முகமூடி மனிதன் | வில்லரசன் கவிதை

கழற்ற முடியாத படி
மனிதர்கள் முகமூடி
அணிந்திருந்த நாளில்
அவனிடம் ஓரே ஒரு
முகமூடி மட்டுமே
கைவசம் இருந்தது..

கோபக்காரன் என
பெயர் பொறிக்கப்பட்ட
அந்த முக மூடி
அவனை சீண்டுபவர்களிடம்
இருந்து கொஞ்ச நாள்
காப்பாற்றியது

நண்பர்களும்
மனைவியும்
கூட அவன் முகமூடியை
அகற்றி
அவன் தூய முகத்தை தரிசிக்க
அச்சப் பட்டனர்..

சினத்தளும்புகளுடன்
திரியும் ஒரு நாளில்
பிறந்து சில மாதங்களே
ஆன மகளின்
முத்தத்தில் அவன் முக
மூடி கழன்றது..

என்ன ஆச்சரியம் !
இப்போது அவன் முதுகில்
முளைத்து இருந்தது
தன் மகளுக்கு பறக்க
கற்றுத்தர புதிய
இறக்கைகள்..

வில்லரசன்

ஆசிரியர்