Sunday, May 12, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் புத்தக அறிமுகம் | தேவிபாரதியின் ‘நீர்வழிப்படூஉம்’

புத்தக அறிமுகம் | தேவிபாரதியின் ‘நீர்வழிப்படூஉம்’

1 minutes read

எழுத்தெனப்படுவது ஆளணி சேர்ப்பதனாலோ தன்னைத்தான் விதந்தோதுவதனாலோ நிலைபெறுவதில்லை; காலகாலத்திற்கும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளக்கூடிய பாத்திரங்கள், வடிவம், சொல்முறை, செறிவு, கதையை வளர்த்திச் செல்லும் பாங்கு, மொழிநடையினால் நிலைபெறுவது. ‘மோகமுள்’இன் யமுனாவும், ‘மஞ்சள் வெயில்’இன் ஜீவிதாவும், பா.கண்மணியின் ‘இடபம்’ நாவலின் பெயரிடப்படாத மையப்பாத்திரமும், ‘கன்னி’யின் சந்தனப்பாண்டியும் நம்மால் மறக்கப்படவியலாதவர்களாயிருப்பது மேற்குறித்த தன்மைகளாற்றான்.

அவ்வகையில், தன்னைக் குறித்த உப பிம்பங்களெதையும் வாசகர்களிடத்தில் கட்டியெழுப்பாமல், எழுத்தின் மூலமாக மட்டுமே தன்னிருப்பை அறியப்படுத்தும் தேவிபாரதியின் சிறுகதைகளும் நாவல்களும் கொண்டாடத்தக்கவை. ‘நட்ராஜ் மகராஜ்’, ‘நிழலின் தனிமை’நாவல்களையடுத்து வெளியான ‘நீர்வழிப்படூஉம்’அதனை உறுதிப்படுத்துகிறது. அழிந்துபட்ட ஒரு கிராமத்தின், நாவிதத்தைத் தொழிலாகக் கொண்ட மக்களின் கதை அது.

நாவல் நெடுகிலும் கதைசொல்லியாக ஒலிக்கும் குரல் தேவிபாரதியினுடயதே என்பதை, ‘என் தாயாரும் சிறிய தாயாரும் பெரியம்மாவின் மகள் காளியம்மா அக்காவும் அங்குதான் தங்கள் பிள்ளைப்பிராயங்களையும் பதின்பருவங்களையும் கழித்திருந்தார்கள். படாதபாடுபட்டு அவர்களை வளர்த்து ஆளாக்கியிருந்த எங்கள் பெரியம்மாவும் காரு மாமாவும் அவர்களைக் கட்டிக்கொடுத்து வெவ்வேறு ஊர்களுக்கு அனுப்பிவைத்துவிட்டு யாருமற்ற அந்த ஊரில் யாருமற்றவர்களாய் வாழ்ந்து தீர்த்தார்கள்’என்ற முன்னுரை வரிகளிலிருந்து அறியமுடிகிறது. நாவலில் மேற்குறித்தோர் அதே பெயர்களோடு பாத்திரங்களாக இடம்பெற்றிருக்கிறார்கள்.

கைவிடப்பட்ட கிராமங்கள் எப்போதும் எனக்கு நெருக்கமானவை. எனது சொந்தச் சனங்கள் போரினால் எதிர்கொண்ட இடர்பாடுகளையும் வலிந்த புலம்பெயர்தலையும் நினைவூட்டுபவை. உடையாம்பாளையம் என்ற அந்தக் கிராமத்தில் எஞ்சிவிட்ட முதியவர்களும் வளர்ப்புப் பிராணிகளும் மரம் செடிகொடிகளும் வெயிலும் இறந்தகாலத்தை உயிர்கொண்டெழ வைத்தன.

தேவிபாரதி, தமிழிலக்கியத்தில் அவரது தகுதிக்கேற்ப (தகுதியென்றால் என்னவென்பதைப் பிறிதொருநாள் உரையாடலாம்.)அறியப்படவில்லை என்பதே எனது கருத்தாகும்.

இருநூறு பக்கங்களே கொண்ட நாவல். மிகைவர்ணனைகளால் நீட்டி வளர்த்தப்படாத, சலிப்பூட்டாத எழுத்து. உண்மைக்கு நெருக்கமான தன்வரலாற்றுத் தன்மைகொண்டது ‘நீர்வழிப்படூஉம்’.

இதனையடுத்து வெளியான’நொய்யல்’ஐ இன்னும் வாசிக்கவில்லை. அந்நாவலும் நன்றாக இருப்பதாக நண்பர்களது பதிவுகளிலிருந்து அறியமுடிகிறது.

வெளியீடு:நற்றிணை
பக்கங்கள்:200
விலை:250 இந்திய ரூபாய்கள்

-தமிழ்நதி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More