கள் இழுக்கும் சிலுவைகளை இழுத்துக் கொண்டிருப்பவள்தானே அவளும். வாழ்வின் காலத்தின் சரடுகளில் இயல்பாக்கப்பட்ட முடிச்சுகளிலிருந்து அவள் மட்டும் எப்படி அவிழ்ந்தாள்? அவிழ்தலின் சூட்சுமம் மிக எளிதாகப் புரிகிறது. தவ்ளா தனியாக வாழ்கின்றாள். கணவனால் கைவிடப்பட்ட பிறகு ஆண் அதிகாரத்திலிருந்து சுய கௌரவத்திற்கு அவளது சுமை தோள் மாறுகின்றது. தன் உழைப்பில் வாழக் கற்றுக்கொண்ட பிறகு சுயமரியாதையோடு நேர்கொண்ட பெண்ணாக நிமிர்கிறாள். சுயமியாக இருக்கும் வாழ்வுதான் அவளைச் சிந்திக்க மட்டுமல்ல, இன்னொருத்தியின் துயரத்தைக் கூர்திறனுடன் நோக்கி ரௌத்திரம் புகட்டும் நிலைக்கு உயர்த்துகிறது.

ஒவ்வொரு பெண்ணும் அவள் அரபு தேசத்தவளாக இருந்தாலும் கிழக்காசியாவைச் சேர்ந்தவளாக இருந்தாலும் தனது விடுதலைக்கான போராட்டத்தின் முதல் அடிகளை அவளே தான் எடுத்து வைக்க வேண்டிய கட்டமைப்புக்குள்ளே தான் இருக்கிறாள். நுஜூத் போல யாரோ ஒரு பெண் தினமும் கூண்டுகளைத் தகர்த்துக்கொண்டேதான் இருக்கிறாள்.

நம் தேசத்தில் இதுபோல எத்தனையோ பெண்கள். உலகளவில் குழந்தைத் திருமணம் நடைபெறும் நாடுகளில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவில், ‘லிட்டில் விடோ’ என்றே அறியப்பட்ட, தான் கற்ற கல்வி மூலம் தன்னைத்தானே மீட்டெடுத்து, அதே கல்வியின் மூலம் ஆயிரக்கணக்கான பெண்களை மீட்கும் கருவியாக 19-ஆம் நூற்றாண்டிலேயே செயல்பட்டவர் சகோதரி ஆர்.எஸ்.சுபலட்சுமி.

சிறுமி சுபலட்சுமிக்கு 1898-ஆம் வருடம் 11 வயதில் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த மூன்றே மாதங்களில் சுபலட்சுமியை மணம் முடித்த சிறுவன் இறந்து போனான். தலையை மழுங்கச் சிரைத்து, வெள்ளைச் சேலை உடுத்தி விதவைக் கோலத்திற்குள் திணிக்கப்பட்டு அக்ரஹாரத்திலுள்ள மற்றக் குழந்தைகளுடன் விளையாட்டில் இணைவதற்குள்ள அவள் பிராயத்து உரிமையே மறுக்கப்பட்ட சுபலட்சுமிதான் தென்னிந்தியாவின் முதல் பட்டதாரிப் பெண்ணாக 1911-ல் தன்னை நிலை நிறுத்தினார். வாழ்நாள் முழுவதும் தன்னைப்போல பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வுக்காகவும் கல்விக்காகவும் உழைத்தார்; சிந்தித்தார்.

மராத்தியப் பெண் எழுத்தாளர் பேபி காம்ளேவுக்கு 1942ல் திருமணமாகிறது. அப்போது அவருக்கு 13 வயதே. பத்துப் பிள்ளைகளையும் பெறுகிறார். இதற்குப் பின்பு அந்தக் காலத்து ஒடுக்கப்பட்ட ஒரு பெண் வாழ்வில் என்னத்தைச் சாதித்து விட முடியும்? ஆனால், ஒடுக்கப்பட்ட மஹர் சமூகத்தில் பிறந்த பேபி காம்ளேவுக்கோ வேறு சிந்தனைகள் இருந்தன. அவர் மற்ற பெண்களைப் போல வெறும் பிள்ளை பெறும் இயந்திரமாகத் தன்னை மாய்த்துக் கொள்ளவில்லை. அடிமைத்தனங்களுக்கு அடங்கிப் போகாமல் அவர் செய்த செயல்களே இன்று வரை அவரின் புகழை இந்திய நாடும், வெளிநாட்டு மக்களையும் பாட வைத்திருக்கிறது.

நம் காலத்து நுஜூத்தின் கனவும் இப்படியாகத்தான் இருக்கின்றது. தன்னைப்போல வேறு யாரும் பாதிக்கப்படக் கூடாதென்று எண்ணுகிறாள். தனது இளைய தங்கை தன்னைப் போல, இரவு மிருகத்திடம் இரையாகப் போய் விடாதபடி காப்பாற்றப்பட வேண்டும் என்று கைகோர்த்துக்கொண்டு திரிகிறாள். எல்லாவற்றையும் தன்னுடன் இணைத்து நோக்கும் போது எல்லாவற்றிற்கும் தானும் பொறுப்பாளியாக உணர்வது இயல்பாகிறது. சில பொறுப்புகளில் இருந்து விலகிச் செல்ல முடியாது. தனது விதி மற்றவர்களின் விதிகளுடன் பிணைக்கப் பட்டுள்ளதாகவே நுஜூத் நம்புகிறாள். ஒருவர் பிரபஞ்சத்தைச் சுமக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் அல்லது அதனால் நசுக்கப்படும் வலியை ஏற்றுக்கொள்ள வேண்டும். நுஜூத் பிரபஞ்சத்தைச் சுமக்கவே கற்றுக் கொள்கிறாள்.

உலகைத் தான் நேசிக்கும் அளவுக்கும், உலகு தன்னை நேசிக்கும் அளவுக்கும் வலுவாக வளர விரும்புகிறாள். காலி இடத்தில் உட்கார்ந்திருக்கும் மோசமான கொடூரங்களை அவள் பொருட்படுத்தவில்லை.

விவாகரத்துக்குப் பிறகு ‘ஏமன் டைம்ஸ்’ அலுவலகத்தில் அவளுக்காகவே விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் நுஜூத் கலந்து கொள்கிறாள். ‘நுஜூத் வெற்றி பெற்றுவிட்டாள்’ என்று வாழ்த்தும் பெருங்குரல்கள் கரகோசங்கள் ஆரவாரங்களுக்கு இடையே மெய் மறந்து நிற்கின்ற, பிறந்த தேதிகூடச் சரியாகத் தெரியாத அந்தச் சிறுமி விவாகரத்துப் பெற்ற அந்த நாளை, தனது பிறந்தநாளாக ஒப்புக் கொள்கிறாள். கடுமையான நீண்ட போராட்டங்களிலிருந்து மீளும் ஒவ்வொரு பெண்ணும் தன்னை மீட்டுருவாக்குவதிலிருந்தே வாழ்வின் அடுத்தக் கட்டத்தை எதிர்கொள்ளும் துணிவையும், சக்தியையும் புதுப்பித்துக் கொள்கிறார்கள்.

‘ஏதாவது நகரும் வரை எதுவும் நடக்காது’ என்பார் ஜெர்மானிய அறிவியல் தத்துவவாதியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். நுஜூத்துக்கும் இதுவே நடக்கிறது. அவள் விரும்பிய திசைக்குப் பிரபஞ்சம் வழி காட்டுகின்றது. அவளது பிஞ்சு மனதின் நம்பிக்கைகள் மழுங்கடிக்கப்படாதபடி அவளுக்கான எல்லா வாசல்களும் திறக்கின்றன. அவள் அடைய விரும்பிய நீதி அவள் எதிர்பாராத விடுதலையின் சிறகுகளை அவளுக்குப் பரிசளிக்கின்றது. அவள் கொஞ்சமும் எதிர்பாராத புகழும், பரிசில்களும் அவளது உறுதியான போராட்டத்தின் முடிவுகளாக மாறுகின்றன. தன் உடலையும் மனதையும் வருத்தியவர்களை மிக எளிதாக மன்னித்து மனுஷியாகிறாள்.

ஈரானில் வாழுகின்ற பிரெஞ்சுப் பத்திரிகையாளர் டெல்ஃபின் மினோவியுடன் இணைந்து நுஜூத் அலி எழுதியிருக்கும் ‘என் பெயர் நுஜூத், வயது 10, விவாகரத்து ஆகிவிட்டது!’ என்ற இந்தத் தன் வரலாற்று நூல், இதுவரை 38 மொழிகளில் வெளியாகி இருக்கின்றது. இப்போது 39வது மொழியாகத் தமிழ் மொழியில் வருவதால் கூடுதல் சிறப்பைப் பெறுகின்றது. இதனைத் தமிழில் மொழிபெயர்த்த சூ.ம.ஜெயசீலனுக்கும், வெளியிடும் ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ பதிப்பகத்துக்கும் பாராட்டுகள்.

  • இந்நூலுக்கு நான் எழுதிய அணிந்துரையிலிருந்து ஒரு பகுதி.

ஷர்மிளா செய்யத்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More