நீண்ட நெடிய வருடங்களுக்கு பின் ஊருக்கு போன போது என் அப்பாவின் நண்பரை அந்த அந்தோனியார் கோவில் வாசலிலே கண்டேன் இளைத்திருந்த முகத்தோடு ஏதோ தேடியபடி நின்றார். என் முகத்தைப் பார்த்ததும் அவர் முகம் அடையாளம் கண்டது. எப்ப தம்பி ஊருக்கு வந்தனீர் என்றார். முப்பது வருடத்திற்கு முன் கண்ட முகம் இருந்தும் அப்படியே இருந்தது அந்த முறுக்கு மீசை மட்டும் .
அப்பாவோடு படித்த அந்த அழகிய நாட்களை சொல்லி சிரித்தாலும் அவர் முகத்தில் ஆயிரம் சோகங்கள். அன்று கண்ட முகம் போல் இன்று அவர் இல்லை அந்தச் சிரிப்பும் இல்லை. என் கையைப் பிடித்தபடி அழுதபடி சொன்னார் இறந்து போனவர்கள் போக தொலைந்து போனவர்களை தேடித் திரியும் ஊழித் தினங்களை எப்படி தம்பி மறக்க முடியும் என் இளைய மகனை தேடி அலைகிறேன் என்றார். மகனைத் தேடி அலைந்த களைப்பில் என் மனைவியும் போய் விட்டாள் நான் இப்போ தனியன் தம்பி தொலைந்ததொன்றை தேடி அலையும் ஆத்மா ஆகி விட்டேன்.
என் தங்கை ஒருத்தி கொஞ்சம் தொலைவில் இருக்கிறாள் அடிக்கடி வந்து முன்னம் என்னை பார்த்து ஆறுதல் சொல்லிப் போவாள் அவளால் கூட இப்போ வர முடியாது நான்கு பிள்ளைகளுடன் வாழ்கைச் செலவை கொண்ட போக தின்றாடுகிறாள் அத்தோடு அவளின் வருத்தம் வேற ஆதலால் அவளை கஸ்ரப்படுத்த எனக்கு விருப்பமே இல்லை. மூத்த மகனும் முதலே போய் விட்டான் இரண்டாம் கட்ட ஈழப் போரிலே என்றார்.
அறத்தோடும் தியாகத்தோடு வாழ்ந்த குடும்பம். என் நெஞ்சு அறையில் வார்த்தைகள் மௌனமாகி போகவே என் கையில் விழுந்த அவர் கண்ணீரில் அந்த வாழ்வின் வலிகள் எழுதியிருந்தது. என் பையில் இருந்த கொஞ்சக் காசை அவர் கையில் வைத்தேன் ஒரு கையால் கொடுத்ததை மறு கையால் அறியாத மனிதர் அவர் கொடுத்த கைகள் வேண்ட மறுத்தன. என்னால் ஒரு நேரமாவது சாப்பிட முடியும் தம்பி என்றார் இது இல்லாமல் எத்தனையோ ஜீவன் இங்குண்டு அவர்களுக்கு கொடுத்தால் நல்லதென்றார். ஏதோ ஒரு முகவரியை தந்து இந்தக் குடும்பம் தாயும் இரண்டு பெண் பிள்ளைகளுடன் இந்த இடத்தில் வாழ்கிறார்கள் மிகவும் வறிய குடும்பம் இந்தப் பிள்ளைகளின் படிப்புக்கு ஏதும் உதவ முடியும் என்றால் பெரும் புண்ணியம் தம்பி என்றார். எனக்கு ஞாபகம் இருக்கிறது அந்த மானிடத்தின் மறக்க முடியாத மனித நேயம் எத்தனையோ உதவிகளை எதையும் எதிர் பார்க்காமல் செய்துள்ளார். அன்பும் கருணையும் கொண்ட அழகானதோர் மனிதர் அவர்.
நான் விடை பெறும் வேளையிலே என் கையைய் பிடித்தபடி கண்டது நல்லது இல்லாதவனுக்கு உதவு துன்பமும் மகிழ்வும் மாறி மாறி வாழ்வில் வந்து தான் போகும். அன்பாய் இரு அந்த அன்பு தான் சிவம் அந்த மனிதத்தை தொலைத்து விடாதே என்றார். மீண்டும் ஏதோ ஒன்றை தேடியபடி அருகில் இருந்த அந்த அந்தோனியார் ஆலயத்தில் ஒரு மெழுகு திரியோடு போனார். அந்த ஆலய மணிக்குள் என்னையும் இருத்தி விட்டு அமைதியை வேண்டி நின்றார் அந்த அந்தோனியார் கோவில் வாசலிலே. இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது என் இதய அறைக்குள் அந்த ஆலய மணியும் அவர் கூறிய வார்த்தைகழும் அவரின் வலியும் வாழ்வும்.
பா.உதயன்
