Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் ரஜினியின் நடிப்பில் பொதிந்திருக்கும் கலைத்தன்மை I தமிழ்பிரபா

ரஜினியின் நடிப்பில் பொதிந்திருக்கும் கலைத்தன்மை I தமிழ்பிரபா

2 minutes read

நண்பர்களுடனான மதுக்களிப்பில் நான் அதிகம் பேசுபவைகளுள் ஒன்று “ரஜினியின் நடிப்பில் பொதிந்திருக்கும் கலைத்தன்மை”.

மேற்கூரியது போன்ற கட்டுக்கோப்பான சொற்களில் பேச மாட்டேன் எனினும் வாய்க்குழைவில் இந்த சாரமே மிகுந்திருக்கும். மதுவின் இனிய மயக்கத்தில் நினைவுகளை, ஏக்கங்களை, மனிதர்களை, நாவல்களை, திரைப்படங்களை, ஆளுமைகளைக் குறித்துப் புலம்புவது என் களியாட்டத்தின் ஒருபகுதி. இதில் ரஜினி மெஜாரிட்டி. இனி அடுத்த முறை ரஜினி பற்றி உரையாட வருமாயின் ஆர், அபிலாஷ் எழுதிய “ரஜினிகாந்த்” என்னும் குறுநூலையும் துணைக்கு வைத்துக் கொள்வது உசிதம் என்று எண்ணுகிறேன்.

அபிலாஷ் எழுதி சமீபத்தில் வெளிவந்த ரஜினி பற்றிய கட்டுரைகளின் தொகுப்பான இதில், ரஜினியின் கதாப்பாத்திரம் பரவலாக கொண்டாடப்படதற்கு காரணம் அதிலுள்ள தொன்மம், அதை முன்வைத்து தத்துவப் பார்வை, ரஜினியின் உடல்மொழி அரசியல், ஆகியவை குறித்து எழுதியிருக்கிறார்.

உதாரணத்திற்கு சில கட்டுரைகளின் தலைப்புகளைத் தருகிறேன்.

ரஜினியும் கமலும்

ரஜினி எனும் தொன்மமும் இந்தியக் குடும்பமும்

அதிகாரத்தை எதிர்கொள்ளும் இருமுறைகள்; ரஜினியும் பூக்கோவும்.

ரஜினியின் சிகரெட் குறியீடு – கலகத்திலிருந்து சமகாலப் பெண்கள் வரை

ரஜினி நடிப்பின் மீதான ஒப்பீடுகளை ஆங்காங்கே வாசிக்கும்போது, நான் அடிக்கடி சொல்லிவரும் “நடிப்பு குறித்த கமல் ரசிகர்களின் பார்வை என்பது பழமைவாதிகளின் திண்ணைப்பேச்சுக்கு ஒப்பானது” என்கிற கருத்தின் மீது ஊக்கமருந்தை தெளித்தது போன்றிருந்தது.

விதந்தோதுதல் என்ற வகையில் இல்லாமல், ரஜினி எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு பின்னணியில் உள்ள பொதுமக்களின் உளவியல் மீதான விசாரணைகளும் கட்டுரையில் இடம் பெறுகின்றன.

ரஜினியின் கதாபாத்திரத் தன்மையை பௌத்த தத்துவத்துடன் இணைத்து முன் வைக்கும் பார்வை ஆழ்ந்த வாசிப்பின் விளைவென்றே கருதுகிறேன்.

தலைப்புக்கு வெளியே கட்டுரையாளர் ஆங்காங்கே பயணம் போனாலும் “எல்லாம் எதுக்கு நம்ம தலைவருக்காகத்தான” என்கிற பரிந்துணர்வு நூலாசிரியரின் மீது வராமலில்லை.

நூலின் இறுதிப் பகுதியில் ரஜினியின் அரசியல் தத்தளிப்புகள் குறித்து நேர்மையான அலசலும் இடம் பெற்றிருக்கின்றன.

ரஜினி ஏன் இந்த மண்ணுக்கானவர் அல்ல!

ரஜினி ஏன் கட்சி ஆரம்பிக்க மாட்டார்?

என்கிற இரு தலைப்பில் அமைந்த கட்டுரைகளின் அவதானிப்புகள் முக்கியமானவை.

நூலின் தலைப்பும் அட்டைப்படமும் புத்தகக் கண்காட்சிக்காக அவசரமாக சிசேரியன் செய்யப்பட்டிருக்கிறது என்பதை உணர முடிந்தது.

எம்.ஜி.ஆர் குறித்து எம்.எஸ் பாண்டியன் எழுதி, பூ. கோ. சரவணன் மொழிபெயர்த்த “பிம்பைச் சிறை” என்னும் நூலுக்கு இணையாக வர வேண்டிய வாய்ப்புகள் இருந்தும் அபிலாஷ் அதன் எல்லைகளை சுருக்கிக் கொண்டார் என்கிற வருத்தம் இருக்கிறது. பரவாயில்லை.

தலைவரின் அரசியல் திட்டங்கள் , அறிக்கைகள் அது இது என சில ஆண்டுகளாக குகை மனிதன் போல வாழ்ந்து வந்த என்போன்ற ரசிகர்கள் மொட்டை மாடியில் நின்று உரக்க வாசிக்க வேண்டிய நூல் இது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More